ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #21

07:54 PM Apr 25, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

பெண் என்பவள் மாபெரும் சக்தியாகத் திகழ்கிறவள். மன வலிமை மிக்கவள். தியாகச்சுடர்... என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், அவள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கக் கூடியவள் என்கிற சிறு பலவீனமும் அவளுக்கு உண்டு.

சங்கவியும் அப்படிதான். அசோக் கோபப்பட்டதும் தன் கணவன் ஆணாதிக்கம் மிக்கவன் என்று நினைத்தாள். அசோக் குடும்பம் தன்னை அதிகமாக வேலை வாங்கும் போதெல்லாம், மாமா குடும்பத்தினர் கடுமையாக பேசும்போதெல்லாம், அதை அசோக், மௌனமாகக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளுக்குத் தோன்றாத அவனைப்பற்றிய ஆணாதிக்க பிம்பம், இப்போது மட்டும் ஏன் சங்கவிக்குத் தோன்றியது? தான் அடிமையாக இருக்கிறோமோ? என்ற எண்ணம் பொருளாதார சுதந்திரத்தில் தலையிடும் போது மட்டும் ஏன் அவளுக்குத் தோன்றியது? இது சங்கவியின் தவறல்ல.

காலம் காலமாக பெண்கள் தங்கள் சிறு தேவைகளுக்கும் பொருளாதார ரீதியில் ஆண்களைச் சார்ந்தே இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமூக அமைப்பே இங்கு கால காலமாக இருந்து வந்திருக்கிறது. இதில் அதிகம் பாதித்தவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள்தான். விவசாயக் கூலியாக இருக்கும் பெண்களுக்கும் உயர்மட்ட வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் இந்த நிலை இருந்ததில்லை. அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இருந்தது. இதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தான், கணவரிடம் அனைத்திற்கும் கையேந்தி நின்று கொண்டும், கணக்கு சொல்லிக்கொண்டும் இருக்க நேர்கிறது. அதிலும் பணத் தட்டுப்பாடு ஏற்படும்போது, மனைவியால் தான் அது ஏற்பட்டது என்ற கணவரின் குற்றச்சாட்டையும், வாழைப்பழம் பிறர் குத்தும் ஊசியைச் சத்தமில்லாமல் விழுங்குவது போல அவர்கள் விழுங்கிக்கொண்டு, பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அத்தகைய பெண்களுக்கு வழிகாட்டும் போராளிகளான, பெரியார், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் கல்வி என்னும் விடிவெள்ளியை பெண்களின் வாழ்வில் ஏற்றிவைக்கப் போராடினார்கள்.

கல்வியின் மூலம் கிடைத்த பொருளாதார சுதந்திரம் தான் இப்போது, பெண்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் போராளியாகவும் மாற்றிவருகிறது. பல பிறவிகளாய் ரத்தத்தில் ஊறிய அடிமைத்தனம் என்ற நிலையை அது மாற்றிவருகிறது. அதனால்தான் தன்னைப் படித்து வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னதும் சங்கவிக்கு மனசு வலித்தது. வலியுடன் தான் அந்த அறைக்குள் வந்தாள்.

அசோக் "என் மீது கோபமா" என்று கேட்டுக்கொண்டே சங்கவியின் அருகில் வந்தான். அருகில் நிற்கும் அசோக்கின் கையில் இருந்த பேப்பரை பார்த்ததும் சங்கவி லேசாக அதிர்ச்சியானாள். அது ஒரு பத்திரத்தின் ஜெராக்ஸ் போல இருந்தது. எனினும், கோபத்தை ஓரம்கட்டிவிட்டு...

" என்னங்க இது" என்று ஆச்சரியமாக கேட்டாள். "நிலப்பத்திரத்தின் ஜெராக்ஸ்"

"எந்த நிலப் பத்திரம்? என்ன ஜெராக்ஸ்? அது ஏன் உங்கக் கிட்ட இருக்கு?” என்று கேள்விகளால் கட்டிடம் கட்டினாள் சங்கவி.

"இரண்டு நாள் முன்னாடி காசி செட்டியாரைப் பார்த்தேன். பாத்திரம் வாங்கும் போது. மாமா அறிமுகப் படுத்தினாரே அவரைத்தான் பார்த்தேன்" என்று அசோக் சொன்னதும் , ஏதோ முக்கியமான விஷயமாக இருக்கும் என்று கவனமாக கேட்டாள் சங்கவி.

" அப்பா உனக்கு சீர் செய்வதற்காக அவருடைய நிலத்தை செட்டியாரிடம் தான் அடமானம் வைத்திருக்கிறாராம். பணம் வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டி விடுகிறேன் என்று சொல்லி இருக்கார். விவசாயத்தில் வருவது வயிற்றுக்கும் வாய்க்குமே பத்தாது. இதுல எங்க இருந்து நிலத்தை மீட்க போறாரு? உங்க அப்பாவை நினைச்சா பாவமாக இருக்கு. எதுக்கும் இருக்கட்டும்னு அடமான பத்திரத்தை ஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்தேன்" என்று மாமா மீது அன்பு உருக அசோக் பேசியதைக் கேட்டதும் சங்கவிக்கு அழுகையே வந்துவிட்டது.

சங்கவியின் கண்ணீரை பார்த்ததும் "விடு...சங்கவி நாம் ஏதாவது உதவி செய்து நிலத்தை மீட்டு எடுப்போம்" என்று ஆறுதலாக பேசினான்.

அசோக்கின் அன்பை புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டோமே என்று சங்கவி அழுததை, அப்பாவின் கஷ்டத்தை நினைத்து அழுகிறாள் என்று புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினான் அசோக்.

" என்னை மன்னிச்சிடுங்க நீங்க அப்பா அனுப்பிய அந்த பேப்பரை கிழித்து போட்டதும் உங்க மேல கோபம் கோபமாக வந்துச்சு. மாட்டுக் கொட்டகையில் உட்கார்ந்து அழுதேன்.” என்று குழந்தை போலக் கூறிய அவள் வார்த்தைகள், அசோக்கின் நரம்புகளில் அன்பின் ராகத்தை வாசித்தது. சற்று அவள் அருகில் நெருங்கி வந்து கைகளை ஆதரவாகப் பிடித்தான். அதில் அன்பின் ஆலாபனை ஆரம்பித்தது. அசோக்கோ,

" ஏன் கிழிச்சி போட்டேன்னு புரியலையா? வீட்டில் எல்லார் எதிரிலும் நீ படிக்க போறேன்... பரீட்சை எழுதப் போறேன்ன்னு சொன்னால், உன்னை நல்லா படிம்மான்னு உட்காரவைத்து சோறு போடப் போறாங்களா? உன்னை அதிகமா வேலை சொல்லிப் படிப்பைக் கெடுக்கப்பதற்கு என்ன எல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் பண்ணுவாங்க. அதிலும் என் பங்காளிக்கு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் உனக்கு வேலை கிடைக்காமல் பண்ண மாட்டானா? அதனாலதான் கோபப்பட் மாதிரி நடிச்சேன்” என்று சங்கவிக்கு ஆதரவாகப் பேசினான்.

"அப்ப நான் குரூப் ஃபோர் பரீட்சை எழுதவா?" என்று அப்பாவியாகக் கேட்டாள்.

"அப்பா கடன் அடைத்து நிலத்தை மீட்கனும்னா, நீ பரீட்சை எழுது" என்று அசோக் பெருந்தன்மையுடன் சொன்னான்.

" பேசிப் பேசியே பாவக்காய் பந்தலில் பால் வடிய வச்சாளாம், ஆடி ஆடியே அரளிப் பூ செடியில் தேன் வடிய வச்சாளாம் வித்தாரக்கள்ளி" ங்கற கதையா உன் மகனை மயக்கி, கல்யாணம் பண்ண மாதிரி, தலையணை மந்திரம் ஓதி உன்னையும் உன் மகனையும் பிரிக்கப் போறாள். பாய் எடுக்கறேன்னு ரூமுக்கு போனவள் இன்னும் வரவில்லை பாரு" என்று கொதிக்கிற எண்ணெயில் வடையை போட்டாள் அண்ணி நாகம்மா. எண்ணெயில் போட்ட வடை புசுபுசுன்னு கிளம்பியது.

"த...சங்கவி இன்னுமா பாய் எடுத்துட்டு வர்ரே?’, என்று குரல் கொடுத்தார் தங்கம்.

"இதோ எடுத்துட்டு வரேன்த்தே" என்று பதில் குரல் கொடுத்துவிட்டு,

" மாமா உங்க அம்மா கூப்பிடறாங்க. நான் பிறகு வர்றேன்" என்று சொல்லிவிட்டு பாயை எடுத்துக்கொண்டு ஓடினாள். சங்கவி பாயைப் போட்டு விட்டுப் படுத்ததும், தங்கத்தின் காலை அழுத்தி விட்டுத் தூங்க வைப்பது சங்கவியின் வேலையாக இருந்தது. இன்றும் அப்படியே தங்கத்தின் காலை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனம் அசோக்கை சுற்றியே இருந்தது.

"பெண்கள் எப்போதும் ஒரு விஷயத்தை அந்த நிமிடத்தில் வைத்து முடிவெடுக்க கூடியவர்கள். ஆண்கள் அந்த விஷயத்தின் விளைவுகளை சிந்திக்க கூடியவர்கள். நகை கடைக்குச் சென்று நகை வாங்கும்போது கூட, நகையை வாங்கி தனக்கு நல்லா இருக்கான்னு போட்டு பார்ப்போம். அதுவும் கல் வைத்த நகை மட்டுமே ஆசைப்படுவோம். ஆண்கள் கல் வைத்த நகையை விரும்ப மாட்டார்கள் காரணம் அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைக்க முடியாது. நகையில் கல்லுக்கு எடையும் கூடும். அதுமட்டுமில்லாமல் கல்லுக்கும் தனியாக பணம் வாங்குவார்கள். இதையெல்லாம் ஆண்கள் யோசிப்பார்கள். பெண்கள் நாகரீக நகையாக வேண்டும் என்று மட்டுமே யோசிப்பார்கள். அதனால்தான் ஆண்கள் குடும்ப தலைவராகப் பொறுப்பேற்றார்கள் போலிருக்கிறது. என்றெல்லாம் அவள் மனம் தாறுமாறாய் யோசித்தது.

இதுமாதிரிதான் அசோக்கும் யோசித்து அந்த பேப்பரை கிழித்து போட்டான். நான் தவறாக நினைத்துவிட்டேன் என்று மனதுக்குள் மன்னிப்பு கேட்டாள்.

பெண்களின் அன்புச் சுனை நீர் போல. திடீர் திடீரென்று ஊற்றெடுக்கும். சங்கவிக்கு அசோக்கை இப்போதே மீண்டும் பார்க்கவேண்டும் போல் தோன்றியது.

" அம்மா தண்ணீர் குடித்துவிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் ஓடினாள். அசோக் படுத்துக்கொண்டு பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் − சுசீலாவை நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். உள்ளே வந்த சங்கவி

"மாமா நெசமா நான் பரீட்சை எழுதினால் வேலை கிடைக்குமா?" என்று ஆர்வமாக கேட்டாள்.

"வேலை கிடைக்கிற மாதிரி அறிவுபூர்வமாக எழுதினால் கிடைக்கும் "என்று சொல்லிக் கொண்டே சங்கவியின் கைகளை பிடித்தான். அதில் ஆசை அப்பி இருந்தது. ஆனால் அவசரமாகக் கைகளை விடுவித்த அவள்...

" அச்சோ ...மாமா அத்தை விழிச்சிட்டு இருக்காங்க கூப்பிடுவாங்க"என்று சொல்லி விட்டுத் திரும்பவும் கூடத்திற்கு வந்து தங்கத்திற்கு கால் அழுத்தி விட ஆரம்பித்தாள். .

ஏதோ நினைவு வந்தவளாக "அம்மா பாலுக்கு உறை ஊற்றவில்லை. ஊற்றி விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு அசோக்கைப் பார்க்க ஓடினாள்.

"மாமா ..மாமா.. வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் கொஞ்சம் எங்க அப்பாவுக்கும் தர அனுமதிப்பீங்களா?”ன்று உருக்கமாகக் கேட்டாள். அவளிடம் தாவி வந்தான். அவள் விலகி நின்றாள். அவளிடம் ஒருசேர எதிரொலிக்கும் பயத்தையும் ஆசையையும் புரிந்துகொண்டு புன்னகைத்தபடியே...

" சரி, பயப்படாதே. நான் விழுங்கிட மாட்டேன். உங்க அப்பா கடனை அடைத்து நிலத்தை மீட்க மாட்டியா?? என்று கேள்வியையே பதிலாக்கினான் அசோக்.

" மாமா நீங்களும் பரீட்சை எழுதலாமே" என்று அறிவாளி போலக் கேட்டாள் சங்கவி.

" அம்மா தாயே.. மகராசி இப்பவாவது நான் பியூசி படிச்சவன்னு, உனக்கு நினைவு இருக்கே" என்று கிண்டலாகக் கேட்டான் அசோக்.

" சாரி ...மாமா” என்று குழைந்து விட்டு மீண்டும் கூடத்திற்கு வந்தாள்.

"ஆவாரம்பூ காட்டுல பூப்பறிக்க போன பூவாத்தா பூச்சாண்டி வரான்னு பூக்காம்புல ஒளிஞ்சிகிட்டாளாங்கற கதையா" கூடத்துக்கு அறைக்கும் அளவெடுத்துகிட்டு இருக்க"என்று தனம்மா பாட்டி கிண்டலாக பேசினார். வேறு வழியில்லாமல் அங்கேயே படுத்தாள். சங்கவிக்கு மனம் சந்தோசத்தில் மிதந்தது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பெருமாள் சங்கவி கூடத்தில் படுத்து இருப்பதை பார்த்தார்.

"அடியேய்... தங்கம் வீட்டில் இருக்கிற ஆடு மாடு கோழி எல்லாம் ஜோடி சேர்க்கற பெத்த புள்ளைய தவிக்க விடற"என்று அதட்டலாக கேட்டார்.

"ஆமாம் நான் தான் கையை புடிச்சி வச்சிருக்கேன். போறவ போய் படுக்க வேண்டியது தானே? நம்மள கேட்டா கல்யாணம் பண்ணாங்க" என்று வெறுப்பாக பேசினாள் தங்கம்.

"சங்கவி நீ உள்ள போய் படுமா" என்று பெருமாள் கூறியதும் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அறையில் படுத்தாள். சங்கவிக்கு ஒவ்வொரு விடியலும் ஏதோ ஒரு பிரச்சினையைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தான் விடிந்தது. விக்கிரமாதித்தன் வேதாளத்தை பிடிப்பது போல சங்கவியும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக ஏதாவது முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறாள்.

தண்ணீரில் வெண்ணையை எடுத்துவிடலாம் போல. வீட்டில் உள்ளவர்கள் மனதில் இடம் பிடிப்பது கஷ்டமாக இருந்தது.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் மணியின் மனைவிக்கு அப்படியொரு நிகழ்வு நடக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

விதியின் விளையாட்டை யார் அறிவார்?

( சிறகுகள் படபடக்கும்)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT