ADVERTISEMENT

காதலுக்காக அப்பாவை பிரிந்த மகள்; பாசப்போராட்டத்தில் டுவிஸ்ட் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 28

03:42 PM Mar 28, 2024 | dassA

காதலால் மகள் பிரிந்து சென்றதை தாங்க முடியாத நபர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து ஜெய் ஜென் விவரிக்கிறார்.

ADVERTISEMENT

இந்த நபர் என்னிடம் கவுன்சிலிங் வந்து தன் கதையை சொல்லும்போதே ஆச்சர்யமாக இருந்தது. என்னவென்றால் அவருக்கு விவாகரத்து ஆகி இருக்கிறது. பொதுவாக இப்படி கணவன், மனைவி பிரியும் போது, பெரும்பாலான குழந்தை அம்மாவிடம் தான் செல்லும். ஆனால் இவரது மகள் அப்பா கூடத் தான் போவேன் என்று தனது பத்து வயதில் சொல்லி இருக்கிறது. அவர் என்னிடம் சொல்லும்போதே மகள் இல்லை என்றால் தன் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறார். காலை எழுந்ததிலிருந்து அவரது மகள் குட் மார்னிங் சொல்லித் தான் அவர் அந்த நாளையே தொடங்குகிறார். இந்த பெண் கல்லூரி முடித்து வெளியே வந்தவுடன் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்கிறாள்.

ADVERTISEMENT

இவரும் தன் பெண்ணிற்காக அந்த பையனை போய் பார்க்கிறார். கவனித்ததில் சரியான ஆள் இல்லை என்று தெரியவந்து மகளிடம் எடுத்துச் சொல்கிறார். முதன் முதலாக இருபது வருடத்தில் தனது மகளுக்கும், தந்தைக்கும் பிரச்சனை வருகிறது. சண்டை எப்போதாவது என்று இருந்தது, பிறகு அடிக்கடி இருவரும் வாக்குவாதம் செய்து செய்து அவர்களின் உறவு மாறி விடுகிறது. இப்படி திடீரென்று ஒருநாள் தன்னுடைய மகளை வீட்டில் எங்கு தேடியும் காணவில்லை. போன் பண்ணியும், நண்பர்களிடம் கேட்டும் தெரியவில்லை. அப்போது தான் புரிந்தது, தன் மகள் ஓடிவிட்டாள் என்று. மூன்றாவது நாள் என்னுடைய கவுன்சிலிங்கில் இருக்கிறார். இறந்தே போய்விடலாம் என்று முடிவெடுத்து வெறுத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தன் நண்பரின் சிபாரிசு மூலம் என்னை பார்க்க வந்திருக்கிறார்.

நான் அவரிடம் அந்த பையனை வேண்டாம் என்று சொல்ல ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கேட்டேன். அந்த பையன் எந்த வேலைக்கும் போகாமல், எந்த ஒரு முதிர்ச்சியும் இல்லாமல், விளையாட்டுத்தனமாக இருந்தான். ஒன்றிரண்டு கெட்ட பழக்கம் வேறு இருக்கிறது, படிப்பில் சுமார். ஆனால் என் பெண் ரொம்ப முதிர்ச்சியான எண்ணம் உடையவள். அவன் எந்த வகையிலும் என் பெண்ணிற்கு ஏற்றவாறு இருக்கமாட்டான் என்றார். நான் அவரிடம், இப்போது உங்கள் மகள் எங்கு சென்றாள் என்று தெரியவில்லை அவ்வளவு தானே முதலில் அவர்களை வரச்சொல்லி பேசி பார்ப்போம். உங்கள் மகள் எடுத்திருக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும் என்றேன். ஓரளவு அவள் எங்கிருப்பாள் என்று தனக்கு தெரிகிறது. ஆனால் யாரும் உண்மையை சொல்ல மறுக்கிறார்கள் சார் என்றார்.

எனக்கு தெரிந்த ஆட்களை வைத்தும் அவரும் முயற்சி செய்து இறுதியில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டோம். அந்த பெண் வர மறுக்கிறாள். அத்தோடு என் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் அப்பா என்றாள். நான் அந்த பெண்ணிடம் பேசி நிலைமையை சொல்லி இப்படி கவுன்சிலிங்கில் பேசலாமா என்று கேட்டேன். நாங்கள் நண்பர்களுடன் பத்திரமாகத் தான் இருக்கிறோம் என்றாள். அத்தோடு நான் பேசியதை கேட்ட பிறகு அவரையும் கூட்டி வருகிறேன், அவர் இப்போது என்னுடன் இங்கு இல்லை. ஆனால் சொன்னால் வருவார் என்றாள்.

இந்த நபர் மிகவும் அழுது, ரொம்ப உடல் வருத்தப்பட்டு சோர்ந்து போயிருந்தார். அவரால் பேசவே முடியவே இல்லை. நண்பரை அழைத்து அவரை மருத்துவமனை கூட்டிச் செல்லுங்கள் என்றேன். பின்பு அந்த பெண் என்னை பார்க்க வருகிறார். அவள் மட்டுமே வந்தாள், அந்த பையன் வரவில்லை. நான் அவரிடம் பேசிக்கொண்டிருக்க, அவர் வந்து விடுவார் என்று உட்கார்ந்தே இருந்து, மதியம், மாலை என்று நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த பையன் வருவது போல தெரியவில்லை. இந்த பெண் வெளியே சென்று தனியாக போன் போட்டு, நெடுநேரம் கழித்து கடைசியாக பேசியபோது, அவன் சொல்லிய பதில், என்ன இது ஆள் எல்லாம் வைத்து கூப்பிட்டுக் கொண்டு, என்னால் இப்படி எல்லாம் வர முடியாது என்று சொல்லியிருக்கிறான். இந்த பெண் எவ்வளவோ எடுத்து சொல்லி நம் நிலைமை எல்லாம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள், அதற்கு பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டு பார்த்தும் பதில் இல்லை. இறுதியாக ஆறு மணி நேரம் கழித்து நீ வருவியா மாட்டியா என்று கேட்க பதில் இல்லை.

எனக்கு புரிந்து விட்டது. நான் அந்த பெண்ணிடம், ஒரு அப்பாவாக நினைத்து என்னிடம் சொல்லுமா, உங்களுக்குள் ஏதும் நடந்து இருக்கிறதா என்று கேட்க, அந்த பெண் தயங்கி ஆமாம் ஒரு 3,4 மாதம் முன்பு என்று சொன்னார். இனிமேல் அவன் வரமாட்டான் என்று எனக்கு புரிந்தது. அந்த பெண்ணிற்கும் ஏழு மணி நேரம் கழித்து புரிந்து அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறாள். சரி இதான் நான் அனுப்பும் கடைசி மெசேஜ். இனி நாம் சந்திக்க ஒன்றும் இல்லை என்று அதோடு தொடர்பை துண்டித்து விட்டு வந்தார். அவர் அப்பா மருத்துவமனையிலிருந்து வந்ததும் மகள் அவர் காலில் விழுந்து மன்னித்துவிடுமாறு கதறி அழ, அவர் நீ என் பொண்ணு மா என்று பேசி அங்கு நிலைமை சீராகிறது. அவரிடம் நான் இதுவரை நடந்த எதுவும் பேசவேண்டாம். உங்கள் பெண் உங்களிடம் வந்து விட்டார் என்று சொல்ல, அந்த பெண்ணிற்கு தான் அவ்வளவு கோவம் இருந்தது, அவனை ஏதாவது செய்ய வேண்டும் சார் என்று. அது அப்பறம் இருக்கட்டும் நீ உன் அப்பா என்ற சிந்தனை மட்டுமே கவனத்தில் வைத்திரு. அதை பின்னர் பார்த்து கொள்ளலாம். நீங்கள் இருவரும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று பின்பு யோசியுங்கள் என்று சொல்லி அந்த கவுன்சிலிங்க் முடிந்து விட்டது.

அதன் பின்னர் அவர்கள் யோசித்து முடிவெடுத்து யாரோ வைத்து அந்த பையனை கூப்பிட்டு கண்டித்து என்று அடுத்தடுத்து நடந்து இருக்கிறது. ஆனால் பார்க்கவேண்டியது அந்த பெண் தன் தந்தையிடம் பத்திரமாக சேர்ந்தது தான். இன்றைய காலத்தில் இனிமேல் காதல் திருமணம் செய்ய இருக்கும் பெண்கள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது, முதலில் அந்த பையனை வரவழைத்து குடும்பத்தோடு சந்திக்க வைத்து பேசுங்கள். அவன் வர தயங்குகிறான் என்னை எப்படி கூப்பிடலாம் என்று பேசினான் என்றாலே எப்படி அவனை நம்பி எதிர்காலத்தில் அத்தனை காலம் வாழ முடியும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT