ADVERTISEMENT

'அவனின் நினைவுகளை நான் ஏன் இன்னும் ஆமை ஓட்டினைப் போல சுமக்க வேண்டும்' - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #7

10:52 AM Oct 19, 2019 | suthakar@nakkh…

சுந்தரி அக்காவை அத்தனை சந்தோஷமாய் நான் பார்த்ததேயில்லை, அந்த வீடு 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கல்யாணக் கோலம் பூண்டு இருந்தது. வாசலெங்கும் தோரணங்களும் வீடு முழுக்க உறவினர்களும், விருந்துக்கு சமைக்கப்படும் பாத்திரங்கள் கூட குதூகலமாக கும்மாளமிட்டன. நொடிக்கொருதரம் சுந்தரி அக்கா கண்ணாடியின் முன் நின்று மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள். சிகப்புகரை போட்ட சந்தனகலர் பட்டுபுடவையில் சுந்தரியக்காவின் கருமை நிறம் சற்றே மட்டப்பட்டு கல் அட்டிகையுமாய் அவளின் அழகு தூக்கலாகவே இருக்க நெட்டி முறித்துவிட்டுப் போகும் போது என் கண்ணே பட்டுடும் போல இருக்கு இனிமேவாவது உன் வாழ்க்கை சிறக்கட்டும்.

ADVERTISEMENT



விடிந்தால் திருமணம், பணம் காசுன்னு இருந்து என்ன புண்ணியம், பிள்ளையோட தலையெழுத்து நல்லாயிருக்கணும் இல்லை, எத்தனை சொற்கள் எத்தனை வார்த்தைகள் சாட்டையாய் மாறி யார் தவறு செய்தாலும் தண்டணை என்பது பெண்களுக்கு மட்டும்தானே சற்றே விவரம் தெரியாத வயதில் பாதியில் நின்ற படிப்பைப் பற்றிக் கூட கவலைப்படாமல், அம்மா அப்பாவிற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே?! ஆனால் எல்லாமே கனவாகிப் போனது இடுப்பின் மறைவில் சேலையை ஒதுக்கிப் பார்த்தவள் கணவின் சிகரெட் சூட்டால் மேடிட்ட இருந்த தழும்பைத் தடவினாள்.

அவனின் நினைவுகளையே நான் ஏன் இன்னும் ஆமை ஓட்டினைப் போல சுமக்க வேண்டும். தலையை சிலிப்பிக் கொண்டு உதறினாள். அலமாரியில் எடுத்து வைத்த கொலுசை பார்த்தவள் மீண்டும் புடவையை நெகிழ்த்திட அங்கேயும் ஒரு அச்சு. அந்த தழும்பின் காரணம் நினைவுக்கு வந்தது. சின்ன பிள்ளையில் இருந்து தம்பி மாதிரி பழகிய அவனின் வரவுக்கு கிடைத்த பரிசு. குரங்கை நினையாதே என்று சொல்லும் போதுதான் மனது அதையே நினைக்கும் என்பதைப் போல, சுந்தரியின் மனதும் அதையே நினைத்தது. இன்று முகம் மலர்ந்து தாமரையாய் பூத்து குலுங்கும் அக்காவின் முகம் இத்தனை நாள் எப்படி சூம்பிப் போய் இருந்தது என்று!

இதே போன்று கல்யாண கோலத்தில் அக்காவுடன் அவளை விடவும் சிகப்பாய், பாட்டி சொல்லும் கதைகளில் வரும் ராஜாவைப் போல அந்த ஆள் நின்று கொண்டு இருந்தானே நான் முதன் முதலில் என்னுடைய ஆறாவது வயதில் இந்த சுவரில் தொங்கப்பட்டு இருந்த புகைப்படம்தான் நினைவில் வந்தது. நான் இந்த வீட்டுக்கு வந்தபோதுதான், அக்காவும் வந்திருந்தாள். என் காலுக்குடியில் சில்லு சில்லாய் உடைந்த அந்த புகைப்படத்தின் கண்ணாடித் துகள்கள் குத்திப் பதம் பார்ப்பதற்குள் சுந்தரியக்கா அதை நகர்த்திவிட்டு என் கையைப் பிடித்து அமைதியாய் அறைக்குள் கடந்துவிட்டாள்.

ADVERTISEMENT



வெளியே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் சப்தம் ஆனால், அக்காவின் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீர் என் பழைய பாவடையை நனைத்துக் கொண்டு இருந்தது. அன்றிலிருந்தே நான் அக்காவின் துணையாகிப் போனேன். அழுத கண்களும் சோகம் அப்பிய முகமுமாய் இருக்கும் அக்காவை ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்குப் பிடிக்காமல்தான் போனது. ஆறுவயதில் அவளின் அழுகைக்கான காரணம் மட்டும் புரியவில்லை. பலநேரங்களில் அவள் கையில் இருக்கும் தடிமனான புத்தகங்களில் ஆழந்து விடுவாள்.

சாப்பிடுகிறேன் பேர்வழி என்று அவள் கொறித்துவிட்டு மீதி எல்லாம் என் தட்டில்! பல நேரம் நான் அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பேன். ஏதோ இனம் புரியாத வேதனை அதில் குடிகொண்டு இருக்கும் எத்தனை அற்புதமான மனுஷி அவள் உண்பதில், உடுத்துவதில் ஏன் உறக்கத்தில் கூட ஒரு நேர்த்தியிருக்கும் அவளிடம். ஆனால் நடு இரவில் அரையிருட்டில் குளிப்பதும் சரம்சரமாய் கண்ணீர் விடுவதும் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது.



சுந்தரி அக்கா ஏம்மா அழுதுகிட்டே இருக்கு, ஏதோ பெரிய மனுஷியிடம் கதை சொல்வதைப் போல அம்மா என்னிடம் சொல்லினாள். சுந்தரி அக்காவுக்கு நாலு வருஷத்திற்கு முன்னாடி கல்யாணம் ஆச்சுல்லே! அந்த மாப்பிள்ளைக்கு ரொம்ப சந்தேகமாம். அதனால...

இரு...இரு...சந்தேகமா அப்படின்னா....

நேத்து நீ மிட்டாய் எடுத்தியான்னு உங்க அத்தைக்காரி கேட்டாளே அதுதான்....

அப்போ அக்கா அங்க எதையாவது திருடிட்டு வந்திடுச்சா.

வாயை மூடு உன்கிட்டே போய் சொன்னேன் பாரு. அடுத்த சில நாட்களிலேயே அழுதது போதும் என்று நினைத்தாள் போதும், அத்திப் பூத்தாற் போல் சில வேளைகளில் விளையாடுவாள். பாட நோட்டில் படம் வரைந்து தருவாள். ஆனால் நிராசையாய் சில நேரங்கள் அக்கா அமைதி காப்பதை நானும் கண்டு கொண்டேதான் இருந்தேன். வலி மிகுந்த அவளின் பார்வைகள் போட்டோ மாட்டிய அந்த சுவற்றை சுற்றியே இருக்கும். கெட்டிமேளம் கெட்டிமேளம் மீண்டும் கல்யாணக்கோலம். சுந்தரி கண்களைக் கசக்கிக் கொண்டு மறுவீடு செல்லத் தயாரானாள். நாட்கள் நகர்ந்தது நினைவுகள் தப்பிப்போன பறவையைப் போல மீண்டும் அதே அறை இருளைப் பூசிக்கொண்டது முன்பை விடவும் அதிகமாய். சுவற்றில் அடித்த பந்தைப் போல அக்கா இரண்டே வருடங்களில்! அதே அழுகையோடும் கண்ணீரோடும் நான்கு வருடங்களுக்கு முந்தைய நிலையைப் போலவே, என் மடியில் அரற்றியபடியே!



கல்யாண நாள் போலவே மீண்டும் கண்ணாடியின் முன் நின்று தன்னையே உற்றுப் பார்க்கிறாள் சுந்தரி, முதலிரவு அறையிலேயே இதே போல் கண்ணாடியின் முன் தன் முழு அழகையும் ரசித்தானே அவன் தன் நடுநெஞ்சில் புதுத் தாலியைச் சுமந்தபடி நின்றாளே அன்றிலிருந்து இன்றுவரையில் அவளின் நிலையே அப்படி பொம்மையாய் நிற்பதைப் போல இருந்தது. இந்த சூடு யார் போட்டது உன் முதல் புருஷனா என்ற வார்த்தை தீண்டல்களோடு! விரல்களின் வக்கிரத் தீண்டல்களும்.

இருபது நாட்கள் வெறும் படுக்கையறைப் பாவையாய் மட்டும் மனைவியின் மார்புகுள் மறைக்கப்பட்ட மனதிருக்கும் என்று அந்த மருத்துவனுக்குப் புரியவில்லை, அரசாங்க உத்தியோகம் அந்த வேலைநேரம் பெரும் பிரிவு போல, தன் தனிக் கீளினிக்கு அழைத்து செல்வான் என்னடா கட்டினவளை கங்காரு மாதிரி சுமந்திட்டே திரியறே என்ற சீண்டல்களிலும், பரவாயில்லை லேட்டா கிடைச்ச வாழ்க்கை அதுவும் இரண்டாவது ஒரு நொடி கூட விட்டு பிரியாம இருக்காரே? என்ற பெற்றோரின் பேச்சு எதுவும் ரசிக்கவில்லை. அவர்களுக்குத் தெரியுமா. முதலில் பட்ட சூடு உடலில் இப்போது வெளியே தெரியாமல் நெருப்பு கனன்று கொண்டு இருக்கிறது என்று! படுக்கையறையின் சாத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இன்னுமொரு இரவை சந்திக்க பயமும் தவிப்புமாய் மீண்டும் மீண்டும் கதவுகள் அடைபட்டுக் கொண்டு அஞ்சிய நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சியாய்! தூறிய மழைக்கு முளைத்த காளானாய் துடிக்கத் துடிக்க இரவுகள் நனைந்தது. அவளின் உடலில் அவன் விரல்கள் காதலை தவிர்த்து காமத்தை மட்டுமே பாடின.

உச்சகட்டமாய்! 20 நாட்கள் விடுமுறை முடிந்ததும் அவரவர் ஊருக்கு பணிக்குச் செல்ல வாரம் ஒருமுறை மட்டுமே சந்திக்கும் நிலை கணவனுக்கும் மனைவிக்கும். சுந்தரியைப் பொறுத்தவரையில் இந்த ஐந்து நாட்கள் நிறைவாகவே இருந்தது இயல்பாக மூச்சு விட முடிந்தது. அடுத்த இரண்டு நாட்களை நினைத்து மனம் பதைபதைத்தது. தாங்க முடியாத வலியோடும் வேதனையோடும், புலிக்கூண்டில் மாட்டிய இரையைப் போல தடுமாறிப் போனாள். அவளின் மருத்துவமனையில்! நோயாளிகள் காத்திருக்க திடுமென வந்திறங்கியவன் கதவைச் சாத்திக் கொண்டு உறவுக்கு வற்புறுத்த அய்யோ என்று மனது அலறிப்போனது. இழுத்துப் பிடித்த பொறுமை வெடித்து சிதறியது. அவனின் காமக் கதவுகளை உடைத்தெறிந்தாள் சுந்தரி மீண்டும் நலுங்கிய ஓவியமாய்! நசுங்கிய காகிதமாய்! நடந்தவைகள் சந்தியில் பந்தி வைக்கப்பட்டது. அவள் உறவிற்கு சரியில்லையாம் நகை மாட்டும் அலமாரியைப் போலதான் இருக்கிறாள் உணர்ச்சியை மறந்து மரக்கட்டையைப் போல! அவளின் கருப்பை வெறும் பையாய் மட்டுமே இருக்கிறதென்ற அங்கலாய்ப்பில்!

மீண்டும் கதவுகள் வாழவெட்டியென்ற பெயரோடு சாத்தப்பட்டன. வக்கிரங்கள் படிந்தன, கொல்லைப்புரத்தில் கொக்கி போட்டன பார்வைகள் அடுப்பங்கரையில் அள்ளிக் கொள்ளத் துடித்தன கண்களினாலேயே அவள் கற்பழிக்கப்பட்டாள். வஞ்சியர்களின் வார்த்தைகளால் காயப்பட்டாள். இப்போதும் கதவுகள் சாத்தப்பட்டன அவளின் கடைசி இரவுக்கு! தாய் தந்தை என்று நம்பிய குற்றத்திற்கு, இருமுறையும் திருமண பந்தத்தில் ஏமாற்றத்தை இழந்ததற்கு இன்று இதோ இரண்டு புகைப்படங்கள் சுமந்த சுவரின் அடியில் கிடத்தப்பட்டு இருக்கிறாள் சுந்தரியக்கா, நான் அவள் பிடிமானமில்லா விரல்களை கோர்த்தபடியே அவளை வெறித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் எத்தனை சுந்தரிகள் சாத்தப்பட்ட கதவுக்கு பின்னால் சிதைந்து கொண்டு இருக்கிறார்களோ!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT