ADVERTISEMENT

அதிரடி சதிகள் ஆரம்பம்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #5

04:58 PM Nov 02, 2019 | suthakar@nakkh…

“கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவோடு ஆட்சியை நடத்துவது இயலாத காரியம்” பிரதமரானவுடன் ஹிட்லர் மனதில் ஒடிய முதல் சிந்தனை இதுதான். பாப்பென் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளின் ஆதரவு மொத்தமாக 43 சதவீதம்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் கையில் 100 பேர் இருந்தனர். 608 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுக்காக ஒவ்வொரு முறையும் கையேந்திக் கொண்டிருக்க முடியாது. கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வேண்டும். உடனடியாக நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். பதவியேற்ற மறுநாளே ஹிண்டன்பர்கிடம் வந்தார் ஹிட்லர். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 1933 மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் என்ற அறிக்கையை தயாரித்து எடுத்துவந்தார்.

ADVERTISEMENT



“இதில் கையெழுத்திடுங்கள்” ஹிண்டன்பர்கிற்கு விருப்பமில்லை. ஆனால், ஹிட்லரின் அதட்டலான, மிடுக்கான உத்தரவை எதிர்த்துப் பேச அவரால் முடியவில்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி. என்ன நடக்கிறது என்பதை யூகிக்கக் கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை உள்ளடக்கிய பிரஷ்யாதான் இருப்பதிலேயே பெரிய மாநிலம். அதன் நிர்வாகப் பொறுப்பை துணை பிரதமர் பாப்பென் கையில் கொடுத்தார் ஹிட்லர். அதேசமயம், அந்த மாநிலத்தின் காவல்துறையை தனது நம்பிக்கைக்குரிய கோயரிங்கிடம் கொடுத்தார். அடுத்து ராணுவ தளபதிகள் அனைவரையும் அழைத்தார்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்போதுள்ள ராணுவத்தில் மாற்றம் இருக்காது. அவரவர் பொறுப்புகள் அப்படியே நீடிக்கும். வெர்சைல்ஸ் உடன்படிக்கையை அமல்படுத்த முடியாது. நவீன கடற்படையும், விமானப்படையும் அவசியம் தேவை. அப்போதுதான் ஜெர்மனி ராணுவத்தை உலகின் மிகப்பலம் பொருந்திய ராணுவமாக மாற்றமுடியும்” ஹிட்லரின் பேச்சு, ராணுவ தளபதிகளின் வயிற்றில் பாலை வார்த்தது. காதில் தேனாக இனித்தது. நாஜிக் கட்சியின் அதிரடிப்படையில் இடம் பெற்றுள்ளவர்கள் ராணுவத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அவர்கள் பயந்துபோய் இருந்தனர். இப்போது அந்தப் பயம் போய்விட்டது. ஹிட்லர் அரசுக்கு முழு ஆதரவு அளிக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

ADVERTISEMENT



ராணுவத்தைத் திருப்தி செய்தாயிற்று. முதலாளிகளின் ஆதரவு முக்கியம். கூப்பிடு அவர்களை. குருப்ஸ், ஐ.ஜி. பார்பென், யுனைடெட் ஸ்டீல், நாட்டின் மிக முக்கியமான மூன்று வங்கிகளின் தலைவர்கள், பிரபலமான கோடீஸ்வரரும், தலைசிறந்த ரசாயன மேதையுமான கார்ல் போஸ்ச், ஹிட்லருக்கு பண உதவி செய்ய மறுத்த வான் தைஸன் என எல்லோருக்கும் அழைப்பு பறந்தது. டாக்டர் ஜல்மர் ஸ்சாச் ஹிட்லரின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அவரிடம் 30 லட்சம் மார்க்குகளை உடனடியாக கொடுத்தனர். “இனி ஜனநாயகம் இருக்காது. அதுதான் அனைத்து தனியார் துறை நிறுவனங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தொழிற்சங்கங்கள் உற்பத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஜெர்மனியின் ஆயுத பலத்தை பெருக்க வேண்டும்” முதலாளிகளுக்கு வேறு என்ன உறுதி வேண்டும். அதுவும் ஆயுதபலத்தை பெருக்க முடிவு செய்துவிட்டால், குரூப்ஸ் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகளுக்கு கொண்டாட்டம்தான். சந்தோஷமாக ஆதரவு தெரிவித்துவிட்டு கலைந்தனர்.



அடுத்து என்ன? ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. “தேர்தலில் நாஜிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு கம்யூனிஸ்ட்டுகளை நாசம் செய்ய வேண்டும்” பிப்ரவரி 22 ஆம் தேதி பிரஷ்யாவின் காவல்துறையில் 50 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அத்தனைபேரும் ஹிட்லரின் அதிரடிப் படை மற்றும் இளைஞர் அணியினர். கொஞ்சம் கூட நாகரீகமற்ற, பகையுணர்வுடன் வளர்க்கப்பட்ட, கொலைக்கு அஞ்சாத அவர்களிடம் இப்போது சட்டப்பூர்வ அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் புரட்சி நடத்த கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார். தினமும் இந்தப் பிரச்சாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றது.

மார்க்சிஸ்ட்டுகளுக்கு தங்களைச் சுற்றி நடப்பது புரியத் தொடங்கியது. ஆனால், அவர்கள் சுதாரிப்பதற்குள் நாடுமுழுவதும் கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்குள் ஜெர்மன் காவல்துறையினர் புகுந்தனர். சோதனையிட்டனர். அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக அச்சிட்டு வைத்திருந்த நோட்டீஸ்கள், போஸ்ட்டர்களைக் கைப்பற்றினர். “நாளை இப்போது நம் கையில்” “வெற்றியை நோக்கி முன்னேறுவோம்” இதுதான் அவர்கள் கைப்பற்றிய நோட்டீஸ்களில் காணப்பட்ட வாசகம். தேர்தல் பிரச்சார வாசகங்கள்தான். ஆனால், புரட்சிக்கான சதிக்கு இதை ஆதாரமாகக் காட்டி குற்றம்சாட்டினர்.

தெருவில் போன கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் கைதாகினர். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அப்போதும் கம்யூனிஸ்ட்டுகளின் பிரச்சாரம் ஓயவில்லை. அவர்களுக்கு அனுதாபம் இருக்கத்தான் செய்ததது. நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும். எதைச் செய்தேனும் கம்யூனிஸ்ட்டுகளை நுழைய விடக்கூடாது. நாஜிகளுக்கு இடப்பட்டிருந்த உத்தரவு இது. மார்ச் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறப்போகிறது.



பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு பத்துமணிக்கு, பிரஷ்ய காவல்துறை அமைச்சர் கோயரிங்கிற்கு ஒரு டெலிபோன் வந்தது. பேசியவர், ஹிட்லரின் நண்பர் ஹன்ப்ஸ்டாங்கில். “நாடாளுமன்றக் கட்டிடமான ரெய்ச்ஸ்டக்கில் இருந்து புகை வருவதாகச் சொல்கிறார்கள். என்னவென்று பாருங்கள்” ஆம், பழமைவாய்ந்த ஜெர்மன் நாடாளுமன்றக் கட்டிடம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனே, ஹிண்டன்பர்கிற்கு தகவல் பறந்தது. துணைபிரதமர் பாப்பெனுடன் அங்கு விரைந்தார். ஹிட்லர் வந்தார். முக்கியத் தலைவர்கள் அனைவரும் வந்தனர். “கம்யூனிஸ்ட்டுகள் நாடாளுமன்றக் கட்டிடத்தை கொளுத்திவிட்டார்கள்”

நாஜிகள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினர். மக்கள் பதைபதைத்தனர். பலரால் நம்பவே முடியவில்லை. “நாஜிகளின் அட்டூழியம் இதுதான். இப்படித்தான் இருக்கும். தங்களுடைய வெற்றிக்காக நாட்டையே அழிக்கக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள்” என்று கம்யூனிஸ்ட்டுகள் விளக்கம் அளித்தனர். நாடாளுமன்றத்தின் மையத்தில் உள்ள வெப்பம் வெளியேற்றும் சுரங்கப்பாதை வழியாக உள்ளே நுழைந்த நாஜிகள் மிகச் சாமர்த்தியமாக இந்த சதியை நிறைவேற்றியுள்ளதாக கூறப்பட்டது. ஹிட்லரின் நண்பர் ஹன்ப்ஸ்டாங்கில்தான் இந்தக் காரியத்தை திட்டமிட்டு நடத்தினார் என்று பரவலான பேச்சு அடிபட்டது.

ஆனால், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன் மதுவிடுதி ஒன்றில், ஜெர்மன் நாடாளுமன்றத்தை தீவைத்துக் கொளுத்தப்போவதாக குடிபோதையில் உளறினார் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்திருப்பதாக கோயரிங் கூறினார். வான் டெர் லுப்பே என்ற அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, நாடாளுமன்றத்திற்கு தீவைத்தது தான்தான் என்பதை ஒப்புக் கொண்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இத்தனை சதிகளுக்கு அப்புறம் வாக்குப்பதிவு நடந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அப்போதும் நாஜிகளுக்கு 288 இடங்கள்தான் கிடைத்திருந்தன. பாப்பெனின் தேசியவாத கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் 81 இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். பாப்பெனின் ஆதரவு இருந்தால், பெரும்பான்மையைக் காட்டிலும் 16 இடங்களே கூடுதலாக இருந்தது. “இது போதாது. மேலும் பாப்பெனை எப்போதும் நம்பிக்கொண்டிருக்க முடியாது. பிறர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆட்சி நடத்த முடியாது. நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்க வேண்டும்” மே மாதத்தில் மீண்டும் தேர்தல் நடத்திவிடலாம் என்று முதலில் திட்டமிட்டார். ஆனால், அதை மாற்றிக்கொண்டார்.

எளிதான காரியம் என்ன? தனக்கு எதிரான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் 81 பேரை நாடாளுமன்றத்திற்குள் வரவிடாமல் செய்வதுதான் என்று முடிவு செய்தார். கோயரிங்கை அழைத்தார் ஹிட்லர். அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று ஆலோசனை நடத்தினார். மார்ச் 15 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. கோயபல்ஸ் பிரச்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன் விரிவான அறிக்கை ஒன்றை ஹிட்லர் தயாரித்திருந்தார். அது என்ன? நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டிய சட்டங்கள் அனைத்தும் ஹிட்லரே கவனித்துக் கொள்வார். பட்ஜெட் தயாரிப்பது, வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது என எல்லாவற்றுக்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் ஹிட்லரே முடிவு செய்வார்.

அமைச்சரவை இதற்கு ஒப்புதலை அளித்தது. உடனே அந்த அறிக்கை ஹிண்டன்பர்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வேறு பேச்சே இல்லை. அவர் கையெழுத்திட்டார். மார்ச் 21 ஆம் தேதி பதவி ஏற்புவிழா. போஸ்ட்டாம் என்ற இடத்தில் உள்ள காரிஸான் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்குதான் மகா பிரடெரிக் மன்னர் புதைக்கப்பட்டார். மகா பிரடெரிக் காலத்தைய ஜெர்மன் ஏகாதிபத்தியத்தை மீண்டும் நிறுவுவதுதான் ஹிட்லரின் லட்சியமாக இருந்தது. ஹிண்டன்பர்க் வந்தார். வெளிநாட்டு பிரமுகர்கள் வந்திருந்தனர். ஏராளமான வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஹிட்லரின் குழுவினர் கொள்ளைக் கூட்டத்தினர் போல சீருடையில் ஸ்வஸ்திக் சின்னம் தரித்து வந்திருந்தனர்.

கெய்ஸர் மன்னரின் ராணுவ சீருடையில், தாங்கள் பெற்ற பதக்கங்களுடன் முன்னாள் ராணுவத்தினர் ஏராளமானோர் ஆஜராகி இருந்தனர். ஜெர்மன் தேசிய கொடியில் நாஜிகளின் ஸ்வஸ்திக் சின்னம் இடம்பெற்றிருந்தது. குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கை பாராட்டி ஹிட்லர் பேசினார். மிகுந்த மரியாதையுடன் அவர் பேச்சு அமைந்திருந்தது. பேசி முடித்தவுடன் ஹிண்டன்பர்கின் கைகளைப் பிடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அது திரைப்படமாகவும் படம்பிடிக்கப்பட்டது. எல்லாம் ஹிண்டன்பர்கின் விருப்பத்தில்தான் நடக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குவதில் ஹிட்லர் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஹிண்டன்பர்க் கையெழுத்துடன் இரண்டு அவசரச் சட்டங்கள் வெளியிடப்பட்டன.

முதல் சட்டம்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை, துன்புறுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஜிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுகின்றனர்.

இரண்டாவது சட்டம்.

அரசாங்கத்திற்கு எதிராகவோ, நாடாளுமன்றத்திற்கு எதிராகவோ கருத்துத் தெரிவிப்பவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். மூன்றாவது சட்டம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் ஹிட்லரும், பாப்பெனும் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். ஏனென்றால் அது அவ்வளவு பயங்கரமான சட்டம். ஆம். அரசில் குற்றவாளிகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அவை ராணுவ நீதிமன்றங்களைப் போல இயங்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மார்ச் 23 ஆம் தேதி ஓபரா ஹவுஸ் என்ற கட்டிடத்தில் நாடாளுமன்றக் கூட்டம் கூடியது. ஜெர்மானியர்களை தற்போதைய சிரமங்களில் இருந்து மீட்பதற்கான சட்ட முன்வரைவு என்ற பேரில் இந்த மூன்று அவசரச்சட்டங்களையும் அவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்தார் ஹிட்லர். மசோதா நிறைவேற வேண்டுமெனில், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு வேண்டும். ஹிட்லருக்கு தற்போது உள்ள ஆதரவுடன் மேலும் 31 பேரின் ஆதரவு அவசியம். கத்தோலிக்க சென்ரிக் கட்சிக்கு பொய்யான சில வாக்குறுதிகளை அளித்து சரிக்கட்டி வைத்திருந்தார்.

அதையும் மீறி மசோதா தோற்றுவிட்டால்? அந்த பயமும் இருந்தது. அதற்காகத்தான் கோயபல்ஸ் தந்திரமாக ஒரு திட்டத்தைத் தயாரித்திருந்தார். நாஜிப்படையினரை கூட்டம் நடக்கும் இடத்தில் பெருமளவுக்கு திரட்டி நிற்கவைத்திருந்தார். “எங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும். இல்லையேல் சுடுவோம். கொல்வோம்” நாஜிகள் உரக்க முழங்கிக் கொண்டிருந்தனர். மசோதாவைத் தாக்கல் செய்த ஹிட்லர் மிகவும் சாதுவைப் போல பேசினார். “இந்தச் சட்டங்களைப் பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவசியப்பட்டால் மட்டுமே பயன்படுத்தப்படும். எங்கள் கவனம் முழுவதும் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதில்தான் இருக்கும். பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளுடன் பகையுணர்வுடன் நடந்துகொள்ள மாட்டோம்”

ஹிட்லர் பேசி முடித்தவுடன், சமூகவாதக் கட்சி சார்பில் ஓட்டோ வெல்ஸ் என்பவர் எழுந்தார். இந்த கொடூரமான சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

துள்ளி எழுந்தார் ஹிட்லர். “உங்கள் ஆதரவு தேவையில்லை. சாகப்போகிறவனின் ஆதரவு தேவையில்லை” ஆவேசம் கொப்புளித்தது. கண்களில் அனல் பறந்தது.

வாக்கெடுப்பு நடைபெற்றது. 441 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். 84 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஹிட்லரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. 14 ஆண்டு ஜெர்மன் குடியரசு முடிவுக்கு வந்தது. நாஜிகளின் கையில் ஜெர்மன் சிக்கியது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT