Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

பரந்ததோர் உலகில் பறவையாய்! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #4

 
ஹிஸியாங் டான் நகரில் மாவோவின் தந்தைக்கு பழக்கமான அரிசிக் கடை இருந்தது. அங்குதான் மாவோவை பயிற்சி எடுக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். அது தனக்கு உற்சாகம் அளிக்கும் என்று மாவோவும் நினைத்திருந்தார். ஆனால், அந்தச் சமயத்தில்தான் ஹிஸியாங் ஹிஸியாங் பகுதியில் உள்ள துங்ஷான் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்தப் பள்ளியில் சேர்ந்து படிப்பது என்று மாவோ முடிவெடுத்தார். அதற்கு அவருடைய தந்தையும் ஒருவழியாக அனுமதி அளித்துவிட்டார்.

 

cஅந்தப் பள்ளி மாவோவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆம். அதற்கு முன் இவ்வளவு மாணவர்களை அவர் ஒரே இடத்தில் பார்த்ததில்லை. அதுமட்டுமில்லை. அந்த மாணவர்கள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களின் குழந்தைகளாக இருந்தார்கள். விலை மதிப்புமிக்க ஆடைகளை அணிந்திருந்தார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கு மிகக்குறைவான விவசாயிகளே தங்களுடைய குழந்தைகளை அனுப்பி இருந்தார்கள். அங்கு படித்த மாணவர்களில் மிகவும் மோசமாக உடை அணிந்திருந்தது மாவோ மட்டுமே. அவரிடம் ஒரே ஒரு நாகரிகமான கோட்டும் பேண்ட்டும் மட்டுமே இருந்தன. சீனர்கள் அணியும் வழக்கமான மேலங்கியை யாரும் அணிவதில்லை.

மாவோ எப்போதுமே கசங்கிப்போன உடைகளையே அணிந்திருந்தார். அவரை பணக்கார மாணவர்கள் வெறுத்தனர். ஆனால், அவர்களிலும் மாவோவுக்கு நெருக்கமான நல்ல தோழர்கள் சிலர் இருந்தனர். இதற்கு காரணம் அவர் நன்றாக படித்தார். ஆசிரியர்களுக்கு அவரைப் பிடித்திருந்தது. மாவோ நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தார். மாவோ புராதன இலக்கிய நடையில் நல்ல கட்டுரைகளை எழுதினார். அந்த இலக்கியங்களை கற்பித்துவந்த ஆசிரியர்கள் மாவோவை மிகவும் விரும்பினார்கள். ஆனால், அந்த இலக்கியங்களில் மாவோவின் மனம் நிலைக்கவில்லை. இங்கு வந்து படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், சீனப் பேரரசர் குவாங்ஸுவும், பேரரசி டோவேஜர் சிஸியும் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை அறிந்தார். இருவருமே ஒருநாள் வித்தியாசத்தில் 1908 ஆம் ஆண்டு இறந்தனர். அவர்களுக்கு பதிலாக ஹூசுவான் டுங் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
 

bஇங்கு படித்த 6 மாதங்களில் மாவோவின் சிந்தனை கூர்மைப்பட்டது. அதுவரைக்கும் மன்னர் ஆட்சியை விரும்புகிறவராகத்தான் இருந்தார். பேரரசரும், பெரும்பாலான அதிகாரிகளும் நேர்மையானவர்கள் என்றுதான் நம்பியிருந்தார். ஆனால், அரசியல் வரலாறு, புவியியல் தொடர்பான அறிவு வளர வளர அவருடைய வெளியுலகப் பார்வை விரிவடைந்தது. 1900ம் ஆம் ஆண்டில் பேரரசர் குவாங்ஸு கொண்டுவந்த சீர்திருத்தங்களை வடிவமைத்த கேங் யோவேய், லியேங் சிச்சவ் ஆகியோரை மாவோ அறிந்திருந்தார். குவாங்ஸுவின் சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் இருவரும் சீனாவிலிருந்து தப்பிவிட்டனர். இவர்கள் கன்பூஷியனிஸத்தை மறுவரையறை செய்தார்கள்.

அவர்கள் இருவரும் எழுதிய இரண்டு நூல்களை மனப்பாடம் ஆகும்வரை மாவோ படித்தார். அந்த இருவரையும் தனது வணக்கத்துக்கு உரியவர்களாக கருதினார். இவர்கள் இருவருடைய உதவியை பேரரசு நாடவேண்டும். அவர்களுடைய ஆலோசனைகளுடன் ஆட்சி நடத்தினால் சீனா முன்னேற்றப்பாதையில் நடைபோடும் என்று மாவோ நம்பினார். இந்தப் பள்ளியில் இருக்கும்போது வெளிநாட்டு வரலாறு அவருக்கு அறிமுகமானது. அமெரிக்கப் புரட்சியைப் பற்றிய நூலைப் படித்தபோதுதான் அமெரிக்காவைப் பற்றி முதன்முதலாக கேள்விப்பட்டார்.

 

ghஉலகப் பெருந்தலைவர்கள் என்ற நூலில் நெப்போலியன், பேரரசர் பீட்டர், வெலிங்டன், ரூஸோ, மாண்டெஸ்க்யூ, லிங்கன் உள்ளிட்ட தலைவர்களை அறிந்தார். தனது கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வந்தவுடனேயே பரந்த உலகத்தை அறியும் வாய்ப்பு மாவோவுக்கு கிடைத்தது. இங்கு கிடைத்த கல்வியைக் காட்டிலும் தரமான கல்வி ஹூனான் தலைநகர் சாங்ஷாவில் கிடைக்கும் என்பதை அறிந்தார். மாவோவின் வீட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்தான் சாங்ஷா இருந்தது.

அந்தச் சமயத்திலேயே அது மிகப்பெரிய நகரம் என்று மாவோ கேள்விப்பட்டார். அங்கு நிறைய மக்கள் வசிக்கிறார்கள். நிறைய பள்ளிகள் இருக்கின்றன. ஆளுநர் அரண்மனை அங்குதான் இருக்கிறது. அந்த நகரம் பிரமிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் கேள்விப்பட்டார். இது அவருக்குள் ஆர்வத்தை தூண்டியது. அந்த நகரில் ஹூனான் பகுதிக்கென தனியாக நடுநிலைப் பள்ளி இருக்கிறது என்று அறிந்தார் மாவோ. அந்தப் பள்ளியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று நம்பினார். இருந்தாலும் ஒரு ஓரத்தில் பயம் இருந்தது. ஹிஸியாங் ஹிஸியாங் பள்ளியில் தனக்கு ஆசிரியராக இருந்த ஒருவரிடம் போனார்.

 

 

b"சாங்ஷா நடுநிலைப் பள்ளியில் என்னை அறிமுகப்படுத்துங்கள் ஐயா" மாவோவின் வேண்டுகோளை அந்த ஆசிரியர் ஏற்றார். அந்த ஆசிரியர் மாவோவின் தந்தையிடம் பேசினார். அவரைச் சம்மதிக்க வைத்தார். பிறகு ஒரு கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து மாவோவுக்குள் நம்பிக்கை நிறைந்தது. அது புகழ்பெற்ற பள்ளி. அதில் மாணவனாக முடியும் என்ற நம்பிக்கை முழுவதும் ஏற்படாத நிலையில்தான் அவர் அங்கு சென்றார்.

ஸியாங் நதியில் நீராவிப் படகு ஒன்றில் அவர் பயணம் செய்தார். அந்தப் படகு நகரை நெருங்கியது. அப்போது மாவோவின் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட நகராக அது தோற்றமளித்தது. மேன்மையான சாம்பல் நிறக் கற்களால் ஆன செங்குத்தான ஒரு சுவர் நதியின் விளிம்பிலிருந்து உயர்ந்து நின்றது. அதன் அடித்தளம் ஐம்பது அடி அகலமுடையதாக இருந்தது. அந்தச் சுவர் இரண்டு மைல் நீளம் உடையது. ஐம்பது அடி அகலமுடையது. அதன் உயரம் 40 அடி இருந்தது. ஒரே சமயத்தில் மூன்று குதிரை வண்டிகள் செல்லக் கூடிய வகையில் அந்த சுவரின் பாதை இருந்தது. சாங்ஷா நகர் முழுவதையும் அந்தச் சுவர் சுற்றிச் சூழ்ந்திருந்தது. அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாயில்கள் இருந்தன. அந்த வாயில்களில் இரண்டு பிரமாண்டமான கதவுகள் இருந்தன. வாயில்களுக்கு கருநீல வண்ணத்தில் தலைப்பாகை அணிந்த காவலாளிகள் காவல் காத்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஈட்டிகள், வாள்கள், துப்பாக்கிகள் என அவர்கள் பலவிதமான ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.
 

bhசுவருக்குள் ஓடுகள் வேய்ந்த கூரைகள் உடைய கட்டிடங்களுடன் சுரங்கப் பாதைகள் போன்ற இருண்ட தெருக்கள் நகரத்தின் மையப்பகுதி வரை நீண்டன. கருங்கற்கள் பாவிவிடப்பட்ட இந்தத் தெருக்கள் ஆறு அடி அகலம் மட்டுமே இருந்தன. அந்தத் தெருக்கள் துர்நாற்றம் வீசின. ஏராளமான மக்கள் வசிக்கும் பகுதிகள் எப்படி நாற்றமெடுக்குமோ அப்படியே அவை இருந்தன. ஆனால், அந்தச் சுவருக்கு பின்னால், அழகான மாளிகைகள் இருந்தன. அந்த மாளிகைகளில் மிகப்பெரிய அதிகாரிகள் வசித்தனர். அங்கு இரண்டு மிகப்பெரிய கன்பூஷியக் கோயில்களும் இருந்தன. அந்தக் கோயில்களைச் சுற்றிலும் சைப்ரஸ் மரங்கள் வளர்ந்திருந்தன. கடைவீதிகள் ஆரவாரமாக இருந்தன. சைக்கிள்களோ, மோட்டார் கார்களோ, ரிக்சாக்களோ இல்லை. பணக்காரர்கள் பல்லக்குகளை பயன்படுத்தினார்கள். மற்றபடி ஆட்கள் பயணிப்பதற்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் சாதாரணக் கைவண்டிகளே இருந்தன.

கை வண்டிகளில் பலவிதமான பொருட்களை ஏற்றிச் சென்ற தொழிலாளர்கள் அவற்றை நதியில் நின்ற படகுகளில் ஏற்றினர். அவர்கள் ஓயாமல் இந்த வேலையில் ஈடுபட்டனர். அவர்கள் இழுத்துச் செல்லும் கை வண்டிகள் எழுப்பும் கிரீச் ஒலி கடைவீதி முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீளமான மூங்கில் கழிகளின் இருபுறமும் வாளிகளில் தண்ணீரை நிரப்பி தோளில் சுமந்தபடி ஆட்கள் ஊருக்குள் விற்பனைக்கு எடுத்து சென்றார்கள். தெரு வியாபாரிகள் தங்கள் பொருட்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். 

தாவோயிஸ்ட் துறவிகளும், காவி உடை அணிந்த பௌத்த துறவிகளும் நோயாளிகள் குணமடைவதற்கு பிராத்தனைகளை உச்சரித்தவாறு சென்றார்கள். பிச்சைக்காரர்களும் குருடர்களும் அருவருப்பான தோற்றம் உடையவர்களும் சாலை ஓரங்களில் உட்கார்ந்து பிச்சை எடுத்தனர். அவர்கள் அந்த நகரத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வார்கள். வீட்டு உரிமையாளர்கள் அவர்களை பார்த்து முகம் சுளிப்பார்கள். "உங்கள் வீடுகளுக்கு அடுத்த ஒரு வருடம் வரமாட்டோம். ஆனால், எங்களுக்கு நீங்கள் மொத்தமாக பணம் கொடுத்துவிட வேண்டும்." என்று மிரட்டி பணம் பறித்தார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...