ADVERTISEMENT

புரட்சிகர சிந்தனைக்குள் மாவோ! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #5

01:23 PM Oct 18, 2019 | suthakar@nakkh…


இரவு நேரத்தில் நகரம் கருமை படர்ந்திருந்தது. ஆளுநரின் மாளிகை, நதியின் தீவுத்திட்டு உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மின்சாரம் இருந்தது. மற்ற வீடுகளில் எண்ணெய் விளக்குகள் மங்கலான வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தன. அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டு இருந்தது. சாங்ஷா நகரின் இந்த பிரமாண்டமான தோற்றம் மாவோவை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியது. நகருக்குள் தன்னை அனுமதிப்பார்களா என்ற பயம் ஏற்பட்டது. மாபெரும் பள்ளி ஒன்றில் தன்னை அனுமதிப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்தது.

ADVERTISEMENT



ஆனால், அவருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. மிக எளிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அடுத்த ஆறு மாதங்கள் அவருடைய கல்வியைக் காட்டிலும் அரசியல் கல்விக்கு துணையாக இருந்தது. சாங்ஷா நகரம் முழுவதும் சீனப் பேரரசை ஆண்ட மஞ்சு இனத்தவரை எதிர்த்து புரட்சி வளர்ந்து கொண்டிருந்தது. பேரரசுக்கு எதிராக ரகசியமான இயக்கங்கள் உருவாகி இருந்தன. ஹான் மக்கள் எழுச்சி அடைய வேண்டும் என்று அந்த இயக்கங்கள் போராடின.

"எல்லோரும் தலைகளில் வெள்ளை துணிகளை கட்டுங்கள். வாள்களை ஏந்துங்கள் ஷெங் நுங்கின் வாரிசுகளிடம் சீனாவின் பதினெட்டு மாகாணங்களையும் ஒப்படைப்போம். "கலகம் செய்வோம், மஞ்சுகளை விரட்டுவோம்." என்ற முழக்கங்கள் சுவர்களில் எழுதப்பட்டு இருந்தன. ஒரு வசந்த காலத்தில் மாவோ சாங்ஷா நகரில் தனது இருப்பை பதிவு செய்தார். அந்த சமயத்தில் கேன்டன் நகரில் மஞ்சு எதிர்ப்பு கிளர்ச்சி நடைபெறுவதாக கேள்விப்பட்டார். ஹுவாங் ஸிங் என்பவர் தலைமையில் அந்த கிளர்ச்சி நடைபெற்றதாகவும் அதில் எழுபத்திரண்டு பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் மின்லி பௌ என்ற செய்தித்தாளில் ஒரு செய்தியை மாவோ வாசித்தார். இந்த ஹுவாங் ஸிங் சன்யாட் சென்னின் தளபதியாக செயல்பட்டார். ஹூனான் மாகாணத்தில் உள்ள காவேடாங் என்ற ஊரில் பிறந்தவர். (இப்போது அந்த ஊர் சாங்ஷா நகருடன் இணைக்கப்பட்டுவிட்டது)

ADVERTISEMENT



அதுதான் அவர் வாசித்த அல்லது பார்த்த முதல் செய்தித்தாள். அந்த செய்தித்தாளில்தான் சன்யாட் சென் என்ற பெயரை முதன்முதலாக மாவோ கேள்விப்பட்டார். அவர் ஜப்பானில் இருந்தபடி டோங்மெங்குய் அல்லது ஐக்கிய லீக் என்ற அமைப்பை செயல்படுத்தி வந்தார். இந்த இடத்தில் சன்யாட் சென் ஐப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. குய்ங் முடியாட்சியை ஒழித்து சீனாவில் குடியாட்சியை உருவாக்க வேண்டும் என்று விரும்பியவர் சன்யாட் சென். 1866 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்தவர். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், 1892 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். மேற்கத்திய தொடர்பு இவரை சீனாவின் மீது அக்கறை செலுத்தத் தூண்டியது. குவாண்டங் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பம் இவருடையது. இவருடைய அண்ணன் பெரிய வர்த்தகராக இருந்தார். தனது தம்பி சன்யாட் சென் நல்ல கல்வி பெறுவதற்கு இவர் உதவி செய்தார். ஹவாய்த் தீவிலுள்ள ஹானலூலுவில்தான் இவர் ஆங்கில வழிக் கல்வி கற்றார். பிறகு ஹாங்காங்கில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

டாக்டராக பட்டம் பெற்றாலும் மருத்துவத் தொழிலில் ஈடுபடவில்லை. சீனாவின் ஊழல் மலிந்த மஞ்சு முடியாட்சியை துரத்த வேண்டும் என்று விரும்பினார். எனவே, முழுநேர புரட்சியாளராக மாறினார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சீனாவைக் காப்பாற்றுவோம் என்ற அமைப்புக்கு நிதி திரட்டினார். ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சீனா திரும்பிய சென், மஞ்சு ஆட்சிக்கு எதிராக புரட்சியைத் தொடங்கினார். ஆனால், அந்தப் புரட்சி தோற்றது. உடனே அவர் பத்திரமாக லண்டனுக்கு ஓடிவிட்டார். இருந்தாலும் அங்கே இருந்த சீனத் தூதரக அதிகாரிகளால் அவர் கடத்தப்பட்டார். அவரை விடுவிப்பதில் பிரிட்டிஷ் அரசு முக்கிய பங்கு வகித்தது. பின்னர், சில நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.



பிறகு ஜப்பானுக்குச் சென்றார். அங்கிருந்தபடியே சீனாவின் புரட்சிகர இயக்கத்தை இயக்கி வந்தார். இத்தகைய காலகட்டத்தில், அதாவது 1911 ஏப்ரல் 27 ஆம் தேதிதான் ஹுவாங்குவாகேங் புரட்சி என்ற பெயரில் ஹுவாங் சிங் தனது முதல் புரட்சியை தொடங்கினார். அந்த புரட்சி தோற்றதைத் தொடர்ந்துதான் 72 பேர் வைசிராயால் கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியைத்தான் மாவோ முதன்முதலாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இந்தச் செய்தி அவருக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது முதல் சுவரொட்டியைத் தயாரித்தார். அதை தனது பள்ளியின் சுவரில் ஒட்டினார்.

"சன்யாட் சென்னை குடியரசுத் தலைவராகவும், கேங் யோவேய் ஐப் பிரதமராகவும் லியேங் சிச்சவ் ஐ வெளியுறவுத்துறை அமைச்சராகவும் கொண்ட புதிய அரசை அமைக்க உதவுங்கள்" என்று அந்தச் சுவரொட்டி அறைகூவல் விடுத்தது. ஆனால், அப்போது அவர் குழப்பமான அரசியல் சிந்தனையில் இருந்தார். அந்தச் சிந்தனையையும் சில வாரங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் மாற்றிவிட்டன. சீனாவில் ஆண்கள் அனைவரும் தலைமுடியை சடைப் பின்னிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அப்படி சடை பின்னாத ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மஞ்சு இனத்தவர்களின் இந்தப் பழக்கத்தை ஹேன் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சாங்ஷாவில், இதை எதிர்த்து ஒரு புரட்சி நடைபெற்றது. ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படித்தவர்கள் தங்கள் நீண்ட சடைகளை வெட்டிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் சீனாவுக்கு திரும்பியவுடன் போலியாக ஒரு சடையை தயாரித்து, தலைப்பாகையுடன் இணைத்து அணிய வேண்டிய நிலை இருந்தது.



பிஸியாங் பிஸியாங் நகரில் படிக்கும்போது மாவோ இதைக் கண்டிருந்தார். அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் இப்படி போலியான சடையை அணிந்திருந்தார். அவரை மாவோவும் அவருடைய நண்பர்களும் போலி அன்னியப் பிசாசு என்று அழைத்தனர். இப்போது மாவோ அந்தச் சடையை ஹேன் வம்சத்தினரின் அடிமைச் சின்னமாக கருதத் தொடங்கினார். சாங்ஷா பள்ளியில் அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் தங்கள் சடையை வெட்டிக் கொண்டனர். தாங்களும் வெட்டிக் கொள்வதாக சில நண்பர்கள் அவரிடம் வாக்களித்தனர். ஆனால், அவர்கள் தங்கள் வாக்கை காப்பற்றத் தவறினார்கள். அவர்களை மாவோவும் அவருடைய நண்பர்களும் தாக்கினர். பத்துக்கு மேற்பட்டோரின் சடைகளை வெட்டினார்கள்.

சமீபகாலமாகவே சாங்ஷாவிலும், வூச்சாங்கிலும் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற சடைவெட்டும் நிகழ்ச்சிகள் அதிகரித்தன. இது மஞ்சு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. தங்களுடைய ஆளுமையின் அடையாளம் அழிக்கப்படுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஹுவாங் ஸிங் தலைமையேற்ற முதல் புரட்சி தோற்றாலும், புரட்சியாளர்களுக்கு நிலப்பிரபுக்கள் ஆதரவளிக்க முன்வந்தனர். கல்வி கற்ற அந்த மேட்டுக் குடியினர், புதிய அரசு அமைந்தால் அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். அதன்படி மஞ்சு ஆட்சியாளர்கள் புதிய அமைச்சரவையை அமைத்தார்கள். ஆனால், அந்த அமைச்சரவையில் மஞ்சு இன இளவரசர்களே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதனால் வெறுப்படைந்த மேட்டுக் குடியினர் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக திரும்பினர். 1911 மே மாதம் வெளிநாட்டிலிருந்த சீனா பெருமளவு கடன் பெற்றது. இது சீனாவை அடிமைப்படுத்தும் முயற்சி என்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது. சாங்ஷாவில் மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்த நேரத்தில் நகரத்தின் எல்லைச் சுவர்களுக்கு வெளியே மாணவர்கள் நடத்திய கூட்டங்களில் மாவோ தனது நண்பர்களுடன் சென்றார். அங்கு மூத்த மாணவர்கள் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் பேசிய ஒரு மாணவர், "ராணுவப் பயிற்சி பெறுவோம். போர் புரிய தயாராக இருப்போம்" என்று ஆவேசமாக அறைகூவல் விடுத்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT