/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2110.jpg)
ஊத்தங்கரையில் அரசுப்பள்ளி பாடப்புத்தகங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக இரண்டு ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வட்டாரக் கல்வி அலுவலக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக புதிய பாடப்புத்தகங்கள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாடப்புத்தகங்களை ஆய்வு செய்தபோது, 12 ஆயிரம் புத்தகங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் மாதம்மாள், ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் நேரில் விசாரணை நடத்தினார்.
ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளர் தங்கவேல் (43), கிளர்க் திருநாவுக்கரசு (39) ஆகியோர் புத்தகங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்து, முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)