ADVERTISEMENT

“இலக்கு தெரியாமல் இருட்டை வெறித்துக் கொண்டு இருந்த நேரம்தான் என் கண்களில்.." - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #4

07:58 PM Jul 04, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நான் புதைந்து இருக்கும் நான்கு சுவர்களின் வெளுப்பிற்கு காரணம் என்ன முகப்பூச்சோ என்று யோசித்து, அதன் வெற்றுடலில் ஆங்காங்கே மச்சமாய் கரும்புள்ளிகளை எண்ணியபடியே இவைகள்தான் நான் வெறுப்பாய், சில சமயம் விருப்பமாய் ஏற்றுக்கொள்ளும் என் உலகம். கேயாஸ் தியரியின்படி, ஒழுங்கான ஒழுங்கற்ற தன்மைகளில் நான் சிக்கிவிட்டேன்.

இதே போல் என் மனச்சுவர்களும் சில நுட்பமான வன்முறை, வர்ணங்கள் குழைத்த ஓவியங்களை சுமந்ததை நான் உணர்ந்திருந்தேன். விஞ்ஞானத்தில் ஒரு கேள்வியுண்டு கமல்கூட தாசாவதாரத்தில் முதல்காட்சியில் “உட்காரும் பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்கும், சுனாமிக்கும் முடிச்சிப் போடுவாரே?” அப்படித்தான் சின்ன, சின்ன விளைவுகளின் ஒத்துழைப்பு வானுக்கும் பூமிக்குமான சதிராட்ட புயலின் உச்சத்தை உருவாக்கும் என்பதை கண்டுகொண்டேன். பாரம் சுமக்கும் ரெயில் பெட்டியாய் பல எண்ணங்கள் எனக்குள்? கத்தியென்று என்ற எழுத்தில் கூட குட்டி அறுவை சிகிச்சை செய்து பணப்பொட்டியை நிரப்பலாமா என்று யோசிக்கும் மருந்துகளின் சுவாசத்தை சுமக்கும் நான்கு சர்ஜன்கள் கொண்ட குடும்பத்தில் சிகரெட் பெட்டியில், Injurious to Health என்று சித்தெரும்பின் அணிவகுப்பைப் போல் ஒருவரி வருமே அதைப்போல்தான் விதிவிலக்காய் நானும் இவர்களின் கண்களுக்கு தெரியாமலேயே போனேன். என் இருப்பை நான் உணர்த்த செய்ததுதான் குற்றப்பட்டியலில் என்னை மனம் பிறண்டவள் என்று இங்கே அடைத்திருக்கிறது.

“ஒரு பேமஸ் சர்ஜனின் மகள் கத்தியைப் பிடிக்க பயப்படலாமா?!” என்றார் அப்பா. “லேப்பிலே கரப்பானை அறுக்கச் சொன்னா இவளே அறுந்த கொடியாட்டம் விழுந்தா?” நக்கலாய் உடன்பிறந்தவள். “குடும்பமே சர்ஜன். நீ மட்டும் வாத்திச்சி உத்தியோகம் பார்க்கணுன்னு வந்து நிக்கிறே.” என்று உறவினர்களின் உரசல்கள். வாசலில் வந்து வழிந்தோடும் மழை நீராய் மணாளன்கள். உதாசீனங்கள், உட்காருமிடம் 50 ரூபாய் ஆசிட்-க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கன்னத்துச் சதையைப் போல தீய்ந்துதான் போகும். அப்படித்தான் ஆனது என் மனமும்.

அதென்னவோ அந்த கூரிய உபகரணத்தைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு பயம் நெஞ்சைப் பிராண்டும் பூனையாகிப் போகிறது. விரக்தியின் உச்சத்தில் நான், அச்சிறு கூராயுதத்தில் என் மணிக்கட்டில் எக்ஸ் குறியிட்டைப் போடுவதற்குள் வியர்வையின் வழிசல்கள் உடலுக்குள் இருந்து உடையைத்தாண்டி வழிய, இலக்கு தெரியாமல் இருட்டை வெறித்துக் கொண்டு இருந்த நேரம்தான் அந்த பூனை என் கண்களில் பட்டது. அதன் பளப்பளத்த கண்கள் ‘வா வா’ என்று எனை அழைத்தது. என் அறை முழுவதும் அந்தப் பூனையின் ரோமமும் சிகப்புதிரவமும் நான் பயத்தை வென்றுவிட்டேன். ஆம் என் அறுவை சிகிச்சை தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பூனையின் உடல் கடைசியாய் ஒருமுறை துள்ளியெழுந்தபோது மரணம் அழகுதான்... மரணிக்கப்படும் போதும், மரணிக்கப்பட வைக்கும் போதும்.

மீன்தொட்டிக்குள் சுதந்திரமாய் சுற்றிக்கொண்டிருந்த வயிறு பெருத்திருந்த மீனுக்கு பிரசவம் பார்த்தபோது, காலைக்கட்டிக் கொண்டு சுற்றியலையும் பீட்டர் கூட தன் நன்றியை என் அறுவை சிகிச்சை அறைக்கு வந்து நிரூபித்தபோது, ஒரு தலைசிறந்த சர்ஜனாய் சாலையோர பரட்டைத்தலை பழுப்பிற நிற கண்கொண்ட சிறுவனின் உடலைக் கூறுபோட்டபோது ‘நானும் இப்போது ஒரு சர்ஜன்’ என்று கத்த தோன்றியது. எனக்குள் ஒரு சர்ஜன் சதாசர்வ நேரமும் தன் அறுவை சிகிச்சைக்கான உடையோடும், உடைமைகளோடும் தயாராய் இருக்க ஆரம்பித்தாள். வெள்ளைக் கோட்டுக்குள் ஒளிந்து கொண்டு கறுப்பு ஓநாயைப் போல அந்த மருத்துவமனையின் வராண்டாவில் என் உபகரணங்களோடு நான் நடந்து கொண்டிருந்த சமயம், அம்மாவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி ‘எங்கிருக்கிறாய் ?!’ என்று... ‘நம் மருத்துவமனையில் தான். ஆபரேஷன் செய்யத் தயாராகிக் கொண்டு இருக்கிறேன்.’ என்று அனுப்பிவிட்டு அக்கறையாய் போனை கத்தரித்தேன். கடமை தவறாத சர்ஜனை அது தொந்தரவு செய்யக் கூடாது இல்லையா?!

அதன்பின் நடந்தவைகளை எல்லாம் நீங்கள் சின்னதிரையின் பிரேக்கிங் செய்திகளில் பார்த்திருப்பீர்களே, மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு நோயாளிகளைத் தாக்கிய பெண் என்று! அப்படி நான் யாரையும் ஒழுங்கற்றுத் தாக்கவில்லை, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு சென்று உடைகளற்ற அவர்களின் உறுப்புகளை பரிசோதித்து அதில் வழிந்தோடிய ரத்தத்தில் கால் பதித்து அவர்களின் கடைசி நிமிட அலறல்களை பதிவு செய்து கொண்டேன். மருத்துவ அறிக்கைகள் தயாரிக்க வேண்டுமே அதற்காகத்தான். ஒரு சர்ஜன் என்றும் பாராமல் விலங்கிட்டு இந்த சுவற்றிற்குள் அடைத்துவிட்டார்கள். எனக்குள் திறமையான ஒரு சர்ஜன் இன்னமும் ஒளிந்துகொண்டு இருக்கிறாள். நாளை உணவு தர வரும் அந்த கட்டையான சிப்பந்தி அறியாமல், எடுத்துவைத்த சிறு கத்தி என் கையில் காத்திருக்கிறது. அவனில் இருந்து ஆரம்பிக்கப்போகிறது மீண்டும் என் அறுவை சிகிச்சை அவதாரம். நீங்கள் பார்க்க ஆவலாய் இருக்கிறீர்கள்தானே !

முந்தைய பகுதியை படிக்க...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT