ADVERTISEMENT

"நாம் அறிவாளி என்றும் முட்டாள் என்றும் நிர்ணயிக்க இங்கே யாரும் பிறக்கவில்லை.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #20

06:45 PM Jan 30, 2020 | suthakar@nakkh…

இந்த வார இப்படியும் இவர்களின் மையக்கரு சில வாரங்களுக்கு முன்னால் முகப்புத்தகத்தில் நடந்த விவாதங்களின் அடிப்படையிலானது. சில பெண் எழுத்தாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,

கதை திருட்டு இது பரவலாக பல இடங்களில் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதிகமாக வெற்றி பெறும் படங்களின் கதைகள் கூட எங்களுடையது அதை அவர்கள் திருடிவிட்டார்கள் என்று இயக்குநர்கள் மீது வழக்கு தொடர்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப் போடப்படும் வழக்குகளில் உடனடியாக தீர்ப்புகள் கிடைக்காவிட்டாலும் சில வருடங்கள் கழித்து தீர்ப்புகள் எழுத்தாளர்களுக்கோ அல்லது படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கோ சாதகமாக வருகிறது. ஆனால் இந்தக் கதைத் திருட்டு என்பது திரையுலகில் மட்டும் தான் நடக்கிறதா? காலையில் தியேட்டரில் வரும் திரைப்படத்தை மதியமே திருட்டு விசிடியிலும், ஆன்லைனிலும் விட்டு விடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் அப்படிப்பட்ட திருட்டைத் தடுக்க எத்தனையோ வழிகளை அரசாங்கம் செய்து வந்தது. எழுத்துலகிலும் கதை திருட்டு என்பது பரவலாக நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இணையதளம் வழியாக கதைகளைப் படிப்பது.

தன் கற்பனையில் உருவாகும் ஒரு கதைக்கு உருவகம் கொடுத்து கதை மாந்தர்களைப் படைத்து அதை உலவவிடும் எழுத்தாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் குடும்ப நாவல்கள் எழுதும் எழுத்தாளர்கள் ஒரு வட்டத்தினரின் மத்தியில் எழுத்தாளர்களாகவே மதிக்கப்படுவதில்லை. பிரபலமான 150க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியும், தற்போது முண்ணனியில் இருக்கும் தொலைக்காட்சியில் தொடருக்கு கதை தரும் ஒரு பெண் எழுத்தாளர் தொலைபேசியில் பகிர்ந்து கொண்ட வருத்தங்களின் குவியல்கள் இவை. கதை திருட்டு நடக்கிறது என்னுடைய புத்தகங்கள் அனைத்துமே புகைப்படம் எடுத்து அப்லோட் செய்கிறார்கள். கிட்டத்தட்ட அவரின் 70க்கும் மேலான கதைகளை ஆன்லைனில் பார்க்க முடிகிறது. ஆனால் அதன் மூலம் எந்த பிரதிபலனும் எங்களுக்கு கிடைப்பதில்லை, சம்பந்தட்ட ஆன்லைன் லிங்கின் உரிமையாளர்களிடம் பேசியபோது உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் அப்படித்தான் போடுவோம் என்று திமிராக பேசுகிறார்கள். கமிஷனர் அலுவலகத்தில் சைபர் கிரைமில் கூட புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தற்போது YOU TUBE ல் கூட அவரின் கதைகள் பதிவிடப்படுகிறது எந்த முன்னறிவிப்பும் இன்றி அதற்கான ஊதியமும் இன்றி. ஆன்லைன் இப்படியெனில் அட்சயா என்றொரு மாதநாவல் பத்திரிக்கை எந்த எழுத்தாளர்களின் சம்மதம் இன்றி அவர்களின் நாவல்களை தரவிறக்கம் செய்து மாதநாவலாக வெளியிடுகிறார்கள். புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு அழைத்தால் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என்றுதான் தகவல் வருகிறது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இதையெல்லாம் கடந்து தான் எழுத்தாளர்கள் தங்கள் பதிப்புகளை வெளியிட வேண்டியுள்ளது. அதிலும் புதிதாக வரும் எழுத்தாளர்களுக்கான களத்தை அமைத்துத்தரவும் பதிப்பகங்கள் முன் வருவதில்லை. முண்ணனி எழுத்தாளர்களையே பதிப்பகங்கள் நாடி வரும் நிலையில், வளரும் எழுத்தாளர் தங்கள் புத்தகங்களை எங்கே சென்று கொடுப்பது என்ற யோசனையிலேயே நாட்களை கடத்துகிறார்கள். அப்படியே ஒரு புத்தகம் போட்டாலும் விற்பனை என்னது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் அப்படிபட்ட புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் எந்த மூலையில் இருந்தது என்று கூட அறிய முடியவில்லை. ஒரு ஆணுக்கு 1100 கலோரிகள் தேவைப்படுகிறது பெண்ணுக்கு 1300 கலோரிகள் தேவைப்படுகிறது. மன ரீதியாகவும் அவள் பலமானவளாகவே இருக்கிறாள். ஆனால் பெண்களை சற்று மட்டம் தட்டி பேசியே வளர்க்கப்பட்டு இருக்கும் நம் சமுதாயத்தின் ஒரு பகுதியாகத்தான் சில சொல்லாடல்களைப் பார்க்க முடிகிறது.

நம்மை குறை கூறுபவர்களின் சொற்களுக்கு செவி சாய்த்தால் அது நம்மையே சாய்த்துவிடும். மாறாக அதைக் கடந்து செல்லப் பழகிக்கொண்டால் நாம் முன்னேறலாம் அவர்கள் நமக்கு பின்னால் யாரையாவது குறை சொல்லிக் கொண்டு அங்கேயே தேங்கிவிடுவார்கள். இப்படியெடுத்துக் கொண்டாலும் உப்புமா செய்வதைப் பற்றி எழுதுபவர்கள் தான் பெண் எழுத்தாளர்கள் என்று முட்டாள்தனமான கருத்தை முன் வைக்கும் இலக்கிய தோழர்களிடம் ஒரு கேள்வி எழுத்திற்கு ஆண் பெண் என்ற பேதம் இருக்கிறதா? எனக்கு மருத்துவம் படிக்க பிடிக்கிறது, அவளுக்கு என்ஜினியரிங், உனக்கு டீச்சர் இப்படி படிப்பும் விருப்பமும் கூட ஒத்து இல்லாதபோது எழுத்துக்கள் மட்டும் எப்படி ஒத்து வரும். இலக்கியம் எழுதுபவர்கள் மட்டுமே எழுத்தாளர்கள் என்றும் அவர்கள் தங்களை கடவுள்கள் போல் பாவித்து கொள்வதும் எந்த வகையில் நியாயம். உங்கள் மனது உங்களை எத்தனை உயரத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் ஆனால் மற்றவர்களை அதுவும் ஒரே துறையில் உள்ளவர்களை நாமே மட்டம் தட்டுவது சரியானதா? ஒரு நடத்துனருக்கோ, ஓட்டுனருக்கோ பிரச்சனையென்றால் அடுத்த விநாடி பேருந்துகள் ஓடுவது இல்லை, ஒரு அரசு அதிகாரியின் பிரச்சனை சமூக பிரச்சனையாக மாற்றப்படுகிறது.



அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை ஏன் எழுத்தாளர்களுக்குள் இல்லை, இலக்கியம் என்பது மதிக்கத்தக்கது அந்த எழுத்தாளர்கள் பாராட்டக் கூடியவர்கள். ஆனால் அவர்கள் வசிப்பதும் குடும்ப அமைப்புகளில் தானே, தீவிரமான இலக்கியங்கள் வாசிக்கப்படலாம் ஆனால் ஜனரஞ்சகமான எழுத்துக்கள் நேசிக்கப்படுகிறது. எதார்த்தமான திரைப்படங்கள் இன்று மாபெரும் வெற்றியடைந்து வருகிறது. ஏனெனில் மக்கள் விரும்புவது தன்னைத் தானே கதாநாயகனாக பார்க்க விரும்புகிறார்கள். அதைப் போல நமது குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை மென்மையான உணர்வுகளை கடைக்கோடி ரசிகனுக்கும் புரியவைக்க எளிமையான எழுத்துக்களால் மட்டுமே முடியும். கடுமையான புரியாத வார்த்தை பிரயோகம் செய்து எழுத்துக்களுக்காக விருதுகள் பெறுவதை விடவும், இயல்பான நடையில் இதயம் தொடும் எழுத்துக்களை பத்துபேர் படித்தாலும் ஒரு குடும்பத்தின் சிக்கல்களை தீர்க்கும் தீர்வுகள் அதில் கிடைப்பதாக நம்புகிறார்கள் எழுத்தாளர்கள். இலக்கியத்தின் தீராக் காதல் தோழர்களை சக இனத்தையே மட்டம் தட்ட வைத்ததா ? அல்லது பெண் எழுத்தாளர்கள் என்று ஏளனம் செய்ய வைக்கிறதா என்று தெரியவில்லை, சில நாட்களுக்கு முன்பு தோழர் இன்பா அவர்கள் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் என்ற தலைப்பில் பங்கேற்றார்.

நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்கள் தங்களின் பதிப்பகத்தில் எந்த மூலையில் தன் எழுத்துக்கள் இருக்கிறது என்று தேடிதேடி அலைந்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இதில் இலக்கிய எழுத்தாளர்களும் அடக்கம். உங்கள் வரிசையில் உங்களைப் பின்பற்றி நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் இலக்கியம்தான் பெரியது என்பதை உணர்த்தவோ அல்லது வேறு ஏதாவது காழ்ப்புணர்ச்சிக்காகவோ பேசியிருந்தால் இனிமேல் இதுபோல் பேச வேண்டாம் தோழர்களே. ஏனெனில் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்கும் போது மரியாதையும், புன்னகையும் வீசும் நீங்கள் முதுகுகிற்குப் பின்னால் பெண் எழுத்தாளர்களைப் பற்றி தவறாக பேசுவது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இலக்கிய நாசினிகளாகவே இருக்க ஆசைப்படுகிறேன். நாம் அறிவாளி என்றும் முட்டாள் என்றும் நிர்ணயிக்க இங்கே யாரும் பிறக்கவில்லை, பேனாவை பிடித்தவனின் விரல்களில் கத்தியைக் கொடுத்து அறுவைசிகிச்சை செய்யச்சொன்னால் விளைவு மரணம் தான். தான் சொல்ல வந்ததை பிறருக்கு புரியும் படி சொல்வதுது ஒரு கலை அதை யாரும் செய்யலாம். கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது. படைப்புலகிற்கு ஒரு திமிர் உண்டு, அது ஒரு புத்தகம் எழுதியவனுக்கும் உள்ளது.


அடுத்த பகுதி - குற்றவுணர்வு என்று ஒன்று இல்லையென்றால் மனிதன் மரத்துப் போய் விடுவான் - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #21

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT