ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #41

03:43 PM Nov 29, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்ஸ்பெக்டர் கண்ணன் எட்டாம் வகுப்பு டைம் டேபிள் கேட்டதும் பிரின்சிபல் அங்கிருந்த பியூனிடம் சொல்லி அலுவலகப் பணியாளரிடம் இருந்து வாங்கிவரச் சொன்னார். சிறிது நேரம் அந்த இடத்தில் ஊமைப்படம் ஓடியது. பியூன் டைம் டேபிள் எடுத்து வந்து கொடுத்தார். கண்ணன் அதைப் படித்துப் பார்ப்பதற்குள் வியர்வை பெருகி சாதனாவிற்கு கர்ச்சீப்பே நனைந்துவிட்டது. இதைக் கவனித்துக்கொண்டிருந்த ராம், "இந்த விசாரணை முடியும்வரை நாமெல்லாம் கர்ச்சிப்புக்குப் பதில் துண்டைப் பயன்படுத்த வேண்டியதுதான்" என்று கவியின் காதருகே முணுமுணுத்தான்

கண்ணன் அந்த டைம்டேபிளைப் பிரித்துவைத்து, இந்திய வரைபடத்தில் இளவரசங்கோட்டையைத் தேடுவதுபோல் தேடிக்கொண்டிருந்தார். ஒருவழியாக சாதனா சொன்ன நேரத்தில் பி.இ.டி பிரியட்தான் காட்டியது.

"சரி...சரி.. அந்தப் பீரியட்தான் காட்டுது. ஏதோ ஒரு மாணவி பந்தை லேப் வாசலில் போட்டாள்ன்னு சொன்னீங்களே அந்த மாணவியை வரச் சொல்லுங்க" என்று கண்ணன் இன்னும் சந்தேகத்திலிருந்து கீழே இறங்காமலே கேட்டார்.

சாதனா பிரின்சிபல் வனிதாவைப் பார்த்தார். வனிதா தலையாட்டிய பின்னரே சாதனா பியூனிடம் சொல்லி எட்டாம் வகுப்பு ஏ பிரிவு மாணவியான ஈஸ்வரியை வரச்சொன்னார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் எஸ்.கே.எஸ். பக்கம் திரும்பி, “உதயச்சந்திரன் ஐ ஏ.எஸ். ஒருமுறை பேசும்போது, ‘ஆசிரியர்கள் அதிகாரிகளுக்குத் தலையாட்டும் பொம்மையாக இருக்கிறார்கள். சுயமாக சிந்திப்பதில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அதுபோலத்தான் இங்கே நடக்கிறது" என்று கிண்டலாகச் சொன்னார்.

வேறு வழியின்றி எஸ்.கே.எஸ். புன்னகைத்து வைத்தார். ஈஸ்வரி என்ற அந்த மாணவி வந்தாள். வரும்போதே வாயெல்லாம் பல்லாக எந்தக் கவலையும் அற்ற, கள்ளம் கபடமற்ற பருவத்தினள் என்பதை உணர்த்திக்கொண்டே வந்தாள். யாராவது ஒருவர் மட்டும் அங்கிருந்தால் வணக்கம் சொல்லியிருப்பாள். ஒட்டுமொத்த கல்விக் கூட்டமும் அங்கிருந்ததால் யாருக்கும் வணக்கம் சொல்லாமல் அமைதியாக வந்து நின்றாள்.

கண்களில் பயம் பிடில் வாசித்தது, தடதடவென உடல் நடுங்கி, அதற்கு தோழமை வாத்தியமாக தபேலாவை இசைத்தது. இதைக் கவனித்த இன்ஸ்பெக்டர் கண்ணன் அந்த மாணவியின் அருகில் சென்று அவள் கைகளை ஆறுதலாகப் பற்றி, "நீ எந்த வகுப்புமா படிக்கற ?" என்று குணமாகக் கேட்டார்.

"எய்ட்த்" என்று பதில் வந்தது.

"நீ நல்லா படிப்பியா.? "என்ற கேள்விக்கு மாணவி தலையைக் குனிந்து தரையைப் பார்த்தாள். அதன் அர்த்தம், கேள்வியே பிடிக்கவில்லை என்பதாகும்.

"சரி நல்லா விளையாடுவியா..?” என்று மாற்றிக் கேட்டார்.

டக்கென்று தலை நிமிர்ந்தது.

"ம்.. நல்லா விளையாடுவேன்" என்று துள்ளளுடன் சொன்னாள்.

லில்லி மேம் விபத்து நடந்த தினத்தை அவளிடம் சொல்லி...

"பாப்பா ... கிரவுண்ட் அந்தப் பக்கம் இருக்கு. நீ ஏன் லேப்புக்கு எதிரில் வந்து விளையாடின" என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

"சார் இரண்டு பந்துதான் இருந்தது. அதை நாங்கப் பிரிச்சி விளையாடுவோம். அப்படி விளையாடும்போது லேப்புக்கு எதிரில் வந்துட்டேன். அதைப் பார்த்ததும் சாதனா டீச்சர் அந்தப் பந்தை எடுத்து என் மேல போட்டுட்டு தலையிலேயே.. தலையிலேயே..” என்று இழுத்தாள்..

"தலையில் என்ன பண்ணாங்க" என்று விடாமல் கேட்டார் கண்ணன். ஈஸ்வரியின் கண் சாதனா பக்கமே இருந்தது, இதைப் பார்த்த கண்ணன், "டீச்சர் ஒன்னும் சொல்லமாட்டாங்கம்மா, நீ தைரியமா சொல்லும்மா" என்றார்.

"உங்களுக்கென்ன நீங்க சொல்லிட்டுப் போய்டுவீங்க, டீச்சர் ஏன் சொன்னன்னு அதுக்கு வேற அடிப்பாங்க இல்ல" என்று ஈஸ்வரி மனதிற்குள் நினைத்துக்கொண்டு மீண்டும் சாதனாவையே பார்த்தாள்.

"சொல்லு ஈசு" என்று சாதனா சொன்னதும்தான் ஈஸ்வரி சொன்னாள்.

"தலையிலேயே டங்குன்னு கொட்னாங்க சார்" என்று ஆதங்கமாய் சொன்னாள். சாதனாவின் முகம் இருண்டது.

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு அடிச்சா... இப்படித்தான் தோசையை திருப்பி போடுவா" என்று கவி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

"பள்ளியில் மாணவர்களை அடிக்கறீங்களா? இது வேற நடக்குதா?” என்று லேசான கண்டிப்புத்தொனியில் பேசிவிட்டு, ஈஸ்வரியிடம் "அந்த சமயத்தில் லில்லி டீச்சர் லேப் உள்ளே இருந்தாங்களா? வெளியில் இருந்தாங்களா? என்று கேட்டார்.

“வந்து.. வந்து..” தலையைச் சொறிந்தாள், “பி.இ.டி மிஸ் அடிச்சதும் நான் ஓடிட்டேன், கவனிக்கலையே” என்று அப்பாவியாய்ச் சொன்னாள்.

“சரி.. நீ கிளாஸ்சுக்குப் போம்மா..” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்,

"மிஸ் அப்ப நான் கிளாஸ்சுக்குப் போய்ட்டு அந்த அக்காவை வரச் சொல்லவா?” என்று பாதாளச் சரடை விசாரணைக் கிணற்றில் போட்டாள் ஈஸ்வரி.

"கவி... இந்தப் பொண்ணு வேலில போற பாம்பை வீட்டுக்குக் கூப்பிட்டு முட்டையும், பாலும் கொடுப்பா போலிருக்கே," என்று ராம் கிண்டலடித்தான்.

"எந்த.. அக்கா மா" என்று சாதனாவை கேட்டார்.

"நான் அன்னிக்கு ஓடும்போது, லேப் பக்கமா வந்த ஒரு அக்காவை இடிச்சிட்டு ஓடினேனே, அவங்களையும் விசாரணைக்கு வரச்சொல்லவா?" என்று ஈசு கேட்டாள்.

சாதனா கண்ணனைப் பார்த்தார். அந்தப் பார்வை "இப்பவே பி.பி. கிராஃப் எல்லாருக்கும் கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்கும் போய் போய் வருது, வேண்டாம் சார் விட்டுடுங்க" என்று கெஞ்சியது.

"பாப்பா.. அதெல்லாம் வேண்டாம் நீ கிளாசுக்குப் போம்மா", என்று இன்ஸ்பெக்டர் கண்ணன் சொன்னார்.

"கண்ணன்.. வாங்க நாம வேளச்சேரி வெட்டிங் பிரியாணியில் லஞ்ச் முடிச்சிட்டு வரலாம்" என்று எஸ்.கே.எஸ். அழைத்தார்.

"மனுசன் ஏற்கனவே கோழி மாதிரிதான் சுறுசுறுப்பாக கொத்திக்கிட்டிருக்காரு... இன்னும் கோழியே உள்ள போச்சுன்னா" என்று நினைத்துக்கொண்டாள் கவி.

"சரி லஞ்ச் முடிச்சிட்டு வரோம்" என்று மேல் மட்ட குழு கிளம்பியது.

"ஸ்.. அப்பாடா” என்று அங்கிருந்தவர்கள் விட்ட நிம்மதி பெருமூச்சில் டேபிள் மீது இருந்த டேபிள் வெயிட்டே கொஞ்சம் நகர்ந்தது.

"சாதனா.. லேப்பில் எப்படி விபத்து நடந்திருக்கும்" என்று பிரின்சிபால் வியப்பாக கேட்டார்.

"அதான் மேடம் எனக்கும் புரியலை" என்று சாதனா அதே ரியாக்சனைக் கொடுத்தார்.

"எனக்கு தலைவலிக்குது நீ கிளாசுக்குப் போ" என்று சாதனாவை அனுப்பிவிட்டு, தலையைப்பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் வனிதா.

"லில்லி இறந்தது தற்செயல் விபத்தா? திட்டமிட்ட விபத்தா? என்று புரியாமல் வனிதா குழம்பி சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே நாற்காலியில் சாய்ந்தார்.

"என்னங்க மேடம் உண்ட களைப்பா?” என்ற குரல் வனிதாவிற்கு கண்களைத் திறக்கவைத்தது. எதிரில் இன்ஸ்பெக்டர் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் அலறி அடித்து எழுந்தார்,

"சாரிங்க ..சார்" என்று பதறினாள்.

"சாப்டீங்களா சார்" என்று பொதுவாக ஒரு சாரைப்போட்டு வைத்தார் வனிதா. எல்லா சாரும் "எஸ்" என்று சொன்னார்கள்.

"மேடம்,.. இந்த லேப்புக்கு பொருள்களை வாங்குவீர்கள் இல்லையா? அந்த ஸ்டாக் லிஸ்ட்டும் பில் புக்கும் கொஞ்சம் கொடுங்க" என்று ஹோட்டலில் பில்லைக் கம்பியில் குத்துவது போல கேள்வி மேல் கேள்வியாக குத்திக்கொண்டிருந்தார் கண்ணன்.

அலுவலக அறையிலிருந்து தேடி எடுத்துவர அரைமணி நேரம் ஆனது. அதுவரை உலக அரசியலிலிருந்து கிராமத்துப் பஞ்சாயத்து அரசியல் வரை தறிபோட்டு நெய்துகொண்டிருந்தார்கள் எஸ்.கே.எஸ் ஸும் இன்ஸ்பெக்டரும்.

லேப் நோட்டு வந்தது. அதில் உள்ள பொருட்களின் லிஸ்டில் பிக்ரிக் அமிலம் இருக்கிறதா? என்று பார்த்தார். அவருக்கு என்ன சந்தேகம் என்றால், பிக்ரிக் அமிலம் லேப்பிலேயே இருந்ததா? இல்லை, விபத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அங்கு வைக்கப்பட்டதா?" என்ற எண்ணத்தில் நோட்டைப் பார்க்க ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.

"ஒரு ஆயுதத்தைக் கூர்மையாக்க வல்லது இன்னொரு ஆயுதமே" என்ற கண்ணதாசனின் வரிகள் கவிக்கு நினைவுக்கு வந்தது.

இங்கு இருவரின் புத்தி ஆயுதமாக செயல்படுகிறது. ஜெயிப்பது யார்? அனைவரின் மனமும் திக்திக் கேள்வியுடன்... காத்திருக்கிறது.

(திக் திக் தொடரும்)

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #40

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT