ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #30

01:12 PM Jun 02, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

ரமா அம்மா கடிதம் கொடுத்து யாரையோ வரச் சொல்லி இருந்தார்கள். இதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கவி, மனதில் அந்த நபர் யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் ரமா அம்மாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மல்லிகாவிற்கு கொடுப்பதற்காக அறைக்கு வந்தாள். அறையின் உள்ளே நுழையும்போதே யாரோ அழுதுகொண்டு விசும்புவது போல் கேட்டது. மல்லிகா முகம் தெரியாமல் திரும்பி படுத்து இருந்தாள். சங்கவி மல்லிகாவின் முகத்தை பார்த்தாள். அவள் அழுது கொண்டிருப்பது கண்ணாடி போல் தெளிவாக தெரிந்தது. இதைப்பார்த்த சங்கவி அதிர்ந்தாள்.

"என்னக்கா ஆச்சு" என்று கவலையும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்டாள். தன் பணிவிடையில் ஏதாவது தவறு இருக்குமோ என்ற பயம் உள்ளுக்குள் சங்கவிக்கு இருந்தது.

" ஒண்ணுமில்லை சங்கவி" என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்தாள் மல்லிகா.

"அக்கா உடம்பு மறுபடியும் பிரச்சனை பண்ணுதா? மனசு சரியில்லையா? எதுவாக இருந்தாலும் சொல்லுக்கா, எமனிடம் போராடி அந்த சிசுவை மீட்டு இருக்கோம். நீங்க இது மாதிரி இருந்தா நாம எல்லாரும் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி விடும்" என்று மிகவும் உருக்கமாக சொன்னாள் சங்கவி.

" அதெல்லாம் எதுவும் இல்லை சங்கவி, அம்மாவின் நினைவு வந்துவிட்டது. இந்த நேரம் பார்த்தா அவர்கள் காசி யாத்திரை செல்ல வேண்டும். அம்மா வீட்டு சொந்த பந்தமே இல்லாமல் அனாதையாக இருப்பதை போன்ற உணர்வு சங்கவி. மனசு கஷ்டமாக இருக்கு" என்று கவலையுடன் சொன்னாள் மல்லிகா.

"அக்கா நான் உங்களை அப்படி கூப்பிடுறது வெறும் வார்த்தை இல்லை என் மனசுல இருந்து கூப்பிடறேங்கா. நான் இருக்கேன். உங்க தங்கச்சி இருக்கேன். உங்களுக்கு துணையா இப்ப நீங்க எந்த கவலையும் இல்லாமல் இருக்கணும் சிரிங்க" என்று மல்லிகாவுக்கு ஆறுதல் சொன்னாள் சங்கவி.

ஒரு பெண்ணுக்கு அம்மா என்ற உறவின் தேவை நொடிக்கு நொடி இருந்தாலும், அம்மாவின் கதகதப்பான அணைப்பு இரண்டு நேரங்களில் அவசியம் தேவைப்படுகிறது. பெண் தன்னுள் பெண்மையை உணரும் பூப்பெய்திய அந்த தருணம், தன் உடம்பில் நிகழும் ரசாயன மாற்றமும் மனதில் நிகழும் உணர்வு மாற்றங்களும் அழுகை, வெட்கம் போன்ற உணர்வின் கலவையாக உருக்கிய தங்கமாய் தகதகக்கும் அந்த நேரத்தில் தன் நிலையை விளக்குவதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் அம்மா என்ற உறவை ஈடுசெய்ய வேறு ஒரு உறவு இந்த உலகில் இல்லை.

பூத்த மரம் காய்க்க ஆரம்பிக்கும் போது அந்த பிரசவ வேதனையிலும் அரவணைக்க அம்மாவின் கரம் தான் தேவைப்படுகிறது. அந்த வேதனையில் தான், பெண் உணர்வால் நான் விதையாக விழும் நேரம் என் அம்மா இப்படித்தான் வேரோடு சாய்ந்து இருப்பாள். என் உடல் வேதனையும் மன வேதனையும் அவளும் பட்டு இருப்பாள் என்று உணரும்போது மகளின் பிடி இறுக்கமாகும். மனம் ஆயிரம் வேதனைகளில் தத்தளிக்கும் என்றெல்லாம் அம்மா என்னும் உறவின் புனிதத்தை நினைத்துக் கொண்டிருந்தாள் சங்கவி.

சாப்பிட்டு முடித்து சங்கவியைப் பார்த்து லேசாக சிரித்தாள் மல்லிகா. "ஏன் கா சிரிக்கிறீங்க" என்று குழம்பியவாறு கேட்டாள் சங்கவி.

" சங்கவிக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது" என்று நினைத்தேன் சிரிப்பு வந்தது என்றாள் மல்லிகா.

"என்ன சொல்றீங்க புரியலையே?" என்று உதட்டைப் பிதுக்கினாள் சங்கவி. "திருமணமான புதிதில் உங்க ஊரில் இருந்து ஒரு அக்கா நம்ம வீட்டிற்கு வந்தாங்க. அவர்கள் போகும் வரை நீ எப்படி பயந்து நடுங்கினாய்? இப்ப ரமா அம்மாவை வீட்டிற்கு அழைச்சிட்டு போகும் அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சி. அதை நினைத்து சிரித்தேன்"என்றாள் மல்லிகா.

"அக்கா அது என் மகிழ்வுக்கான நிகழ்வு அதனால் யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு பயந்தேன். இது வேறு ஒரு மனுஷிக்கான நிம்மதி. இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கலாம் என்ற மனநிலை வந்துடுச்சுக்கா. உலகின் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தனிமனித மகிழ்வாக ஏற்பட்டது இல்லையே? எப்பவும் நமக்காக பிறரிடம் கையேந்தும் போது மனசு கூனிக்குறுகி சுக்கு நூறாகும். இதே பிறருக்காக கையேந்தும் போது அதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கும் என்று சங்கவி பேசிக்கொண்டிருக்கும்போதே மல்லிகா வாயை திறந்து காற்றில் ரயில் விட்டாள்.

சரிங்க அக்கா உங்களுக்கு தூக்கம் வந்துடுச்சி நீங்க தூங்குங்க என்று மௌனமானாள் சங்கவி. ரமா அம்மா கடிதம் கொடுத்து வரச் சொன்ன நபர் அம்மாவை பார்க்க வந்தார். அவர் கையில் கட்டுகட்டாக என்னமோ காகிதங்கள் இருந்தன. அவர் வந்ததும் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த சங்கவியை ஒரு பார்வை பார்த்தார் ரமா. அந்த பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்டு சங்கவி அங்கிருந்து நகர்ந்தாள். ரமா பேங்கில் தன் பேரில் இருக்கும் பணத்தை எடுத்து வருவதற்கு காசோலையில் கையெழுத்து போட்டு கொடுத்தாள். நாளைக்கு தனக்கு ஏதாவது நேர்ந்தால் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க வாரிசு சான்றிதழ் தேவைப்படும். அதனால் எல்லா பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டாள்.

"என் பேரில் இருக்கும் வீட்டை மாற்றுவது பற்றி மகனிடம் பேச வேண்டும்" என்று சொன்னாள் ரமா.

"அம்மா நீங்க மாற்றாவிட்டாலும் வேறு வாரிசு இல்லாததால் மகனிடம் தான் சென்று சேரும்" என்று ரமாவை பார்க்க வந்த வக்கீல் சொன்னார்.

"இல்லை வீட்டை பற்றி நான் வேறு யோசனை வைத்துள்ளேன். அது விவரமாக என்று மகனுடன் ட்ரங்காலில் பேசி விடுகிறேன். இன்னும் இரண்டு நாளில் இங்கிருந்து நான் கிளம்பி விடுவேன். அதற்குள் சில ஏற்பாடுகளை செய்தாக வேண்டும் என்று சிந்தனையுடன் கூறினாள்.

"சரிம்மா நாளை பணத்துடன் ரிஜிஸ்டர் ஆபீஸரையும் அழைத்துக்கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

ரமாவிற்கு ஏனோ மனம் பாரமாக இருந்தது. "எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்." கண்ணதாசனை போல ஒரு சிறந்த தீர்க்கதரிசி யாரும் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டார் ரமா. நினைவுகளின் கோலங்கள் ரமாவின் கன்னங்களில் வழிந்தது.

மருத்துவர் மல்லிகாவை சோதித்து பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினார். மல்லிகாவிற்கு சில அறிவுரைகள் வழங்கினார். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் மல்லிகாவும் சங்கவியும் கவனமாக கேட்டுக் கொண்டார்கள். மருத்துவமனை போனிலிருந்து ஊரிலிருக்கும் தலைவர் வீட்டுக்கு ஃபோன் போட்டு அசோக்கை வரவழைத்து நாளைக்கு எங்களை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் சொன்னாள் சங்கவி. பிறகு ரமா அம்மாவைக் கவனிக்கும் மருத்துவரிடம் பேசி அம்மாவை உடன் அழைத்துச் செல்லும் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டாள் சங்கவி. ரமா அம்மாவிற்கு தேவையான மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டாள். அது கிராமம் என்பதால் மருந்துகள் கிடைக்காது. எனவே கவனமுடன் இங்கிருந்து அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டாள் சங்கவி. அனைத்திற்கும் பணம் ரமா அம்மா தான் கொடுத்தார். அசோக் அம்பாசிடர் காரை நண்பனிடம் கடன் வாங்கி ஓட்டி வந்திருந்தான். அசோக்கிடம் ரமா அம்மாவை உடன் அழைத்துச் செல்வதைப் பற்றி கூறினாள் சங்கவி.

"சாரிங்க நீங்க அருகில் இல்லாததால் என்னால் உங்களிடம் அனுமதி கேட்க முடியவில்லை. மன்னிச்சிடுங்க நாட்டுக்காக தன் குடும்பத்தை இழந்து அனாதையாக நிற்கும் அம்மாவிற்கு உதவ வேண்டும் என்ற உணர்ச்சி. பணம் காசு யார் வேண்டுமானாலும் தருவாங்க. குடும்பம் என்ற உணர்வையும் உறவையும் நாம தரலாம்னு நெனச்சேன். அதுவும் தன் வாழ்வின் விளிம்பில் இருப்பவருக்கு நாம தரும் சிறிய சந்தோஷம் இது" என்று உணர்ச்சி மேலிட பேசினாள் சங்கவி.

"சங்கவி நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது. உன்னை போலத்தான் எனக்கும் உணர்வுகள் இருக்கு. நாம அழைச்சிட்டு போனதும் குடும்பத்தார் அவர்களை எதுவும் சொல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது. அவர்களை சந்தோஷமாக வச்சிருக்க வேணும்னு நினைக்கிறேன். ஆனால் சங்கவி அதில் ஒரு சிக்கல் இருக்கு" என்று சங்கவியை அதிரவைத்தான் அசோக்.

(சிறகுகள் படபடக்கும்)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT