Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #08

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

maayapura part 8

 

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"பாச உணர்ச்சி மட்டுமே  காதல் என்றால் அதைக்கொட்ட ஒரு பிராணி போதும். பாலுணர்ச்சி மட்டுமே காதல்  என்றால் ஒரு விலைமகனோ விலைமகளோ போதும். ஆனால் இந்த இரண்டும் தாண்டிய உணர்வு எந்த  புள்ளியில் சந்தித்துக்  கொள்கின்றனவோ அந்தப் புள்ளிதான்  காதல்." என வைரமுத்துவின்  வரிகளைக் கொஞ்சம் மாற்றி மனதில் அசைபோட்டான் அசோக்.

 

நந்தினி  என்னவோ விளையாடிக் கொண்டே விளையாட்டாகத்தான் கேட்டாள். அவள் கேட்ட அந்தக் கேள்விக்கான பதிலை  எதிர்பார்த்து  இரண்டு ஜீவன்கள் திருவிளையாடல் படத்தில் சிவாஜி கைகளை நீட்டி " என்னிசை நின்றால் அடங்கும் உலகே…’என்று பாடியதும்  கடலலை, பறவை எல்லாம் அப்படியே நிற்கும்", அதுபோல  அசோக்கும், புவனாவும் அப்படியே நின்றனர்.

 

நடைபாதையில் வாழ்கின்ற மக்களின் கனவே 3 வேளை உணவு தான். 3 வேளை உணவு கிடைக்கும்  நடுத்தர  மக்களின் வாழ்க்கையானது கனவுகளிலேயே கழிந்து விடுகிறது. பாம்பு எப்போதும் மறைவிடத்தில் மட்டுமே இருக்கும் , யார் கண்ணிலாவது பட்டால் வேகமாக ஓடி மறைந்து கொள்ளும்.சங்கவியும் தன் கனவுகளை மறைத்தே  வைத்திருந்தாள். அசோக்கைப் பார்த்த முதல் நாளே   பிடித்திருந்தது.

 

தன் நிலை உணர்ந்து வெளிக்காட்டாமல் மனம் என்னும் சுவருக்குள் மறைந்து கொண்டாள். ஆனால் அசோக் தொடர்ந்து பிடில் வாசித்துக்கொண்டே இருந்தான். சங்கவி மயங்கி வெளியே வருவாளா? எத்தனையோ கேள்விகளுக்கு மெளனமே பதிலாக அமைகிறது.

"நந்தினி  சின்னப் பொண்ணு நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது" என்று நந்தினியை கண்டித்தாள் சங்கவி. இந்த பதிலைக்கேட்டதும், புவனாவின் மனம்  கேள்விக்குறியானது. "நான்  கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்று கூறியிருக்கலாமே ஏன் கூறவில்லை" ? என்ற கேள்வி  சிறு தீப்பொறியானது. அசோக்கின் மனம் நம்பிக்கையில் துளிர்த்தது. "முடியாது என்ற வார்தையை சங்கவி சொல்லவில்லை, சுனைநீர் போல் பாறை என இறுகிய மனதில் நம் மீதான அன்பு கசிகிறது." என்பதை உணர்ந்தான் அசோக்.

"நந்தினி, கதிர், வாங்க போகலாம், நேரம் ஆகுது" என்று அவர்களை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சங்கவி. நந்தினியும், ஜாலியாக  பேசிக்கொண்டு  வந்தாள். புவனா   மட்டும் அமைதியாக வந்தாள் அவள் மனம் முழுவதும் "அசோக் மாமாவை எப்படி சீக்கிரம்  திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதற்கு எப்படி காய் நகர்த்துவது  என்று  சிந்தித்தது.

 

வாழ்க்கையில் சில நேரங்களில் நாமாகவே சிலரை எதிரியாக நினைத்து கொண்டு வளர்ந்திடுவோம். அமைதியாக சிந்தித்தால் அவர்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அது மாதிரி சங்கவி திருமணத்திற்கு வந்தாள்  திருமணம் முடிந்ததும் சென்று விட போகிறாள் என்ற எண்ணம் புவனாவுக்கு இல்லாமல் சங்கவியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

வீட்டிற்கு வந்ததும் சங்கவி அம்மாவுடன் அடுக்களை வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.  இரவு உணவு தயாராகிக்கொண்டு இருந்தது. வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தான். ஒரு இருபது முப்பது பேர்களுக்கு.

"அலமேலு பண்ணையில் வேலை செய்த படியாளுங்க வந்திடுவாங்க சாப்பாடு வாங்கிட்டு போறதுக்கு. மதியம் சாப்பாடு மீதி இருந்தா போட்டு அனுப்பு" என்று தங்கம் அதிகாரத் தொனியில் சொன்னாள்.

 

புவனா அத்தையை தனியாக அழைத்துச் சென்று என்னவோ பேசினாள்." புவனா நீ சொல்றா மாதிரி செய்திடறேன் கண்ணு, அத்தை இருக்கும் போது நீ ஏன் பயப்படற இன்னிக்கு அசோக் கிட்ட விஷயத்தை சொல்லிடறேன். அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும்  நீ தான் அவன் மனைவி போதுமா" என்று தங்கம் உறுதியாக கூறிய பிறகுதான் புவனாவின் மனதில் தெம்பு வந்தது.

 

இரவு உணவு முடித்து அனைவரும்  ஹாலில் படுக்கையை விரித்தனர் அலமேலுவும் சங்கவியும் மட்டும் அடுக்களையில் வேலை முடித்து கழுவி கொண்டிருந்தனர். "தின்று கொழுத்த எலிக்கு வளையில்  தங்க முடியலையாம் பசியில் அலையற  பாம்புக்கு பசியாற  வழியில்லை" என்கிற கதையாக தனம்மா வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பேத்தியின் அருமை பெருமைகளை பாட ஆரம்பித்தார். ரீரெக்கார்டிங் புவனாவின் அம்மா நாகம்மா வாசிக்க ஆரம்பிச்சாங்க . 

”என் பேத்தி  பி.யூ.சி.படிச்சி  இருக்கா என் மகன் சொத்துபத்துக்கு   எல்லாம் அவள் தான் வாரிசு. கணக்கு வழக்கெல்லாம் புவனா தான் பார்க்கறாளாம் " என்று தனம்மா அடுக்களையில் இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு கேட்க  வேண்டும் என்று கத்தி சொல்லிக் கொண்டிருந்தார். படுப்பதற்கு பாயை சுருட்டிக் கொண்டு சென்ற செல்வம் ”என் தங்கச்சி மவளும் கூட பிளஸ்2 முடிச்சு இருக்கா. இந்த  வருஷம் தான்” என்று திண்ணையில் பாய் விரித்தார்.

" உங்க தங்கச்சி மவ படிச்சு கலெக்டர் உத்தியோகத்திற்கு போகப்போறா பாருங்க . மானூரில் மாடு மேய்க்கறதுக்கு படிச்சா என்ன படிக்காட்டி என்ன என்று நீட்டி முழக்கினாங்க  தனம்மா.

 

அதற்குள் திண்ணையிலிருந்து "குப்..குப்" ன்னு  சத்தம் போட்டுக் கொண்டு புகை வண்டி ஓட ஆரம்பித்தது ."அம்மா இந்த பாட்டி எப்படி பேசுறாங்க,? பாருங்கம்மா, இவங்களுக்காகவே நான் கலெக்டருக்கு படிக்கத்தான் போறேன்." ஆண்டி மடம் கட்டி ஆகாசத்துல கோட்டை கட்டி அடிக்கிற காத்துல இடிந்து விழுந்த கதையாக" பேசாதம்மா அந்த பாட்டி இயல்பு அப்படித்தான். இன்னும் ஒரு வாரம் தான் இங்கே இருக்க போறோம் கல்யாணம் முடிஞ்சதும் மூட்டைகட்டி போகப் போறோம். பேசாம போய் தூங்கு "என்று அலமேலு சங்கவிக்கு ஆறுதல் சொன்னாள்.

 

சங்கவி படுக்கலாம் என்று கூடத்திற்கு வரும்போது ஒரு அறையில் அசோக் பேசியது சத்தமாகக் கேட்டது "அம்மா என்னால் முடியாது சொன்னால் புரிஞ்சுக்கோங்க. இது கட்டாயப்படுத்தி வர விஷயம் இல்லை வாழ்க்கை பிரச்சனை" என்று கத்திவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான். இதை பார்த்துக்கொண்டிருந்த சங்கவி அவங்க குடும்ப பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு உறங்க போனாள். திண்ணையில் உறங்குபவர்களுக்கு  சொம்பில் தண்ணீர் வைக்கச்  சென்ற அலமேலுவிடம், உறங்காமல் விழித்திருந்த அசோக் "அத்தை உங்க பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுங்க என்று கேட்டால் சம்மதிப்பீர்களா" என்று எதிர்பாராதவிதமா  தேங்காய் தலையில் விழுந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்டான்.

"உனக்கு என்ன தம்பி சீமைராஜா நீங்க, இருந்தாலும் அண்ணன் அண்ணி கேட்கணும் அதானே முறை" என்று சொல்லிவிட்டு பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

கருக்கலில் மருந்து அடிக்கப் போகணும் அப்பதான் பூச்சிகள் வயலிலேயே இருக்கும். மருந்து அடிச்சா இறந்திடும் அதனால 5 மணிக்கெல்லாம் மருந்து அடிக்கற டின்னைக்  கட்டிக் கொண்டு கிளம்பினான் அசோக்.

 

மணி .."மாப்பிள்ளை" என்பதால் அவ்வளவாக வயல் வேலைக்கு செல்வதில்லை எப்பவும் மணி கிரிக்கெட் அம்பயர் மாதிரி, பீல்டில் இறங்கி அடிக்க மாட்டார். அசோக் "கவாஸ்கர்" மாதிரி பீல்டில்  தான் அவர் வேலையே, இருந்தாலும் அம்பயர்  இல்லைன்னா  மேட்ச் இல்லைங்கற  மாதிரி, மணி இல்லைனா விவசாயம் இல்லைன்னு  தங்கம் பெருமையோடு சொல்லாவாங்க, குறிப்பிட்ட வயதுக்கு மேல அடித்தளமாக இருந்து குடும்பத்தை உருவாக்கற கணவன் மதிப்பிழக்கிறார். வளர்ந்த பிள்ளைகள் தான் ஆதியிலிருந்து  உருவாக்கி சொத்தை கட்டிக் காத்தது போல வீட்டிற்கும் அம்மாவிற்கும் பெருமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இது தான் பெண்களின் இயல்பு தங்கம் மட்டும் விதிவிலக்கா என்ன? அவரும் பிள்ளைகள் தலையை தூக்கி வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

செல்வம் குடும்பத்தைப் பொறுத்தவரை தங்கமும் மணியும் தான் முடிவு எடுக்கும் நபர்கள். அவர்களின் முடிவு தான் அங்கே செயலாகும். எல்லா செயல்களுக்கெல்லாம் ஆலோசகர் மகாபாரத சகுனியே தனம்மா பாட்டிதான். ஆனால் ஒன்றுமே தெரியாதது போல வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு இருப்பார்கள்.

 

ஒரு வாரத்திற்கு வீடு கல்யாணக் களைகட்டும் வேலை மூச்சு முட்டும். வயலுக்கு வந்த அசோக் "அம்மா பேசியதையே  அசைப் போட்டுக் கொண்டிருந்தான். அசோக்குக்கு புவனாவை பிடிக்கும். ஆனால் திருமணம் செய்து வாழும் அளவிற்கு மனதிற்குள் நுழையவில்லை. அறிமுகமில்லாத யாரோ ஒரு பெண்ணை பெண் பார்த்து மணம் முடிக்கும் போது பெண்ணின் குணத்தை பற்றி தெரியுமா? அந்த பெண்ணும் புவனாவைப்  போல் குணம் உள்ளவராக இருந்தால் என்ன செய்வாய் என்று கேட்ட அம்மாவின் கேள்வியும்  நியாயமானது தான்.

 

சரி, குணத்தை கூட ஒதுக்கி விடலாம் என்று நினைத்த அசோக், ஒன்றாக வளர்ந்த புவனாவிடம் எதிர்பாலின ஈர்ப்பு ஏற்படவில்லையே... குழந்தையிலிருந்து ஒரே வயதுடன் ஒன்றாகவே வளர்ந்துள்ளனர். இதை எப்படி அம்மாவிடம் சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்தான் அசோக். அண்ணனின் திருமணத்தன்று எனக்கும் புவனாவுக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளை செய்கிறார்கள். என்ன செய்வது? என்று தெரியாமல் மனம் தவித்துக் கொண்டிருந்தான். 

 

அசோக் வீட்டில் எவ்வளவோ சொல்லி பார்த்தான். அம்மாவும் அண்ணனும் கேட்கவில்லை.புவனாவைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். அப்பா பாவம் அவருக்கும்  புவனாவைப்  பிடிக்காது. அம்மாவிற்கும் பயந்து வேறு வழி இல்லாமல் அமைதியாக இருக்கிறார் கிட்டத்தட்ட தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலையில்தான் அசோக் இருக்கிறான்.

 

இந்த சூழ்நிலையில்  சங்கவியைப் பார்த்ததும் அவளின்  குணம் அசோக் மனதில் அவள் மீது அன்பை உருவாக்கிவிட்டது. வயலிலிருந்து ஆட்களுக்கு கஞ்சி எடுத்துட்டு  போக வீட்டிற்கு வந்தான் அசோக். கஞ்சி காய்ச்சிக் கொண்டே மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தாள் சங்கவி. மாடுகளுக்கு வைக்கோல்   பிடுங்கிப் போடுவது போல அங்கு வந்த அசோக் பேச்சு கொடுத்தான். "இப்ப நான் உன்னை பெண் பார்க்க வருகிறேன். நான் தான் மாப்பிள்ளைன்னு வச்சுக்கோ என்னை பார்த்ததும் சம்மதம் சொல்லுவியா" என்று கேட்டான். திடீரென்று இந்த கேள்வியை எதிர்பார்க்காத சங்கவி "அப்பா அம்மாவிற்கு பிடித்திருந்தால் சரி என்பேன்." என்று சட்டியில் கழுவும் மீன் போல நழுவிக் கொண்டிருந்தாள்.

" உனக்கு பிடிக்கலைன்னாலும்  சரின்னு சொல்லுவாயா? என்று எதார்த்தமாக கேட்டான்.

"பிடிக்கலைன்னா எப்படி சரி என்று சொல்லுவேன்.  பிடிக்கலைன்னு தான் சொல்வேன்", என்று பளிச்சென்று சொன்னாள். 

"என்னை பிடிச்சிருக்கா?என்று வெளிப்படையாக கேட்டான். "ம்" என்ற ஒற்றைச் சொல்லுடன் அங்கிருந்து வேலையை பார்க்க நகர்ந்து விட்டாள். அவளுக்குத் தெரியாது "ம்"என்ற ஒற்றை எழுத்து அவள் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பது.

 

(சிறகுகள் படபடக்கும்)