Skip to main content

சோவியத் யூனியனின் ஞானம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 21.

சிலி பல்கலைக்கழகத்தின் கவுரவமிக்க அந்த ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று நான் பேசிக் கொண்டிருந்தேன். சிலி தேசத்தின் முற்காலத்து அறிவியல் மற்றும் கலாச்சார வளர்ச்சியின் பாரம்பரியமான மையத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், சில ஆச்சரியமான முகங்களை அப்போது நான் பார்த்தேன்.

 

 

thodargal paththirikaiyalar pablo neruda part 21

 

 

ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும் நிக்கோலஸ் கில்லனை வாழ்த்துவதற்காக காத்திருந்தார்கள். கியூபா நாட்டைச் கவிஞன் எங்களது நாட்டிற்கு மீண்டும் வந்திருந்தார். இந்த முறை ஜூலை 26-ம் தேதி கியூபா புரட்சியை கொண்டாடுவதற்காக அவர் வந்திருந்தார்.

 

எப்போதும் போல பொதுமக்கள் நிக்கோலஸ் கில்லனின் ஒவ்வொரு வார்த்தையையும், அவரது கவிதையின் வாசிப்பையும் கேட்டு உற்சாகமாக கைதட்டிய வண்ணம் இருந்தனர். கியூபாவையும் அவரையும் அவர்கள் வாழ்த்தினர். கில்லன் தனது கவிதைகளை எவரோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு கம்பீரத்துடன் பாடிக் கொண்டிருந்தார். சிலி கலாச்சார மையத்தில் இதுவரை கேட்டிராத அளவிற்கு கைதட்டல் மழையில் அவர் நனைந்து கொண்டிருந்தார். கில்லன், மார்ட்டி மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் அந்த சொந்தத் தீவில் இந்த கைதட்டல் எதிரொலித்திருக்கும்.

 

எதிர்பாராத விதமாக அந்த உற்சாக மழையில் நானும் வரவேற்கப்பட்டேன். பார்வையாளர்கள் எழுந்து நின்று தங்களது கைகளை தட்டினர். என்னை புகழ்ந்தனர். அவர்களது கண்களில் கண்ணீரோடும் இதயங்கள் முழுவதும் நம்பிக்கையோடும் என்னை வாழ்த்தினார்கள்.

 

 

thodargal paththirikaiyalar pablo neruda part 21

 

உண்மையில் கியூப கவிஞருக்கே அந்த புகழுரைகள் சொந்தம். அன்றைய தினத்தின் கடைசிச் செய்தியை நான் உருவாக்கினேன். மாஸ்கோ பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் அணுசக்தி சோதனைகளை தடை செய்வதற்கான இறுதித் தீர்மானத்தை நிறைவேற்றியது தொடர்பாக மூன்று மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

 

அது ஒரு செய்தி துணுக்கு, அந்த செய்தியே எனக்கு அந்த உற்சாக வரவேற்பை அளிக்க காரணமாக அமைந்தது. அந்த வரவேற்பு அமைதிக்காக மக்கள் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சி மிகத் தொலைவில் இருக்கிற மாஸ்கோவுடன் எங்களது உற்சாகத்தை இணைத்த ஒரு மந்திரக் கவிதையாக இருந்தது.

 

பின்னர், அமெரிக்க அணுசக்தி சோதனைகள் தென் அமெரிக்க கடற்கரைகளில் நடத்தப்பட்டது. எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்து வளர்ந்தது. பலரும், அந்த பிரமாண்டமான பெருங்கடலில் ஒரு சிறிய தீவில்தானே நடக்கிறது என்று கருதினார்கள். ஆனால் நான் லட்சக்கணக்கான லத்தீன் அமெரிக்க மக்களைப் போல பசிபிக் கடலோரத்தில் வசித்துக் கொண்டிருந்தேன். எனது நாட்டின் கப்பல்கள் அந்தப் பெருங்கடலை தாண்டி செல்பவை. சிலி தேசத்து மீனவர்கள் அந்தக் கடலில்தான் தங்களது உணவுப் பொருளை பெருமளவில் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் அந்த எல்லையற்ற பெருங்கடலை பார்க்கிறேன். இந்தப் புவிக்கோளத்தில் மிக நீளமான கடல் வழியைக் கொண்டிருக்கிற பெருங்கடல் அது. ஏற்கெனவே ஒருவரையொருவர் சந்தித்திராத, நாடுகளை இணைக்கிற வழியாக, புரிந்துணர்வையும், வளர்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள உதவுகிற வழியாக நான் கருதுகிறேன்.

 

அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் என்ற நாசகர காளான்கள், பாதுகாப்பற்ற தீவுகளில் வளர்ந்துள்ளன. நீரை விஷமாக்குகின்றன. தட்பவெப்ப நிலையை மாற்றுகின்றன. கடற்கரைகளை மரணப் படுக்கைகளாக்குகின்றன.

 

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு அணுசக்தி பேரழிவை ஏற்படுத்துவதற்கான தயாரிப்புகள் குறித்து மனித குலம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்… அது விஷத்தன்மையையோ கதிர்வீச்சையோ ஏற்படுத்தாது என்றாலும் கூட. ஏனென்றால் மிக நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் நமது நம்பிக்கை என்பது ஒரு காலியான வீட்டிற்குள் கிடக்கும் பழைய நாற்காலியைப் போல மாறி விடக்கூடாது. மாஸ்கோ ஒப்பந்தம் பொதுப்புத்தியுடன் மிகுந்த விருப்பத்துடன், பரஸ்பரம் புரிந்துணர்வுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

அதனால்தான் அத்தகைய புகழுரையும் கைதட்டலும் அந்த அரங்கத்தை நிரப்பியது. அரங்கத்திற்கு வெளியேயும் கூட ஏராளமான மக்களின் தலைகள் தெரிந்தன. கில்லனின் ஈர்ப்புமிக்க கவிதைகள் அறிவு, அமைதியான வாழ்க்கை, முழு அமைதி ஆகிய மதிப்புமிக்க மனித குல மாண்புகளுக்கு மரியாதை செய்து கொண்டிருந்தது.

 

வீதிகளில் பெரும் மக்கள் கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சுரங்கத் தொழிலாளர்கள், படித்துக் கொண்டிருக்கிற இளைய தலைமுறையினர் ஆகியோரால் விடப்பட்ட ஏராளமான அறிக்கைகள் அவர்களது நம்பிக்கைகளை ஒரு போதும் சீர்குலைக்காது. இவை அனைத்தும் மாஸ்கோ ஒப்பந்தத்திற்கு எனது தேசத்தின் ஒப்புதலை காட்டின. இது எதிர்மனோபாவத்திற்கு எதிரான முதல் அடி ஆகும். அங்கே கூடியிருந்த பொதுமக்களின், பெரும் மரியாதைக்குரிய அந்த இடத்தில் ஒவ்வொருவரும் காட்டிய உணர்வு என்பது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

 

பனிப்போர் நமது ஆன்மாக்களை உறையச் செய்தது. மீண்டும் மகிழ்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையை நாம் இழந்திருந்தோம். ஆனால் தற்போது அந்த பயங்கர நினைவுகளை வெற்றி கொள்ளும் அளவிற்கு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, மீண்டும் அது சாத்தியம் என்பதைக் காட்டுகிறது. பரஸ்பரம் நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்கியிருக்கிறது.

அந்த உணர்வுகள் முற்றிலும் தனிப்பட்ட முறையிலானவை என்ற போதிலும் கூட, இப்போதே எனது எண்ணங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன். தொலைதூரத்தில் மாஸ்கோவில் வாழும் மக்களுக்கு எனது உற்சாகத்தை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், சோவியத் யூனியனின் மனிதநேயத்தை உலகுக்கு உணர்த்திய வரலாற்றுப்பூர்வமான இந்த உடன்பாட்டிற்கு இன்னும் பெரிய அளவில் மதிப்பளிக்க சித்தமாய் இருக்கிறேன்.

 

-பிராவ்தா, செப்டம்பர் 5, 1963.முந்தைய பகுதி:

இரத்தக் கறைகளும், வெறுப்பின் ஜுவாலைகளும்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 20


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்