Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #12

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

marana muhurtham part 12

 

அத்தியாயம் - 12

 

பொதுவாக பொம்மைகள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; நேற்றைய குழந்தைகளான பெரியவர்களுக்கும்  கூட பிடிக்கும்.

’அப்படியிருக்க, இந்தப் பொம்மையிடம் இப்படி ஒரு ஆத்திரத்தை ஒருவர் காட்டியிருக்கிறார் என்றால்...’ 

 

பொம்மையின் கோலம், கவியை ரொம்பவே அதிரவைத்தது.

 

சத்யாவின் அம்மா பரிமளமோ... “அந்தப் பொம்மைன்னா சத்யாவிற்கு ரொம்பவும் பிடிக்கும். சாகற அன்னைக்கு சாயங்காலம், அந்தப் பொம்மையை வச்சிக்கிட்டு, புத்தி பேதலிச்ச மாதிரி, உங்கள எல்லாம் சும்மா விட மாட்டேன்னு பினாத்தியபடியே... அந்தப் பொம்மைய படாத பாடு படுத்திட்டா... அவள் கடைசியா வச்சிருந்த பொம்மைங்கிறதால, அதை ஷோ கேஸில் பொக்கிஷமா வச்சிருக்கேம்மா" என்று குரல் கம்மச் சொன்னார்.

 

’பொம்மை மீது சத்யா ஏன் இவ்வளவு வெறித்தனமான கோபத்தைக் காட்ட வேண்டும்? அவளின் ஆத்திரம் பொம்மை மீது இந்த அளவுக்கு இறங்கியிருக்கிறது என்றால், அவளுக்குள் எந்த அளவுக்கு வலி ஏறி இருக்க வேண்டும்? தியாவுக்கும் சத்யாவுக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள்தான் அரங்கேறியிருக்க வேண்டும்’  அவள் மனதிற்குள் எண்ணங்கள், ஒலிம்பிக்கில் ஓடின. 

 

மெல்ல எழுந்துபோய், ஷோகேஸில் இருந்த அந்தப் பொம்மையை எடுத்துப் பார்த்தாள்... அதன் முதுகுப்பக்கம் 3 என்ற எண், பொட்டு வைக்கும் சாந்தால் எழுதப்பட்டிருந்தது. 

 

கவி அதைக் கவனிப்பதைப் பார்த்த பரிமளம், “ஆமாம்மா பொம்மைல 3-ன்னு எழுதியிருக்கா... அதே மாதிரி... அவ தூக்குப் போட்டுக்கிட்ட அவ அறைச்சுவரிலும்... அன்னைக்கு கிறுக்குப் பிடிச்ச மாதிரி 3-ங்கிற நம்பரை நாலஞ்சு தடவை எழுதிவச்சிருந்தா... அதுக்குப் பக்கத்துலயே, மூணு பொம்மையையும் வரைஞ்சிருந்தா. அது ரொம்ப டிஸ்டர்ப் செய்ததால், அதன் மேல் எங்க அண்ணன் பெயிண்ட் பூசி அழிச்சிட்டார். அது என்ன மூணோ... மூணாவது நாள்தான் ஸ்கூலுக்குப் போகப் போறதில்லைங்கிறத அப்படி எழுதி வச்சாளோ என்னவோ...” என்று அவர் மேலும் கலங்கினார்.

 

அவரிடம் கேட்டுக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள் கவி. அங்கே இருந்த வார்ட்ரோபின் மீது, சத்யாவின் புகைப்படம் கவியைப் புன்னகையுடன் வரவேற்றது. அவள் படத்திற்கு வைக்கப்பட்டிருந்த சந்தனப் பொட்டு, அவள் கடந்தகாலமாக ஆகிவிட்டாள் என்பதை வருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருந்தன. 

 

பால் வடியும் முகம். கொஞ்சம் புஷ்டியான முகம். அவளிடம் அப்பாவித்தனமான அழகு வழிந்துகொண்டிருந்தது. விரைவாய்... விரயமாய்... வழிந்தோடிவிட்ட நதியாகிவிட்டாள் சத்யா...

 

அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் கொளுத்திய ஊதுபத்தி மணம், இன்னும் அறைக்குள் தவழ்ந்துகொண்டிருந்தது. 

 

பரிமளம் காட்டிய இடத்தில், பெயிண்ட் பூச்சுக்குள், சத்யா வரைந்த உருவ பொம்மைகள், லேசாகத் தெரிந்தன. கூர்ந்து கவனித்தாள். அரக்கத்தனமாகத் தோற்றம் காட்டிய அந்த மூன்று உருவங்களில், ஒன்றுக்கு மட்டும் தொங்கு மீசை இருந்தது. இன்னொரு உருவம் கண்ணாடி அணிந்திருந்தது. இன்னொன்று முன் தலையில் வழுக்கை வாங்கி இருந்தது.

 

திகைத்த கவி, அதை ஷார்ப்பாக தன் ஃபோனில் படம் எடுத்துக்கொண்டாள். டிஷ்யூ பேப்பருக்குள் சுற்றிவைத்த பொம்மைகள் போல், அந்த உருவங்கள் இருந்தன. 

 

மனதில் ஒருவித பதற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது. இந்தப் பொம்மைகள் யார்? இந்த மூன்று பொம்மையும் யார் யாரைக் குறிக்கிறது? மூன்று.. மூன்று...மூன்று... அந்த எண்களும் கவியை தொந்தரவு செய்தன. 

 

கைகளால் அந்த உருவங்களை வருடிப்பார்த்தால், அந்த சுவற்றில் செத்துப்போன சத்யாவின் இதயம் வலியில் துடிப்பது போல் தெரிந்தது.

 

சத்யாவுக்கு ஸ்கூலில் என்ன நடந்தது? அந்த மூன்று பொம்மையும் எதை, யாரைக் குறிக்கிறது? கண்ணாடி போட்ட உருவம்... தொங்கு மீசை உருவம்... முன் வழுக்கை உருவம்... இவை வெறும் பொம்மைகள்தானா? 

 

இல்லை, சம்பவத்தின் வில்லன்களா?’ அவள் இருக்கும் இடத்தை மறந்து தீவிரமாக யோசித்தாள். 

 

பரிமளமோ “பாரும்மா, உனக்குப் பச்சத் தண்ணி கூட கொடுக்காம, பேசிக்கிட்டு இருக்கேன். ஏம்மா, காபி சாப்பிடரியா? டீ யா?” என்றார். 

 

இந்தக் கேள்வியால் சிந்தனையிலிருந்து குதித்து, நிதானத்துக்கு வந்தாள் கவி. 

"அம்மா, ஒன்னும் வேண்டாம்மா. வரும்போதுதான் இன்னொரு ஃபிரெண்ட் வீட்ல காபி குடிச்சேன். சரிம்மா. எனக்கு  நேரமாகுது. இன்னொரு நாள் வர்றேன். தைரியமா இருங்க” என்றபடி, அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள் கவி.

 

அந்த வீட்டில் இருந்து அவள் வெளியே வந்ததும், எந்த வசதியும் இல்லாத பழைய பட்டன் டைப் நோக்கியா ஃபோனை எடுத்து, ஏதோ ஒரு எண்ணிற்கு ஃபோன் பண்ணினாள். சிறிது நேரம் பேசிய கவி, ஒரு ஆட்டோ பிடித்து ஃபீனிக்ஸ் மால் வாசலில் வந்திறங்கினாள்.

 

டிரெஸ்ஸிங் கோடிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் ஆட்டோவில் வந்திறங்கும் கவியை வினோதமாகப் பார்த்தனர், எண்ட்ரன்ஸில் இருந்த செக்யூரிட்டிகளில் சிலர். உள்ளே சென்றதும் அமைதியான இடத்தைத் தேடி நடந்தவள், அந்த ஹேண்ட் கிராஃப்ட் ஷோ ரூமிற்குள் சென்று, அங்கிருந்த பொருட்களைக் கண்களால் மேய்ந்தபடியே,  தன் கையில் இருந்த ஃபிட்னஸ் வாட்சைப் பார்த்தாள். அது சரியாக 1 மணியைக் காட்டியது. அவளின் ஹார்ட் பீட், கிடுகிடுவென ஏகத்துக்கும் எகிறியது. 

 

தன் ஐபோனை எடுத்து, அதன் ஸ்விட்ச்சை ஆன் பண்ணினாள். காரணம், அது ஆஃப் ஆகி இருந்தால், தன் அப்பாவோ அம்மாவோ கால் பண்ணினால், அவர்களுக்கு சந்தேகம் வருமே என்றுதான் அவள் அப்படிச் செய்தாள்.

 

புழுவுக்குக் காத்திருக்கும் மீனைப் போல, கவி ஃபோனை ஆன் பண்ணியதுமே, ஃபோன் ரிங்கியது. 

“ஹாய், கவி எங்கே இருக்கேம்மா?” என்று எதிர்முனையில் தூண்டில் போட்டவர், கவியின் அப்பா எஸ்.கே.எஸ்.தான் . அவரே, "ஹாய்.. டியர் எப்படி இருக்க? என்னடா ஒருநாள் முழுசும் ஃபோனே பண்ணலை? ஆர் யு ஓகே?” என்று கொஞ்சினார்.

"ஃபைன் டாடி. நேற்று  கூட மம்மி கிட்ட பேசினேனே" என மழுப்பினாள் கவி.

"என்னடா, குரல் ஒரு மாதிரி இருக்கு. நீ வேணா ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு சென்னைக்கு வந்துடேன்" என்று அவர் சொன்னதும், ஏ.சி.யிலும் அவளுக்கு குபீரென வியர்த்தது. 

’ஒருவேளை, டாடிக்கு நான் லீவு போட்டுட்டு சென்னை வந்தது தெரிந்திருக்குமோ?’ என நினைக்கும்போதே கவியின் நாக்கு பயத்தில் தாளம் போட்டது. கைகளும் கூட சேர்ந்துகொண்டு வெஸ்டர்ன் டான்ஸ் ஆடியது.

“எனக்கு ஒரு விசயம் தெரியனும்மா?” என்றார் எஸ்.கே.எஸ்.

கவி, சில்லிட்டுப் போனாள்.

 

(திக் திக் தொடரும்)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #11