ADVERTISEMENT

"அடங்கிப் போ என்று பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதை விட அரணாய் இரு என்று.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #24

11:00 AM Mar 07, 2020 | suthakar@nakkh…

வன்முறைகளுக்கு நடுவில் ஒரு பூங்கொத்து மார்ச் மகளிர் தினம். யாரை நம்பி நான் பொறந்தேன் என்று நடிகர் திலகத்தின் பாடல் ஒன்று இருக்கும், அப்படித்தான் பெண்கள் இந்நாளில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். பெண்மை என்னும் பொருள் இலக்கியங்கள் வர்ணித்தது இதயங்கள் இம்சித்தது. விளம்பரங்கள் விற்பனை செய்தது, சினிமா சிந்தையை கலங்கடித்தது. இயற்பியல் காதல் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் கம்பிகளைப் போல முறுக்கிக்கொண்டு. நேசிக்க ஒரு இதயம் சுவாசிக்க தேடி மறுத்துவிட்டாள் என்ற ஆதங்கத்தில் அமிலம் ஊற்றி சிதைக்கிறான். அந்த சிதையில் எரியும் பெண்ணின் யோனிக்காக துடிக்கிறான். ஏன் ஆண்மகனின் அருகாமை ஆறுதலைத் தர முடியவில்லை சில காலங்களாய். இது ஆண்டுகள் தோறும் தொடரும் கதைதான் பட்சி ஒன்று சிக்கியிருக்கிறது சிதைக்க காத்திருக்கிறாயே வா என வல்லூறுகளுக்கு தகவல் அனுப்பிடவே இன்றைய தகவல் தொடர்பு சாதனங்கள் தங்கள் பரிமாற்றங்களில் சதைப்பசியைத் தீர்த்துக் கொள்ளும் மட்டரக வீடியோக்கள்.

ADVERTISEMENT



நம்பித்தானே வந்தேன் என்ற வார்த்தைகள் காலம் முழுக்க காற்றோடு காற்றாக நம்மைச் சூழ்ந்து கொண்டு சுழற்றியடித்தாலும் இன்னமும் தியேட்டரின் அரையிருட்டில், கடற்கரை சுடுமணலின் வெப்பத்தையும் தாங்கியபடியே காதல் வசனம் பேசும் நாவிற்குள் நாவைச் சுவைக்க வெறி கூத்தாடும் இதழ்களை கண்ணுறும் போது காமம் கரை புரண்டு ஓடும் கடலாய் அலைகள் உள்நோக்கி வெக்கித் தரை தவழ்கின்றன. பெண்ணின் நிர்வாணம் ரசிக்கப்படும் போதையாய் கொண்ட ஒவ்வொரு ஆணின் பின்னாலும் தாயாய் சகோதரியாய் அவள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். வயிற்றுப் பசிக்கு இரைதேடும் அவளிடம் உடற்பசியைத் தீர்த்துக் கொள்ள துடிக்கும் மாக்களுக்கு மத்தியில் இப்போது மதத்தின் பெயரும் சேர்ந்து கொள்கிறது. இறந்தாள் நான்கு நாட்களாக ரத்தமும் சீலுமாய் கோவிலின் புனிதம் கெட்டுப்போகும் என்று பெண்பிள்ளைகளின் உடைகளை பற்றியிழுத்து மாதவிடாய் சோதித்த பூமியில் ஆசீபாவின் என்னும் அழகிய பூவின் இறப்பு ரத்தம் குடிக்கும் டிராகுலாக்கள் தங்கள் இரத்தம் படிந்த அதே வாயாலே பெண்ணின் ஒழுக்கத்தை விமர்ச்சிக்கிறதே....!

பட்டப்பகலில் பதினேழு பேரால் சிதைக்கப்பட்ட ஒரு பிஞ்சின் வழக்கில் கைதான காமப்பிசாசுகளின் தாய் அந்த பிஞ்சின் ஒழுக்கத்தை குறை கூறிப் பச்சைப் பச்சையாய் பேசும் போது அவளின் நாக்கை அறுக்க நம் சமூகம் முன்வரவில்லை அதையும் காட்சிப்படுத்தி பிரேக்கிங் செய்தியாய் ஒளிபரப்பும் வக்கிரம் மட்டுமே நமக்கு பிரதானமாய் உச்சுக் கொட்டிக் கொண்டும் உறைந்த மனநிலையில் இதுதான் நம் நிலை என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லியபடியே நாட்களை கடந்து செல்கிறோம். ஏதோவொரு இலவசம் நம்மை மறக்கடிக்கிறது. அழும் பிள்ளையின் கையில் பிடுங்கப்பட்ட மிட்டாய்க்கு பதிலாக ஏதோவொறு திண்பண்டத்தை திணித்து கண்ணைத் துடைப்பதைப் போல! காற்றடிக்கும் திசையில் திசைமாறிப் போகும் ஏதோ சில பொறிகளைக் கொண்டே நம் ஒழுக்கத்தை மற்றவர்கள் நிர்ணயிக்க விடவேண்டியதிலை, ஒரு கயிற்று பொம்மையாய் மாறி நம் சுதந்திரத்தின் அளவுகோல் நுனியை சமூகத்தின் கைகளில் சமர்ப்பித்து விட வேண்டாம். வெறும் உடலும் யோனியும் மார்பகமும் மட்டும் பெண் அல்ல அவள் ஒரு தனிப்பெரும் ஜோதி.

ADVERTISEMENT



நான்கு சுவர்களுக்குள் மகளிர் பெருமைகள் அடக்கக் கூடியவை அல்ல, நாள் ஒன்றில் மட்டும் அவளின் கொண்டாட்டங்கள் அடக்கப் படவேண்டியவையும் அல்ல. நீ அடங்கிப் போ என்று பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதை விட அவளுக்கு அரணாய் இரு என்று ஆண் பிள்ளைகளிடம் சொல்லி வளருங்கள். திரைப்படங்களுக்கு முன்பு நியூஸ் ரீல் போடுவார்கள். இப்போது அவை கூட விளம்பரங்கள் ஆக்ரமித்துக் கொள்கின்றன. நகை விளம்பரத்திற்கு ஆடையெதற்கு என்று முக்கால் நிர்வாணமாக்கி நடிக்க வைக்கிறார்கள் போலும் இப்படி ஒரு முறை பேசியபோது அந்த பெண் கஷ்டப்பட்டு தன் உடலழகை பேணுவது எதற்கு? என்று கேள்வியெழுப்பினார் ஒரு மனிதர். எதையும் வியாபாரம் செய்யும் நோக்குடன் இன்றி திரையரங்களில் தேசிய கீதம் போட்டதைப் போல பெண்ணின் பிரசவவேதனையை ஒளிபரப்புங்கள் அவளின் யோனியைச் சுவைக்கத் துடிக்கும் ஓநாய்களின் பற்களுக்கு நெருப்பாய் அந்த வலி உரைக்கட்டும். இனியாவது மதத்தின் பேராலோ, காதல் வழியில் கல்லாய் முளைக்கும் காமத்தின் பேராலோ எந்த ஒரு பெண்ணும் துன்புறாமல் இருக்கட்டும் . எத்தனையோ என்கவுண்டர்கள் நடந்தாலும், பாதுகாப்பின் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாலும், நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் பெண்களே!

வெறும் சதைப் பசிக்கு உடலும், வெற்று வார்த்தைகளைப் பேசுவதற்கு மட்டும் நம் நாக்குகளும் படைக்கப்படவில்லை, உன் இழப்பு பத்திரிக்கைக்கு ஒரு செய்தி, தொலைக்காட்சி விவாதப்பொருள், சக மனிதர்கள் மத்தியில் அவமானம் ஆனால் நாம் அதில் துவளக்கூடாது பெண் கற்பிக்க பிறந்தவள் அன்பை, அக்கறையை, திறமையை, துணிவை கற்பிழக்க பிறந்தவள் இல்லை. இன்றைய மகளிர் தினத்தில் நம் அத்தனை செயல்களும் ஆக்கப் பூர்வமாய் இருக்க வேண்டும். சார்ந்து வாழும் மனிதக் கோட்பாடுகளில் நம் இலக்குகளை தெளிவாய் பிறர் அறிய சொல்ல வேண்டும். துணிந்த பின் நெஞ்சே துயரம் கொள்ளாதே என்ற கவிஞரின் வரிகள் களங்கள் வேறாக இருக்கலாம் நாம் கரையேறுவோம் நல் இதயங்களின் துணையோடு. உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.

"மூன்று வேளைச் சாப்பாடு என்பதே ஊர்ஜிதம் இல்லாத ரெயில்பெட்டிக் குடும்பத்தில்பிறந்த .." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #25


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT