Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #40

 

marana muhurtham part 40

 

போலீஸ் ஜீப் அந்த இடத்தில் இருந்து கிளம்பிய போது, அங்கு இருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  அதே வேகத்தில் அவர்கள் அனைவரின் பார்வையும் ஹரிணியின் பக்கம் கூர்மையாகத் திரும்பியது. 

"கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு குரங்குக் குட்டி முறைத்துப்  பார்த்தாலே,  கை கால் எல்லாம் நமக்கு நடுங்கும். இப்ப ஒட்டுமொத்த வண்டலூர் ஜூவே  நம்ம  பக்கம் திரும்பி இருக்கே... என்னென்ன கேள்விகளைக் கேட்டு குடையப் போறாங்களோ?’ என்று  ஹரிணி மனதிற்குள் திகைத்து நின்ற நொடியில்தான், கிளம்பிப் போன போலீஸ் ஜீப், யு டேர்ன் அடித்துத் திரும்பி வந்தது. ஜீப் திரும்பி வருவதைப்  பார்த்ததும் ராம்.. கவி காதில் "சனி வக்கிர கதி அடைஞ்சி திரும்பி வருது கவி"  என்று மெல்லிய குரலில் சொன்னான்.

 

ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் நேராக விரைப்பு சிரைப்பாக எரிச்சலுடன் நின்றிருந்த பிரின்சிபாலிடம் சென்றார்.

"மேடம் நான் போன பிறகு  அந்த ஸ்டூடண்ட்ட மிரட்றதோ,  டி.சி கொடுத்திடுவேன்னு பயமுறுத்துறதோ வேண்டாம். அப்படி செஞ்சீங்கன்னா, கேசை வேற பக்கம் திசைமாத்த வேண்டியிருக்கும். புரிஞ்சிதா?”என்றவர், மீண்டும் ஏதோ நினைவு வந்தவராக, ”அந்த மாணவிக்கு ஸ்கூல் டெஸ்டிலும் சரியான மார்க்கக் கொடுத்துடுங்க. இல்லைன்னா, அது ஒரு வகையில் மேனேஜ்மெண்ட்டுக்கும் சிக்கலை உண்டாக்கும்" என்று எஸ்.கே.எஸ்.சைப் பார்த்து அழுத்தமாகச் சொன்னார்.

”சார், கவலைப்படாதீங்க நூத்துக்கு நூத்தம்பது மார்க்  போடுவாங்க சார். நான் பார்த்துக்கிறேன்" என்று கிண்டல் தொனியில் சொன்னான் ராம்.

 

அவனை முறைத்துப் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறினார் இன்ஸ்பெக்டர். மீண்டும் ஜீப்பில் கிளம்பியது
போலீஸ் குழு. கலைத்துவிட்ட தேன்கூடு போல இருந்த அந்த இடம், கொஞ்சமாக கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மாறியது. இதுதான் சான்ஸ் என்று  ஹரிணி தன் வகுப்பறை நோக்கி ஓடினாள்.

’சுருக்குக் கயிறு தொங்கிக்கிட்டிருக்கு. அது யார் கழுத்துக்குன்னு தெரியலை?’ என்று  ராம் நினைத்துக் கொண்டான்.

 

அன்று மாலை எல்லா செய்தி சேனலிலும் இதுதான் ஹாட் நியூஸ். "தனியார் பள்ளி ஆய்வகத்தில்  நடந்த விபத்தில் வேதியியல் ஆசிரியை உயிரிழப்பு...  நடந்தது என்ன?" என்ற தலைப்பை கையில் எடுத்துக்கொண்டு, 4 பேர், பிரபல தொலைக்காட்சி சேனலின் விவாத அரங்கிலும் உட்கார்ந்துவிட்டார்கள். வீட்டில் இருந்த கவியும் அதை கவனித்தாள்.

 

’எல்லாப் பிரச்சனையையும் விவாதிக்க, டி.வி. சேனல் ஆபீசிலேயே 24 மணி நேரமும், என்ன விவாதத்துக்குக் கிடைக்கிதுன்னு ஒரு டீம் உட்கார்ந்திருக்குமோ?’ என்று கவி நினைத்துக்கொண்டாள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், விபத்தை நேரில் பார்த்த ஒரு நபர் கூட அந்த விவாதத்தில் இல்லை.

 

சம்பந்தப்பட்ட ஆட்கள் இல்லாமலே ஆளாளுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் ”இப்படித்தான் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஒரு லேப் விபத்து நடந்தது” என்று புள்ளிவிவரத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு தொண்டை வறள விவாதித்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த கவி "தோனியின் கடைசி  மேட்ச் எப்போது? எங்கே? என்று கூட தெரிந்து விடும் போல இருக்கு. இவங்க கேள்விக்குத் தீர்வு கிடைக்காது போல’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

 

எஸ். கே. எஸ். அமைதியாக சோபாவில் கம்பீரமாக உட்கார்ந்து விவாத மேடையை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுடன் அமர்ந்திருந்த  ராம், ”கவி... சித்தப்பா உட்கார்ந்திருக்கிற போஸைப்  பார்த்தால், கண்ணதாசன் சொன்ன வசனம் நினைவுக்கு வருது,  வாழ்க்கையில் எல்லாம் நான் என்று நினைத்தால் அது ஆணவம். எதுவுமே இல்லை என்று நினைத்தால் அது ஞானம். இப்ப சித்தப்பா ஆணவத்தில் இருக்காரா? ஞானத்தில் இருக்காரா? கவி” என்று ஒரே நேரத்தில் இருவரையும் சீண்டினான்.

"டேய்... இப்ப நீ உதை படப் போறே"...என்று சித்தப்பா எஸ்.கே.எஸ். பொய்யாய் மிரட்டியதும், “ ஓகே.. ஓகே நீங்க நார்மலாத்தான் இருக்கீங்க. நான் கிளம்பறேன் காலையில் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் ராம்.

 

அப்போது அடுக்களையில் இருந்து வெளியே வந்த  கவியின் அம்மா திலகா, கணவர் எஸ்.கே.எஸ்.சைப் பார்த்து "ஏங்க, நம்ம ஸ்கூலுக்கு எதுவும் ஆபத்து இல்லையே.? உங்கள அரெஸ்ட் பண்ண மாட்டாங்கள்ல?" என்று  அப்பாவியாய் கேட்டாள்.

 

இதைக்கேட்டு பதட்டமான எஸ்.கே.எஸ்.  "ஏய் லூசு,. உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? கேக்கறா பாரு கேள்வி" என்று திட்டிவிட்டு, தன்  அறை நோக்கிச் சென்றார்.

 

ஆளுக்கு ஒரு அறையில் இருந்தார்கள்.  அந்த வீட்டில் பகலிலேயே நடுநிசி அமைதி நிலவியது. கவியின் மனது நிலை கொள்ளாமல் தவித்தது. லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிய இடம் தேடும் கரப்பான் பூச்சி மாதிரி, கவியின் மனது யாரிடம் நிம்மதி கிடைக்கும் என்று தேடி அலைந்தது. ஷாலுவிற்கு  ஃபோன் பண்ணி பேசலாமா? என்று போனை  எடுத்தாள். ’அவளாவது ஒழுங்காகப் படிக்கட்டும்’ என்று ஃபோன் பண்ணாமல் விட்டுவிட்டாள். 

 

தியா சேர்மனை பற்றி உளவியல் மருத்துவரிடம் சொன்ன விஷயங்களை, ராமிடம் சொல்லிவிடலாமா?என்று யோசித்தாள். அவன்தான் சித்தப்பா நல்லவர் என்று குத்தாட்டம் போடுகிறானே? அவன் எப்படி நம்புவான்? என்று அந்த எண்ணத்தையும் கைவிட்டாள். 

 

இரயில்  சத்தத்திற்கு நடுவிலும் உறங்கும் பயணிகளைப் போல, பலவித எண்ணங்களின் கூச்சலுக்கு இடையே உறங்கினாள் கவி.

 

தன்னை ஒளித்து வைத்த இரவிடம்  இருந்து தப்பிய சூரியன், கிழக்கிலிருந்து தலையைக் காட்டினான்.  ஃப்ரீ பையர் கேம் ஆடும் சிறுவர்களைப் போல இன்றைய விசாரணைக்காக காத்திருந்தார்கள் எஸ்கே.எஸ்.சும் கவியும் ராமும்.  இன்ஸ்பெக்டரின்  ஃபோனில் அழைப்பதாக சொல்லியிருந்தார். சரியாக, காலை பதினோரு மணிக்கு இன்ஸ்பெக்டர் ஃபோன் பண்ணினார்.

"குட் மார்னிங்  சார்" என்று  சொன்ன எஸ். கே. எஸ்.சின் குரல் சற்று இளைத்திருந்தது. 

"சரிங்க சார். இப்பவே வர்ரோம்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.

"என்னாச்சு சித்தப்பா?” என்று ராம் கேட்டான். "லேபுக்கு அனுப்பிய டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சாம். நம்மள ஸ்கூலுக்கு வரச்சொல்றார்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் எஸ் கே எஸ். அவர் கூடவே கவியும் ராமும் ஒட்டிக் கொண்டார்கள்.

 

பள்ளி வளாகத்தில் இவர்களுக்கு முன்பே இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்.   பிரின்சிபலிடம் ஏதோ   பேசிக்கொண்டிருந்தார்.

 

குழாயைத்  திறந்தால் தண்ணீர் கொட்டுவது போல, பிரின்சிபாலிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதற்கு தொடர்பில்லாத ஒன்பது விஷயங்களைப் பற்றி அவர் சொல்வார், 

”இன்ஸ்பெக்டர் அதை எல்லாம் கேட்டுவிட்டு  சங்கர்லால் மாதிரி க்ரைம் கதை எழுத ஆரம்பித்துவிட போறார்” என்று எஸ்.கே.எஸ்.சே ஜாலிமூடில் ராமிடம் சொன்னார். இவர்களைப் பார்த்ததும் "வாங்க  சார்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"சார் லேபில் இருந்து எடுத்து அனுப்பிய பொருள்களின் ரிசல்ட்  வந்திடுச்சி, அதில் பிக்ரிக் அமிலம்ன்னு ஒருவகை ஆசிட்  இருப்பதா சொல்லப்பட்டிருக்கு. ஸ்பாட்ல எடுக்கப்பட்ட கை ரேகை, லில்லியோட கைரேகை என்பது உறுதியாத் தெரியுது. இன்னும் சில ரேகைகள் தெளிவில்லாமல் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கு. விபத்துக்கு காரணம் பிக்ரிக் அமிலத்தை வெப்பப்படுத்தியதால் தான்னு ரிசல்ட் தெளிவா சொல்லுது."என்று இன்ஸ்பெக்டர் கூறியதும், அனைவரும் நுரையீரல் வெளியில் வந்து தொபுக்கென விழுந்துவிடுமோ என்ற நிலையில் காற்றை இழுத்துப் பிடித்து பெருமூச்சு விட்டனர்.

 

அதைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர், "அதற்குள்  நுரையீரலுக்கு வேலைகொடுத்தால்  எப்படி? இதயம் கோவிச்சுக்க போகுது. நான் +1, +2 புத்தகத்தைப் படிச்சு பார்த்துட்டேன். அதில் பிக்ரிக் அமிலத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்களே தவிர ரொம்ப விவரமாக கொடுக்கலை, இது எம்.எஸ்.சியில் தான் பிராக்டிகலாக வருகிறது. வெறும் தியரியா படிக்க வேண்டிய பிக்ரிக் அமிலம் எப்படி லேபுக்கு வந்தது?" என்று மைக்ரோ மில்லியன் அளவுக்கு நோண்டி, அந்தத் தண்ணீரில் கயிறு திரித்தார் இன்ஸ்பெக்டர். மீண்டும் அனைவரின் "    இதயத் துடிப்பும் லப்டப் லப்டப் என்று தாளகதி மாதிரி கேட்டது. அந்த அளவு அங்கே அமைதி நிலவியது.

"பிரின்சிபல்  மேடம், சாதனா உங்களிடம் வந்து லில்லியைப் பற்றி சொன்னதும் நீங்க என்ன பண்ணீங்க?" என்று கேட்க  பரமபதத்தில் பெரிய ஏணியில் இருந்து கீழே பாம்பு வாயில் விழுவது போல மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தது விசாரணை.

"லில்லி மேடத்தை  அழைச்சிட்டு வரச்சொன்னேன்" என்றார்.

"யார்  சென்று அழைத்தது"?

"சாதனாவே சென்றார்கள்". என்று  பிரின்சிபல்  பதற்றமில்லாமல்  பேசினார்.

"ஏன் பள்ளியில் பியூன் இல்லையா? என்று கேட்ட இன்ஸ்பெக்டருக்கு,

"பியூனிடம் நான் தான்  சர்க்குலர் நோட்டு கொடுத்து எல்லா ஆசிரியர்களிடமும் கையெழுத்து வாங்கிவரச் சொன்னேன்" என்றார் பிரின்சிபல்.

"சாதனா...நீங்க போகும் போது லில்லி என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க ? என்று போக்கு காட்டிய புயல் சாதனாவிடம் மையம் கொண்டது.

"லேபின் உள்ளே குடுவையில் எதையோ ஊற்றிக் கொண்டிருந்தார்கள்". நான் அழைத்ததும் வந்தார்கள். 


"அதென்ன எதையோ என்று சொல்லலாமா? அது எந்த நிறத்தில் இருந்தது தெரியுமா?"

" நான் லேப் வாசலில் இருந்தேன், குடுவைக்குள் என்ன இருந்தது என்று தெளிவாக தெரியலை" என்று நம்பகத்தன்மையுடன் சொன்னார் சாதனா.

" நீங்க இருவரும் ஒன்றாகத் தானே வந்தீங்க பிரின்சிபலைப் பார்க்க", "ஆமாம் ..சார்"  என்ற சாதனாவை  நம்பிக்கையில்லாமல் பார்த்துவிட்டு, பிரின்சிபல் பக்கம் திரும்பி, "சாதனா சொல்வது உண்மையா" என்றார்  இன்ஸ்பெக்டர்.

"இல்லைங்க சார்  சில நிமிடங்கள்  கழித்து தான்  "சாதனா  வந்தார்" என்ற  பிரின்சிபலை சாதனா குழப்பத்துடன் பார்த்தாள்.

"கிரவுண்டில் மாணவர்கள் விளையாடும் போது லேப் வாசலில் பந்து விழுந்தது. மாணவிகளை கண்டித்து அதை கொடுத்துவிட்டு வந்தேன் என்று அமைதியாக சொன்னார் சாதனா.

"எந்த வகுப்பு மாணவிகள்"

"எட்டாம் வகுப்பு A செக்ஷன் மாணவிகள் " என்று சாதனா சொன்னதும் , "பிரின்சிபல்  அந்த வகுப்பு டைம் டேபிளை எடுங்க " சாதனா சொன்னது உண்மையான்னு பார்க்கணும்" என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும், கிளைமாக்ஸ் சீனில் சீட்டு நுனியில் அமரும் ஆடியன்ஸ் போல அனைவரும் படபடப்புடன் காணப்பட்டனர்.

 

-தொடரும்

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #39