Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: ‘மே பேகுனா சாப்’ - டெக்னாலஜியில் மிரட்டும் வடமாநில கும்பல்!

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

digital cheating part 15

 

ராக்ஸ்டாரை விட டாப்பான புள்ளிங்கோ கர்மாதந்த் பகுதியில் இருக்காங்க. உங்க மதராஸி எம்.பி ஒருத்தரை ஏமாத்தனவங்க இந்த ஊர்க்காரங்கதான்.  

 

எங்க ஸ்டேட் எம்.பியா? 

ஆமாம் சார்..

யாரு? 

பிரேமச்சந்திரன்..

அவர் கேரளா எம்.பி சார்..

அது உங்க ஸ்டேட்தானே..

கேரளா வேற ஸ்டேட் சார்.. 

நீங்கயெல்லாம் மதராஸி தான்..

மதராஸியா அது தமிழ்நாடு சார்..

இல்ல நீங்கயெல்லாம் மதராஸி தான். இப்போ கூட நீங்கயெல்லாம் திராவிட நாடு, திராவிட மாடல்னு தானே சொல்றிங்க.  

ஓ அப்படி வர்றிங்களா..

அவர் எங்க எம்.பி தான். ஒத்துக்கறன், சொல்லுங்க..

 

ஜம்தாராவை விட கர்மாதந்த் கிராமம்தான் சைபர் க்ரைம் நடப்பதற்கான மைய கிராமம். இந்த கிராமத்திலிருந்துதான் சைபர் க்ரைம் குற்றவாளிகள் உருவானாங்க. இங்கயிருந்துதான் நூத்துக்கணக்கான கிராமங்களுக்கு மோசடி தொழில் பரவியது. ஜம்தாரா மாவட்டத் தலைநகரம் என்பதால் ஜம்தாரா சைபர் க்ரைமின் தாயகம் அப்படின்னு சொல்றாங்க. எங்களைக் கேட்டால் கர்மாதந்த் தான் தாய் கிராமம். அதாவது இப்படியொரு மோசடியைக் கற்றுத் தரும் கிராமம்.

 

ஜம்தாராவை விட கர்மாதந்த் கிராமத்திலுள்ள வீடுகள், பல பல வீடுகள்.. இல்லையில்லை, அரண்மனை... அதாவது நம்மவூர் செட்டிநாட்டு வீடுகளை மிஞ்சிய வீடுகளாக பிரமாண்டமாக இருக்கின்றன. இந்த வீடுகள் சமீப ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்குள் யாரும் சுலபமாக நுழைந்துவிட முடியாது. கவர்னர் மாளிகையைச் சுற்றிக் கட்டப்பட்டு இருப்பது போன்று பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. கவர்னர் பங்களா காம்பவுண்ட் கேட் கூட பாதுகாவலர்கள் தான் திறக்கிறார்கள். இந்த கர்மாதந்த் பகுதியில் உள்ள வீடுகளின் காம்பவுண்ட் கேட் ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கப்படும் அளவுக்கு டெக்னாலஜி புகுத்தி வீட்டை  கட்டியுள்ளனர்.

 

இந்த கிராமத்திலுள்ள மக்களின் குடும்பத் தொழிலே ஆன்லைன் மோசடிதான். கர்மாதந்த் கிராமத்திற்கு பக்கத்து கிராமம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசிதந்த். இங்கு வசிப்பவன் 22 வயதான பப்பு. 10ஆம் வகுப்பு கூட முடிக்காதவன். அவனும் அவனது நண்பன் தனஞ்செய்யும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவது போல் கேரளாவைச் சேர்ந்த எம்.பி பிரேமச்சந்திரன் மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசியுள்ளனர். அவரிடம் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது கே.ஒய்.சி அப்டேட் செய்யவேண்டுமெனக் கேட்டனர். அவரும் தனது வங்கி விபரங்கள் மற்றும் கே.ஒய்.சி தகவல்களைத் தந்த சில நொடிகளில் அவருக்கு ஓ.டி.பி வருகிறது. அந்த ஓடிபி எண்களைக் கேட்கிறான் பப்பு. அடுத்த சில நிமிடங்களில் பிரேமச்சந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து படிப்படியாக ரூபாய் 1.6 லட்சம் எடுக்கப்படுகிறது. உடனே இதுபற்றி அவர் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்புகிறார். அவர் எம்.பி என்றும், காவல்துறையில் புகார் சொன்னது தெரியாமல் மீண்டும் மீண்டும் எம்.பியை தொடர்புகொண்ட பப்பு, ஓ.டி.பி வரும் சொல் எனக் கேட்கிறான். அவர் லைனை கட் செய்கிறார். மொபைல் நெட்ஒர்க் மூலம் லொக்கேஷனை ட்ரேஸ் செய்து அவன்கள் இருவரையும் பிடித்து சிறையில் தள்ளியது டெல்லி போலிஸ்.  

 

சோன்பாத் கிராமத்தை சேர்ந்தவர் ஹிரேன் ரக்ஷித். இவருக்கு மனைவி, பிள்ளைகள்னு 7 உருப்படிங்க. பழைய சைக்கிளில் சென்று நகரில் குப்பைகள், பழைய இரும்புகளை பொறுக்கி அதனை கடையில் விற்பனை செய்து அந்த காசுல அரிசி வாங்கி குடும்பத்தை நடத்திக்கிட்டு இருந்தார். இவரது மகன் ஆனந்த் ரக்ஷித் அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்தினார். சீதாராம் மண்டல் கற்றுதந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டான் ஆனந்த். அங்கு செல்போன் வழியாக எப்படி ஒருவரை மடக்குவது? வங்கிக் கணக்கில் இருந்து எப்படி பணம் எடுப்பது? மாட்டாமல் அதனை எப்படி செய்வது என்கிற டெக்னாலஜியை கற்றுக்கொண்டு தன்னிடமிருந்த ஒரு ஸ்மார்ட்போன், ஒரு பட்டன் ஃபோன் வழியாகவே தில்லாலங்கடியை தொடங்கினான்.

 

தனக்கு உதவியாக தன் குடும்ப உறுப்பினர்களை வைத்துக்கொண்டான். ஒரு வழக்கில் சிக்கியவனின் வீட்டை 2021 ஆகஸ்ட் மாதம் போலீசார் சோதனை நடத்தினர். 21 லட்சம் ரூபாய் ரொக்கம், விலை உயர்ந்த கார், ஸ்கூட்டி, பைக், ஏழு லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட், 65 லட்ச ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள், 23,65,000 ரூபாய் வட்டிக்கு விட்டதற்கான ஆவணம், 12 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கான பாஸ்புக் ஆகியவற்றை கைப்பற்றினர். வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்தே இவ்வளவு சொத்து சேர்த்துள்ளான். போலிஸ் கைது செய்யத் தேடுவது தெரிந்ததும் ஆனந்த் தலைமறைவானான். ஆனால், அவனை விடாமல் விரட்டிய போலிஸார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றத்தில் ரூ.20 லட்சம் செலுத்தி நிபந்தனை ஜாமீன் பெற்றான். இப்படி ஜம்தாரா மாவட்டத்தின் பல கிராமங்களில் பல ஆனந்த் ரஷீத்கள் ஏழ்மை நிலைக்கு கீழ் இருந்தவர்கள் இப்போது கார்களில் பவனி வருகின்றனர்.      

 

2011ஆம் ஆண்டு முதன்முதலாக பணமில்லாமல் ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்து மோசடி செய்ததாக முதல் வழக்கு கர்மாதந்த் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. அதன்பின் அடுத்தடுத்து மோசடி வழக்குகளே. ஆன்லைன் மோசடி வழக்கில் சிக்கிய, படிக்கக் கூட தெரியாத அவர்களிடம் இப்படி ஏமாற்றுவதற்கான டெக்னாலஜியை யார் கற்றுத் தந்தது எனக் கேள்வி எழுப்பினர் டெல்லி போலிஸார். 

 

சூப்பர் ஸ்டார் கற்றுத் தந்தார். சூப்பர் ஸ்டாரா? யார் அந்த சூப்பர் ஸ்டார்?....

 

வேட்டை தொடரும்......