ADVERTISEMENT

ஒரு உண்மையான கூட்டுச் சாதனை...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-8

09:31 AM Mar 13, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

விண்வெளிக்கு சோவியத் அனுப்பிய விண்கலம் கருங்கடல் கரையில் இறங்கிய போது நான் சோவியத் யூனியனில் இருந்தேன். புதிய வரலாறு படைத்த அந்த நாளில் நான் அங்கு இருந்ததை எனது அதிர்ஷ்டமாகத்தான் கருதுகிறேன்.

அந்த நாட்களில், நாம் மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்தோம், அதேநேரத்தில், நாம் நம்மைப் பாராட்டிக் கொள்கிற உணர்வுடன் இருந்தோம். உற்சாக அலை பெருக்கெடுத்தது. விழாக்கோலம் பூண்டிருந்த மாஸ்கோவின் வீதிகளில், செஞ்சதுக்கத்தில், விண்வெளி வீரர்களை வரவேற்கக் கூடியிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில், உற்சாகப் பெருவெள்ளம் கரைபுரண்டோடியது.

விண்வெளிக்கு சென்று திரும்பிய அந்த வீரர்கள், எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள், நான் அவர்களை எனது கண்களால் கண்டேன். நான் மக்களின் உணர்ச்சிப்பெருக்கிலும், மகிழ்ச்சியிலும் கலந்தேன். ஒட்டுமொத்தப் பூவுலகிலும் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வீதிகளை நனைத்த அந்த எல்லையற்ற மகிழ்ச்சிக் கடலில் நானும் ஒரு சிறு துளியாக உணர்ந்தேன்.

வரலாறு, பல தனிமனித சாகசங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் ஒரு போதும் இதுபோன்ற கூட்டுச் சாதனையைப் பார்த்தது இல்லை... மலர்களும், பதாகைகளுமாக நிறைந்திருந்த செஞ்சதுக்கத்தில், மக்களின் உற்சாக கரவொலிக்கு இடையே நாங்கள் காத்திருந்தபோது எனது லத்தீன் அமெரிக்க நண்பர்களில் ஒருவர், “இந்த தருணத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று என் காதுகளில் கிசுகிசுத்தார்.

“தெரியாத ஒரு உலகிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு, கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பானியத் துறைமுகத்தில் இறங்கியதுபோல, ஸ்பானிய மன்னர்களிடம் ஒரு மாபெரும் கண்டத்தை பரிசாக வழங்கியது போல இருக்கிறது” என்றேன்.

ஆனாலும், அந்த நிகழ்வை, அதைத் தாண்டியதாக உணர முடியவில்லை, கிறிஸ்டோபர் கொலம்பஸ் பெரும் அறிவாளி, ஒரு முழுமையான தனிநபர் சாகசக்காரர். அவர், தனது கடல் பயணத்தின்போது, ஒருபோதும் தனது சகமாலுமிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர் இரண்டு கப்பல்களில் பயணத்தை மேற்கொண்டார். ஒன்று, அவரது சக கடல் மாலுமிகளுக்கானது, மற்றொன்று அவருக்கானது. அதில்தான் அவர் உண்மைகளை எழுதினார். உலகத்தைச் சுற்றினார். மன்னர்களுக்கு தனது அறிவையும், அனுபவத்தையும் விற்றார். அவர் உண்மை நோக்கத்துடன் செல்வதற்கு முன்னால் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆனால், இன்றைக்கு விண்வெளிக்கு சென்று, ஆராய்ச்சியை முடித்து, விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவது என்பது இதுவரை எவரும் பார்த்திராத, கேட்டிராத, அறிந்திராத, அனைத்திலிருந்தும் மாறுபட்ட சாதனை. தனித்தனி விண்கலத்தில் பயணம் செய்தாலும் அந்த விண்வெளிவீரர்கள் இருவரும் தங்கள் விண்கலத்திலிருந்து பூமியோடு தொடர்பு கொண்டார்கள், மருத்துவர்களோடு பேசினார்கள், விஞ்ஞானிகளோடு விவாதித்தார்கள், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டார்கள், சக்திமிக்க இந்த வீரர்கள் அனைவரும் ஒரே குழுவாக விண்வெளியில் பயணம் செய்தனர். ஒவ்வொரு விண்வெளி வீரரின் எண்ணங்களும் மற்றவருக்கு தெரிந்திருந்தது. மக்களுக்கும் தெரிந்திருந்தது. இப்பூவுலகம் முழுவதும் அவர்களின் இதயத்தை அறிந்திருந்தது. இந்த விண்வெளி இரட்டையர்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டனர், தங்களது சகோதர உணர்வை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இருவரும் ஒரே பாடலை பாடினர். விண்வெளியிலிருந்து பாடப்பட்ட இந்த சேர்ந்திசை முதன்முதலாக உலகெங்கும் ஒலிபரப்பப்பட்டது.

இப்படியாக ஒட்டுமொத்த சோவியத் சமூகத்தின் உணர்வாக ஒரு கூட்டு செயலாக அனைத்தும் அமைந்தன. இந்த சிந்தனைகள் சோவியத் அரசு உருவான காலத்திலிருந்தே அல்லது சமூக வளர்ச்சியின் விதிகளை கார்ல்மார்க்ஸ் கண்டுபிடித்த காலத்திலிருந்தேகூட உருவாகிவிட்டன.

அதனால்தான் இந்த பெரும் கூட்டத்திற்கு இடையே விண்வெளி வீரர்களுக்காக காத்திருக்கும் மக்களின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதாநாயகர்கள் வந்துவிட்டார்கள். பிரதமர் குருசேவுடன் அவர்கள் நடந்து வருகிறார்கள். அவர்களது குடும்பத்தினரும் அருகில் இருக்கிறார்கள். நானும் இந்த அற்புதமான நிகழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன், லட்சோபலட்சம் இதயங்களின் மகிழ்ச்சிக்கடலில், அவர்களது உற்சாக முகங்களைப் பார்த்து நானும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு சந்தேகமேயில்லை நாங்கள் வரலாற்றில் இடம்பெறப்போகிற ஒரு அசாத்தியமான நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். அங்கே, மேடையில் சோவியத் யூனியனின் ஹீரோ என்ற விருதினை இரண்டு மனிதர்கள் பெறுகிறார்கள். சோவியத் யூனியன் இவர்களை கதாநாயகர்களாக உயர்த்திக் காண்பித்தது மிகவும் இயல்பானதே.

அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு தங்களது மகத்தான கண்டுபிடிப்புகளை விற்பதற்காக அலைந்து திரிந்த சாகசகாரர்கள் அல்ல. அதற்கு மாறாக, சோவியத் விஞ்ஞானத்தின் மற்றுமொரு சாதனையை செயல்படுத்திக் காட்டியவர்கள். இந்த இரண்டு எளிய மனிதர்களின் அறிவுப்பூர்வமான சாதனை, தங்களது மக்களுக்கு அவர்கள் அளித்த மிகப்பெரிய கொடை. ஆனால் அதே நேரத்தில் அது எளிமையானது, மகத்துவமிக்கது.

இந்தச் சாதனைகள் உறுதியாக மற்றவர்களால் பின்பற்றப்படும். நாம் படிப்படியாக அண்டவெளியின் பெரும் ரகசியங்களை, கோள்களின் மர்மங்களை உலகிற்கு வெளிப்படுத்துவோம். நாம் சிறுவர்களாய் இருக்கும் போதிலிருந்தே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிற, விண்வெளியில் கண்சிமிட்டுகிற கோள்களைப் பற்றி உண்மைகளை அறிவோம். பூமியில் அமைதி என்கிற ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும் விதத்திலும் நமது விண்வெளி வீரர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நட்சத்திரங்கள் மிகுந்த விண்வெளியிலிருந்து பார்க்கும்பொழுது மனிதநேயம் உயர்ந்து நிற்கிறபோது, நாடுகள் தங்களுக்குள் போர்களை நடத்துவது சரியானதா? மனித உறவுகளை மறுபடியும் புதுப்பிக்க நாம் வழிகாண வேண்டாமா? இந்த இரண்டு விண்வெளி வீரர்களின் பயணம் என்பது இதயப்பூர்வமான நட்புறவை வளர்ப்பதற்கான ஒரு குறியீடு. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் இன்னும் தொடருமென நம்பும் நிலையில் அவற்றை தவறாக சித்தரிக்கலாமா?

ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்யலாம். முதலாளித்துவமானது, இன்னும் சக்திவாய்ந்த நிலையில் உள்ள தனது ஆயுதங்களோடு, வெகு மக்களின் மனநிலையை நஞ்சாக்குகிறது. எனினும், இப்புவியை சுற்றுகிற பயணம், விண்வெளியை வட்டமிடுகிற பயணம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு வெளிச்சத்தை அளிக்கிறது. இதில் சில மனிதர்கள் உண்மை அர்த்தங்களை திரித்து எழுத முயற்சிக்கிறார்கள். அதில் அர்த்தமில்லை.

வெகுதொலைவில் உள்ள இதர உலகங்களில் வாழும் மனிதர்களோடு நமது கோள்களைப் பற்றி ஒப்பீடுசெய்து பேசும் காலம் ஒருநாள் வரும். அது ஒரு புதிய உலகம் சார்ந்த தேசபக்தி என்ற அடையாளத்தை உருவாக்கும். செவ்வாய்க் கோளைச் சேர்ந்த மனிதர்கள் நமக்கு தங்களது கோளில் ஓடும் கால்வாய்களைப் பற்றி சொல்வார்கள்.

கானிஸ் மேஜர் என்ற நட்சத்திர கூட்டத்தில் பிரகாசமாக ஜொலிக்கும் சிரியஸ் என்ற நட்சத்திர கோளை சேர்ந்தவர்கள் தங்களது வயலெட் நிற பனிக்கட்டிகளைப் பற்றி நம்மிடம் கூறுவார்கள். அப்போது நாம் மிகவும் பெருமிதத்துடன் நமது கோளைப் பற்றி சொல்வோம். அந்த நேரத்தில் இப்பூவுலகம் அனைத்து மனிதர்களின் மாபெரும் வீடாக இருக்கும். எப்போதையும் விட அதிகமாக பூமியின் அழகை நாம் நேசிப்போம்.


ஆனால், சோவியத் மக்கள் எனது தலைமுறைக்கு இரண்டு விலைமதிப்பற்ற நிகிழ்வுகளை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது. முதலாவது, அக்டோபர் புரட்சி, நமது புவிக்கோளத்தின் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு புதிய வெளிச்சத்தை பாய்ச்சியது. 1917க்கு முன்பு கலைப்பணிகள் இந்த உலகின் தீயசக்திகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தின. மனிதன், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தனது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் முதலாம் உலகப்போரை நடத்தியதன் மூலம் மண்ணோடு மண்ணாக புதைத்து அழித்தான். ஆனால், அனைத்து மனிதகுலத்திற்கும் வாழ்வையும் வளத்தையும் உருவாக்குகிற புதிய வாய்ப்புகளை திறந்து வைப்பதில் அக்டோபர் புரட்சி மகத்தான பங்கினை வகித்தது.

இரண்டாவது அற்புத நிகழ்வு, இந்த விண்வெளி வீரர்களின் பயணம். முதன்முதலில் நடந்திருக்கிறது, இது ஒரு மாபெரும் சோசலிச அரசின் இருப்பை, இப்பூவுலகத்திற்கு வெளிப்படுத்துகிறது. சோசலிசம் என்ற மரம் அற்புதமான கனிகளை ஈந்திருக்கிறது. இந்த சோசலிஸ்ட் அரசு இல்லாமல், அறிவியலை முன்னேற்றுவதற்கான அதன் சீரிய முயற்சி நடந்திராமல் இன்றைக்கு இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

சோவியத் அரசு நமது சின்னஞ்சிறிய புவிக்கோளத்தைப் பற்றி ஆராயவும் நமது பூவுலகின் வாழ்க்கையைப் பற்றி ஆராயவும் இரண்டு இளம் மனிதர்களை விண்ணுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த விண்வெளி வீரர்கள் அமைதியின் தூதுவர்கள் என்பதை ஒவ்வொருவருக்கும் உரக்கச் சொல்வோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நான் இழிவான விசயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. எனினும் சில நாடுகளைப் பற்றி, பிற நாடுகளை தங்களுக்காக வேலைவாங்குகிற சில நாடுகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. பலவீனமான நாடுகளை இரக்கமே இல்லாமல் சுரண்டுகிற, தங்களது ஏகாதிபத்திய நலனை பெருக்கிக்கொள்ள சிறிய நாடுகளை நிர்ப்பந்திக்கிற கொடுமைகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

சோவியத் யூனியனைப் பொறுத்தவரையில், அது, தனது அதிகாரத்தை, மனிதன் மேலும் மேலும் உயரே செல்வதற்கான வழிகளில் பயன்படுத்துகிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக இதை செய்கிறது.

இந்த இரண்டு சோவியத் விண்வெளி வீரர்களின் பயணமானது மனிதகுல வரலாற்றில் புதிய அத்தியாயங்களை திறந்திருக்கிறது. அவர்கள் சோவியத் யூனியனின் ஹீரோக்கள் மட்டுமல்ல. அனைத்து நாடுகளின், அனைத்து மக்களின் நாயகர்களும் கூட. அவர்கள் தங்களது விண்வெளி பயணத்தின்போது, இந்த உலகத்தை சோவியத் யூனியன் என்ற பதாகையின் கீழ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவையும் முன்னேற்றத்தையும் முன்வைத்தே சென்றனர். அவர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிவிட்டார்கள், அவர்களை இந்த உலகமே மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

பிராவ்தா

ஆகஸ்ட் 20, 1962

முந்தைய பகுதி:

விண்வெளியை வென்றவர்கள்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-7

அடுத்த பகுதி:


கவிஞர்களும் மக்கள் போராட்டங்களும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 9

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT