Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #11

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

marana muhurtham part 11

 

அத்தியாயம் - 11

 

கரப்பான்பூச்சிக்கே பயப்படும் பெண்கள்தான், கார்கில் எல்லையிலும் இராணுவத்தில் இருக்கிறார்கள். கரப்பான்பூச்சியை அடித்தாலே ’ஐயோ பாவம்’ என்று துடிக்கும் கவி, இப்போது சத்யாவும் இறந்துவிட்டாள் என்பதை அறிந்ததும், தலையில் இடி, மின்னல் எல்லாம் கூட்டணி போட்டுக்கொண்டு தாக்கியதுபோல் அதிர்ந்துபோனாள். . 

 

தோழியின் மரண முடிச்சை அவிழ்க்க நினைப்பவள், அடுக்கடுக்கான சிக்கல்களையும் அதிர்ச்சிகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறாள்.

 

சர்க்கஸில் ’மரணக்கிணறு’ சாகசத்தைக் காட்டும் பைக் வீரர் மாதிரி, மரணத்தையே அவள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறாள்.

 

சத்யாவின் அம்மா  பரிமளம், கவியை... "உள்ளே வாம்மா" என்று மீண்டும் அழைத்தார். அவர் குரல் தழுதழுத்திருந்தது.

 

கவி தயங்கினாள். இருந்தபோதும் சத்யாவின் இறப்பைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல், அவள் தயக்கத்தை டவல் இல்லாமலேயே துடைத்தது.

 

சற்று தாராளமாக ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு ஒருக்களித்துத் திறந்த கதவின் வழியாக, அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் கவி.

 

உள்ளே வந்தவளின் கண்கள், அந்த ஹாலை இஞ்ச் பை இஞ்சாக அளந்தன. அது அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம் என்பதை, அந்த ஹாலின் நேர்த்தி மெளனமாய் உணர்த்தியது. அந்த வீட்டு ஹாலில் நேர் எதிராக ஷோகேஸ் தென்பட, அதில் அடுக்கப்பட்ட பொம்மைகள் அழகாய் அணிவகுத்திருந்தன. அதில் ஒரு பார்பி டால் பொம்மை மட்டும் ஏனோ கவியின் கண்களை உறுத்தியது.

 

புது வீடாயிற்றே என்ற சங்கோஜத்துடன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

 

“சும்மா உட்காரும்மா. நீ சத்யாவோட ஒன்னாப் படிச்சியாம்மா?” ஏற்கனவே கவி சொன்னதை சரியாகக் காதில் வாங்காமல், மீண்டும் கேள்வி எழுப்பினார் பரிமளம்.

 

புது வீடாயிற்றே என்ற சங்கோஜத்துடன் அங்கிருந்த ஷோபாவில் உட்கார்ந்தபடியே....

 

”ஆமாம்மா, டென்த்ல நுங்கம்பாக்கம் மெட்ரிக் ஸ்கூல்ல நான், சத்யா, அப்புறம் ஷாலுன்னு இன்னொரு ஃப்ரெண்டு... எல்லாரும் ஒன்னா படிச்சப்ப நெருக்கமாப் பழகினோம். ப்ளஸ் ஒன்ல சத்யா, வேளச்சேரி கவிநிலா மெட்ரிக் ஸ்கூல்ல சேர்ந்துட்டா. ஷாலு, தி.நகர்ல உள்ள ஒரு ஸ்கூல்ல சேர்ந்துட்டா. நான் ஒரு வருசம் ஃபாரின்ல இருந்துட்டு, மறுபடியும் நுங்கம்பாக்கம் ஸ்கூல்லயே கண்டினியூ பண்றேன். சத்யாவப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னுதான், ஆசையோட விசாரிக்க வந்தேன். ஆனா, அவ... இப்ப இல்லைன்னு தெரிஞ்சதும் இடிஞ்சி போய்ட்டேன்மா?” என்றாள் கவிநிலா. 

 

இதில் அவள் சத்யாவுடன் படித்தாகச் சொன்னதும், அவளுக்குத் தோழியாகக் காட்டிக்கொண்டதும், தான் வெளிநாட்டில் இருந்தததாகச் சொன்னதும் அக்மார்க் பொய்கள்.

 

”உன் வீடு எங்கம்மா இருக்கு?” என்று பரிமளா கேட்க...

 

டக்கென்று “நுங்கம்பாக்கத்தில்” என்று உண்மையைச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டாள். பின்னர் மெதுவாக...

 

"சத்யாவுக்கு என்னம்மா ஆச்சு?" என்று மெதுவாக கவி, அக்கறையோடு விசாரித்தாள்.

 

"போன வருச அக்டோபர்ல ஒருநாள், பள்ளியில் இருந்து வந்த சத்யா மூட் அவுட்டா இருந்தா. யார்ட்டயும் சரியாப் பேசலை. சரி, கொஞ்சம் நேரம் போனா சரியாயிடும்ன்னு இருந்துட்டோம். மறுநாள் ஸ்கூல் கிளம்பும்போது, நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னா, டாக்ர்ட்ட போய்க் காட்டுனப்ப, இந்த வயசுல  எப்படி இவ்வளவு ஸ்ட்ரெஸ்? உங்க பொண்ணுக்கு டார்ச்சர் அதிகமா கொடுக்கறீங்களான்னு எங்கக்கிட்டயே டாக்டர் கேட்டார். அப்படியெல்லாம் இல்லைங்க டாக்டர்ன்னு சொன்னோம். சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்து, அதை சாப்பிடச் சொல்லி, ரெண்டு நாள் கழிச்சி மறுபடியும் சத்யாவ டாக்டர் அழைச்சிக்கிட்டு வரச்சொன்னார். பாவி மவ, நான்தான் அவளை ரெஸ்ட் எடுக்கவிடாம, ஸ்கூலுக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினேன்” என்று விசும்பியவர்... இரண்டொரு நிமிட அமைதிக்குப் பின்... 

 

“அவளுக்கு  ஸ்கூல் போகவே விருப்பம் இல்லை. என்னைக் கம்பல் பண்ணாதீங்க. உங்களுக்கெல்லாம் சொன்னா புரியதும்மா... ப்ளீஸ், கொஞ்சநாள் என்னை இப்படியே விட்டுடுமான்னு அழுதா. என்ன சின்னப்பிள்ள மாதிரி, ஸ்கூலுக்குப் போக அடம்பிடிக்கிற சத்யா, ஏன் ஸ்கூலுக்குப் போகலைன்னு அக்கம்பக்க வீடுகள்ல கேட்டா, என்ன பதில் சொல்வேன்னு சத்தம் போட்டேன். அன்னைக்கு நடு ராத்திரில... எல்லாரும் தூங்கின பிறகு.. அந்தக் கொடுமைய எப்படிச் செல்றது? அவ ஃபேன்ல தொங்கிட்டாம்மா....” சொல்லும்போதே அவரிடமிருந்து அழுகை வெடித்தது. 

 

“ஸ்கூலுக்குப் போகச் சொல்லி, நானே எம் மகளைக் கொன்னுட்டேனே...” என்று அந்த அப்பாவி தாய், முகத்தில் அறைந்துகொண்டு அழுதது கவியின் நெஞ்சத்தை உலுக்கியது.

 

கவி எழுந்து சென்று, எதிரில் இருந்த பரிமளத்தம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு "அம்மா.. அழாதீங்க... உங்க மகளோட மரணத்துக்கு நீங்க காரணம் இல்லை. எந்தத் தாயா இருந்தாலும் நீங்க சொன்னதத்தான் சொல்வாங்க. அதுல எந்தத் தப்பும் இல்லை. சத்யாவின் ஆன்மா எப்பவும் உங்கக் கூடத்தான் இருக்கும். தைரியமா இருங்கம்மா”ன்னு ஆறுதல்படுத்தினாள்.

 

அவர் அழுகை கொஞ்சம் வற்றியதும்...

"அம்மா, சத்யா தூக்கு மாட்டிக்கிட்டான்னு சொல்றீங்க. போலீஸ் கேஸ் ஆகலையா?” என்று கவி துப்பறியும் சாம்புவாக மாறினாள்.

 

"இல்லைம்மா... அப்படி சத்யா சூசைட் பண்ணிக்கிட்டான்னு போலீஸுக்குப் போனா, போஸ்ட்மார்ட்டம்ங்கிற பேர்ல, சத்யாவின் உடம்ப அறுத்துக் கூறு போட்ருவாங்களே.. அதுக்குப் பயந்து, இதை யாருக்கும் சொல்லாமல்... ஹார்ட் அட்டாக்குன்னு சொல்லி காரியத்த முடிச்சிட்டோம்மா... ஒரு சின்னக் காயம் கூட படாம வளர்த்த மகளை, எப்படிம்மா போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பறது?” என்றார் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே. 

 

‘இந்தப் பயம் எத்தனைக் கொலைகளை மறைக்க உதவியிருக்கிறதோ?’ என நினைத்து வருந்தினாள் கவி..

“சரிம்மா, சத்யா ஏன் ஸ்கூல் போறதுக்கு அடம்பிடிச்சான்னு அங்க போய் விசாரிச்சீங்களா?" என்றாள் கவி.

 

"மகளே போய்ச் சேர்ந்துட்டா... இனிமே அதைப் பத்திக் கேட்டு என்னப் பண்ணப் போறோம்னு விட்டுட்டோம். ஸ்கூல்ல இருந்து கூட அப்ப போலீஸுக்கு இன்ஃபார்ம் செஞ்சீங்களான்னு ஃபோன் பண்ணிக் கேட்டாங்க. இல்லைங்க... எங்க மக மரணத்த விளம்பரப்படுத்திக்க விரும்பல... அதேபோல் போஸ்ட்மார்ட்ட பயமும் இருக்குன்னு சொன்னோம். அதான் நல்லது... இல்லைன்னா... பொண்னு கேரக்டரைக் கூட போலீஸ்ல விசாரிப்பாங்க. நல்ல டிசிஷன்தான் எடுத்திருக்கீங்கன்னு அவங்களும் சொன்னாங்க. சத்யா நல்ல பொண்ணுன்னு ரொம்பவும் வருத்தப்பட்டாங்க...” என்று அப்பாவியாகச் சொன்னார் அந்தத் தாய்.

 

பள்ளியே, சத்யாவின் தற்கொலையை போலீஸுக்குச் சொல்லாமல் மறைக்க உதவியிருக்கிறது. அப்படியென்றால்? அவளுக்குள் கேள்விகள், தண்ணீர் தெளிக்காமலே முளைத்தன.

“ஸ்கூல்ல இருந்து யார் பேசுனது?” என்றாள்.

“அந்த  நேரத்துல, அதைக் கூட கேட்டுத் தெரிஞ்சிக்கலம்மா”

“ஸ்கூல்ல இருந்துதான் பேசினாங்களா?”

“ஏம்மா இப்படிக் கேக்குற?”

”இல்ல.. சும்மாதான்மா கேட்டேன்” என்று சமாளித்தாள் கவி. அதிகம் துருவினால், பரிமளம் அதிகம் குழம்பலாம் என்பதால், சப்ஜெக்டை மாற்றினாள்.

"அம்மா, கேட்கறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ஷோகேஸில் இருக்கற இந்த பாபி டால் மட்டும் ஏம்மா இப்படி கை, காலெல்லாம் பிஞ்சிபோய், கொத்து பரோட்டா மாதிரி இருக்குது. பாருங்களேன்... அதன் கண்ணெல்லாம் குண்டூசிகள் குத்தியிருக்கு... அதை ஏன் இன்னும் ஷோ கேஸில் வச்சிருக்கீங்க?" என்றாள் ஏதோ பொறி தட்டியவளாக.

‘அந்த அழகிய பொம்மையை யார் இப்படி இரக்கமில்லாமம் சித்திரவதை செய்தது? பொம்மையிடமே இவ்வளவு கோபத்தைக் காட்டிய யார்?’ என்ற திகைப்பு மாறாமல்.

 

பரிமளம் சொன்ன பதில், கவியை  மேலும் அதிரவைத்தது.

 

(திக் திக் தொடரும்)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #10