ADVERTISEMENT

குழந்தைன்னு நினைச்சோம்; 39 வயசு குழந்தைன்னு நினைக்கல! ஒசிட்டா ஐஹீம் | வென்றோர் சொல் #34

06:54 PM Mar 20, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக அந்தச் சிறுவன்... இல்லை... இளைஞன் சினிமா கனவுகளோடு வாய்ப்புத் தேடி, பல தயாரிப்பாளர்களின் அலுவலக வாசற்படி ஏறி இறங்குகிறான். நடிகனாகத் திரையில் தோன்றுவதற்குத் தேவையான வசீகர முகமோ, உடல் கட்டமைப்போ, உயரமோ அவனிடம் கிடையாது. கையில் இருந்ததெல்லாம் சில மேடை நாடகங்களில் நடித்த அனுபவமும் அதற்குக் கிடைத்த கைத்தட்டல் தந்த உற்சாகத்தால் பிறப்பெடுத்த 'பெரிய நடிகனாக வேண்டும்' என்ற ஆசையுமே.

நெடும் போராட்டத்திற்குப் பிறகு 18 வயதில் முதல் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த தயாரான வேளையில், 'குழந்தை வேடத்தில் நடிக்க வேண்டும்' என்று கூறி அதிர்ச்சியளிக்கிறது, அந்தத் தயாரிப்பு நிறுவனம். சற்று யோசித்துப் பாருங்கள்... 18 வயது மதிக்கத்தக்க ஒர் இளைஞனை 7 வயது குழந்தையாக நடிக்க கேட்டுக்கொண்டால்... அதுவும் அவர் உடல்குறைபாட்டை காரணமாக வைத்து இவ்வாறு கூறினால் எப்படி இருக்கும்? நாமாக இருந்தால் அந்த இடத்தில் உடைந்து போயிருப்போம். உலக காமெடியன் என்ற அந்தஸ்துடன் இன்று இணைய உலகை கலக்கிக்கொண்டிருக்கும் ஒசிட்டா ஐஹீம் அந்தத் தருணத்தைக் கையாண்ட விதம் வேறு. கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாத ஒசிட்டா, அக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார். இந்த முடிவை ஒசிட்டா எப்படி எடுத்தார் என நமக்குள் பல கேள்விகள் எழலாம். அக்கேள்விகளுக்கெல்லாம் "உயரம் குறித்த எண்ணங்கள் வருத்தத்திற்கோ தாழ்வுமனப்பான்மைக்கோ என்னை ஒரு போதும் உள்ளாக்கியதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் குள்ளமானவன் என்று யாராவது கூறினால் நம்பமாட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் உயரமானவன்" என உதடுகள் வழியே தன்னம்பிக்கைப் பொங்கப்பொங்கப் பதிலளிக்கிறார், ஒசிட்டா ஐஹீம்.

நைஜீரிய நாட்டில் இமோ மாநிலத்தில் ஹெர்பர்ட் ஐஹீம் - அகஸ்டின் ஐஹீம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர், ஒசிட்டா ஐஹீம். குடும்பத்தில் மொத்தம் 5 குழந்தைகள். வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு காரணமாக ஒசிட்டாவின் வளர்ச்சி இளம் வயதிலேயே தடைபட்டு போனதால் அவர்கள் ஊரிலேயே ஒசிட்டாதான் குள்ளமான மனிதர். தந்தையின் பணி நிமித்தம் காரணமாக குடும்பம் அண்டை மாநிலத்திற்குக் குடிபெயர்கிறது. ஆரம்பக்காலங்களில் குள்ளன் என்ற கேலி சொற்கள் ஓசிட்டாவை அதிகம் காயப்படுத்தியதால் அவற்றை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். பின்னாட்களில் அது பழகிவிட, கிண்டல்களை இடதுகையால் புறந்தள்ளும் கலையையும் கற்றுக்கொண்டார். எப்போதும் துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குழந்தைகளை 'உசரத்துக்கு தக்க வேலையப் பாரு' எனச் சொல்வது வழக்கம். இந்த வசை மொழி ஒசிட்டாவிற்கும் கச்சிதமாகப் பொருந்தும். குடும்பத்திற்கான வருவாய் ஆதாரமாக இருந்த ஒசிட்டாவின் தந்தை எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். இது, ஒசிட்டாவை மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரையும் வெகுவாகப் பாதிக்கிறது. பின், ஐந்து குழந்தைகளையும் தனி ஆளாக நின்று வளர்த்து ஆளாக்குகிறார், ஒசிட்டாவின் தாயார். அவர்கள் பகுதியில் இருந்த தேவாலயங்களில் நடைபெறும் மேடை நாடகங்களில் தோன்றி நடிக்க ஆரம்பிக்கிறார் ஒசிட்டா. அதற்கு கிடைக்கும் கைத்தட்டல்கள் ஒசிட்டாவை மிகவும் உற்சாகப்படுத்த, நடிகராக வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் முளை விடுகிறது. அதன் நீட்சியாக எழுந்த உலகறிந்த சர்வதேச நடிகராக வேண்டும் என்ற எண்ணம் , உள்ளுக்குள் முளைவிட்ட ஆசைக்கு உரமிடுகிறது.

"வாழ்க்கையில் இவ்வளவு பெரிய உயரத்தைத் தொடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஒரு நடிகராக வேண்டும்... வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக இருந்தது. எங்கள் பகுதியில் இருந்த தேவாலயத்தில் மேடை நாடகங்களில் நடித்தபோது நிறைய கைத்தட்டல்கள் கிடைத்தன. அவை, சர்வதேச நடிகராக வேண்டும் என்ற ஆசையை எனக்குள் ஏற்படுத்தின. கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது எனக் கருதி குழந்தை வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். துறுதுறு குழந்தையாக நடித்தது எல்லாம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பே என்பதால் துல்லியமாக அதைச் செய்ய முடிந்தது. பின்னாட்களில் அதுவே எனக்கான அடையாளங்களாக மாறின. அப்போதுதான் நண்பர் சினேடுவைச் சந்தித்தேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் ஹிட்டாகின. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் எனக்கான சிறந்த ஒன்றை எப்போதும் வைத்திருப்பார் என்று நம்புவேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது".

நைஜீரிய நாட்டு காமெடியனாக இருந்த ஒசிட்டாவை, 2003-ஆம் ஆண்டு வெளியான 'அகி நா உக்வா' திரைப்படம் உலகக் காமெடியனாக மாற்றியது. அதில், அவர் ஏற்று நடித்திருந்த பாவ்பா கதாபாத்திரம் உலக காமெடி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் கேரக்டர். ஒசிட்டா என்ற பெயரை அறியாதவர்கள்கூட பாவ்பாவை அறிந்திருப்பர். இன்று சமூக வலைதளங்களில் நாம் பார்த்து ரசிக்கும் ஒசிட்டாவின் பெரும்பாலான காமெடிகள் மற்றும் மீம் டெம்ப்ளேட்டுகள் 'அகி நா உக்வா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளேயாகும்.

நைஜீரியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள ஒசிட்டா, 'இன்ஸ்பைர்ட் மூவ்மெண்ட் ஆஃப் ஆப்ரிக்கா' என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். திறமையான இளம் தலைமுறையினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகமும் உதவியும் அளிக்கக்கூடிய பெரும்பணியைச் செய்து வருகிறது, இந்த அமைப்பு. ஒசிட்டா செய்த, செய்துவரும் சாதனைகள் மற்றும் தொண்டுகளை விட அதிகம் ஆச்சரியம் அளிப்பது அவரது வயதே. சின்னக் குழந்தை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒசிட்டாவின் தற்போதைய வயது 39 என்றால் பலரும் நம்பமாட்டார்கள்.

குள்ளன் என்ற கேலி சொற்கள், நிராகரிப்பு, குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு என பின்புலமற்ற எளிய மனிதர்களை எளிதில் உடையச் செய்துவிடும் சந்தர்ப்பங்களையெல்லாம் தன்னம்பிக்கை கொண்டு கடந்து வந்ததே ஒசிட்டா ஐஹீமின் இந்த வெற்றிக்குக் காரணம்.

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

வில்லேஜ் குக்கிங் | வென்றோர் சொல் #33

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT