ADVERTISEMENT

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; தமிழகத்தை முந்தும் வடமாநிலத்தவர்கள்.. பகுதி – 9

12:19 PM Mar 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு போலீஸ், இப்போது டிஜிட்டல் மோசடியாளர்களை கைது செய்ய மேற்குவங்கம், உ.பி, ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் எனப் பயணமாகிறது. ஒருகாலத்தில் அந்த மாநில போலீஸெல்லாம் வித்தியாசமான மோசடி குற்றச்சாட்டுகளுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து சிலரை கைது செய்தார்கள்.

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெட்டி படுக்கைகளோடு திருச்சியில் இருந்து ரயில் ஏறி உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் என ஏதாவது ஒரு மாநிலத்துக்கு செல்வார்கள். அங்கு அட்வான்ஸ் தந்து ஒரு கடையை வாடகைக்கு எடுப்பார்கள். அங்கு கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர், டேபிள் ஃபேன் போன்றவற்றை குறைந்த விலைக்கு தவணை முறையில் தருவதாக இந்தியில் ஒரு பிட் நோட்டீஸ் போடுவார்கள். அதை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் பயணமாவார்கள். வாரம் 50 ரூபாய், 100 ரூபாய் என பத்து வாரத்துக்கு கட்டினால் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் எடுத்துக்கொள்ளலாம். அதன்பின் நீங்கள் வாராவாரம் தவணை முறையில் பணத்தை தந்துவிடவேண்டும் என்பார்கள்.

இதற்கு மொழி தெரியவேண்டும் என்கிற அவசியமில்லை. அங்குப்போய் இருந்தால் கற்றுக்கொள்ள முடியும். அப்படி கற்றுக்கொண்ட குறைவான இந்தியில் தான் பேசுவார்கள். ஊருக்கு ஒருவருக்கு பொருட்களை தந்து நம்பிக்கையை சம்பாதிப்பார்கள். பணம் கட்டுவார்கள். லம்பாக 5 லட்சம், 10 லட்சம் சேரும்வரை காத்திருப்பார்கள். பணம் சேர்ந்ததும் கடையை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு எஸ்கேப்பாகி சொந்த ஊருக்கு வந்து நிலம் வாங்கிப்போடுவார்கள். 6 மாதம் கடந்து மற்றொரு மாநிலத்துக்கு போவார்கள்.

திருச்சி ராம்ஜி நகர் என்பது வெளியே தெரிந்தது. தெரியாத ஊர்கள் பல உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. அரசியலுக்கு பிரபலமானவர்களை தந்த ஊர். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு கும்பல் டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி எனப் பயணமாவார்கள். ரயிலில் மயக்க பிஸ்கட் தந்து எலக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்து வந்து விற்பனை செய்வார்கள். அவர்களது ஒரே குறி எலக்ட்ரானிக் பொருட்கள்தான். ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் ஐபேட், லேப்டாப், கேமராக்கள் சல்லிசான விலையில் விற்பார்கள். ரயிலுக்கு அடுத்து கட்சிப் பொதுக்கூட்டங்கள்தான் இவர்களது அடுத்த குறி. எந்த மாநிலத்திலாவது தேர்தல் தேதி அறிவித்தால் அந்த மாநிலத்துக்கு கிளம்பிவிடுவார்கள். கட்சிப் பொதுக்கூட்டங்களில் கைவரிசை காட்டுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் ஐ.எம்.இ.ஐ. நம்பரை ட்ரேஸ் செய்து மொபைல் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துக்கொண்டு வந்து கைது செய்ய துவங்கினார்கள். அதன்பின் மெல்ல அது குறைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது இந்த கிராமம். ‘எங்கள் ஊரில் பிரபலமான கரைகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவில் 14 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம்’ என மஞ்சள் கலர் நோட்டீஸ் அச்சடித்து எடுத்துக்கொண்டு நான்குபேர் வெள்ளைவேட்டி – வெள்ளை சட்டையுடனும், ஒருவர் சிவப்பு கலர் வேட்டி, கழுத்தில் உருத்திராட்ச மாலைகள், நெற்றி நிறைய திருநீறு, சந்தனப்பொட்டு, கழுத்தில் ஒரு காவி கலர் அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு அம்பாசிட்டர் காரில் வெளிமாவட்டங்களுக்கு செல்வார்கள். உங்கள் பெயரில் அன்னதானம் செய்கிறோம் எனச் சொல்லி பேசியே அவர்களை தங்கள் வழிக்கு கொண்டுவரவைப்பார்கள். பக்திமானாக இருந்தால் காவி உடை அணிந்தவருக்கு தடபுடல் வரவேற்பு தருவார்.

வாசல் வரை செல்லும் அந்த சாமியார் திடீரென, நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா படங்களில் வரும் சாமியார், வீட்டு வாசலில் காலை வைக்கும்போது உடம்பை சிலிர்ப்பார்களே அப்படி சிலிர்ப்பார். அவர் வீட்டுக்குள் பேய் இருக்கிறது என்பார். இவர் வீட்டுக்குள் துஷ்டசக்திகள் இருக்கு நான் வரமாட்டேன் என திரும்பி வந்து காருக்குள் அமர்ந்துவிடுவார். அந்த பக்திமான் தொழிலதிபர் மிரண்டுவிடுவார். காருக்குள் அமர்ந்துள்ள சாமியாரிடம் ஓடிவந்து, என் குடும்பத்தை காப்பாத்துங்க சாமி என மன்றாடுவார். ஒரு பூஜை செய்யனும், அது செய்தால்தான் உன் வீட்டில் உள்ள துஷ்டசக்திகள் போகும் என்பார். அவரும் பயந்துகொண்டு பூஜைகள் செய்வார். இதற்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என பணம் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். இதில் பணம் வந்து விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள் கூரை வீடுகளில் வசிக்க இவர்கள் மாடி வீடுகள் கட்டி சுகமாக வாழ்ந்தார்கள்.

மாவட்டம் விட்டு மாவட்டம் போனவர்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா என பயணமானார்கள். அங்கு போனவர்கள் அழகான பெண்களின் அழகில் மயங்கி சில்மிஷம் செய்ய அடி வாங்கியவர்களை பின்பு போலிஸில் புகார் தரச்செய்து போலி சாமியார்கள் என கைது செய்யவைத்தனர். பல இடங்களில் தப்பி வந்துவிட போலிஸ் தேடி வரும்போது அந்த ஊரில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த அந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மாமனாரான, பண்ணையார் ஒருவர் காப்பாத்திவிட்டுக்கொண்டு இருந்தார். இப்போதும் இவர்கள் மீது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வழக்குகள் உள்ளன.

தமிழ்நாட்டில் சிலர் பழைய முறையிலேயே மோசடி வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். வடஇந்திய மாநிலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டலை பயன்படுத்தி டெக்னிக்கலாக திருடும் மோசடியாளர்கள் பெருகிவிட்டார்கள்.

அந்த டிஜிட்டல் மோசடிகளை செய்வது யார்? கண்ணுக்கு தெரியாத சைபர் க்ரைம் குற்றவாளிகளை கைது செய்ய முடியாதா? டிஜிட்டல் குற்றவாளிகளை தேடத் துவங்கியபோது, இந்தியாவின் ஒவ்வொரு மாநில காவல்துறையும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தன, அது ஏன்?

வேட்டை தொடரும்…

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; உங்களை விழுங்கக் காத்திருக்கும் திமிங்கலம்! பகுதி 8

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT