ADVERTISEMENT

பிஞ்சிலே பழுத்த கவிஞன்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #1

05:33 PM Jan 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

யார் இந்த பாப்லோ நெருடா...?

பாப்லோ நெருடா தென்னமெரிக்காவில் உள்ள சிலி என்ற நாட்டைச் சேர்ந்த மாபெரும் கவிஞன். கம்யூனிஸ சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட மாபெரும் புரட்சிக் கவிஞன். நோபல் பரிசு வென்ற இவர், சிலி நாட்டின் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவர் எழுதிய காதல் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருந்த பாப்லோ நெருடா, ஏராளமான அரசுப் பொறுப்புகளை ஏற்று பணியாற்றி இருக்கிறார்.

சிலி நாட்டின் ஜனாதிபதி ஆக வாய்ப்பு தேடிவந்தபோது அதை விட்டுக்கொடுத்தவர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கைக்கூலியான ராணுவ தளபதி பினோசெட் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மருத்துவமனையிலேயே விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். அதன் மூலம் சக்திவாய்ந்த அவருடைய குரலை அமைதியாக்க முடிந்தது. ஆனால், அவருடைய கவிதை வரிகள் சிலியில் இன்னும் புரட்சிகர மாற்றங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

அவருடைய பல முகங்களில் ஒன்றுதான் பத்திரிகையாளர் முகம். இவர் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய சமயத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வுகளை எப்படி பதிவு செய்திருக்கிறார் என்று வாசிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது. அவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் விருப்பம். பல ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய விருப்பம் நிறைவேறுகிறது.

தொடரைத் தொடங்குவதற்கு முன், பாப்லோ நெருடா யார் என்பதை அறிந்துகொள்வதற்காக அவருடைய வாழ்க்கைக் கதையையும் சுருக்கமாக அறிந்துகொண்டால் நல்லது அல்லவா? அதற்காகவே அந்த மாபெரும் மனிதனைப் பற்றி அறிமுகம் செய்கிறோம்…


பிஞ்சிலே பழுத்த கவிஞன்!

தென்னமெரிக்க நாடுகளில் சிலி வித்தியாசமான நில அமைப்பைக் கொண்டது. நீளமான கடற்கரையையும், மிகக் குறுகலான நிலப்பரப்பும், மலைகளும், வறண்ட அடகாமா பாலைவனத்தையும் உள்ளடக்கியது.

சிலி தலைநகர் சாண்டியாகோவிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பர்ரல் என்ற நகரம். இந்த நகரில் 1904 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி பிறந்தவர் பாப்லோ நெருடா. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ரிகார்டோ எலீஸெர் நெஃப்தாலி ரெயெஸ் பஸோல்டோ. அப்பாடி ரொம்ப கஷ்டமான, நீளமான பெயராக இருந்திருக்கிறது.

அப்பா பெயர் ஜோஸ் டெல் கார்மென் ரெயெஸ் மோரல்ஸ். ரயில்வே ஊழியர். அம்மா ரோஸா பஸோல்டோ. பள்ளி ஆசிரியை. பாப்லோ நெருடா பிறந்து இரண்டு மாதங்களில் தாயார் ரோஸா இறந்தார். மனைவி இறந்ததும் நெருடாவின் அப்பா ரெயெஸ், டெமுகோ என்ற நகருக்கு மாறினார். அங்கு அவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ரொடால்ஃபோ மகன் பிறந்தான். நெருடாவின் தந்தைக்கு இன்னொரு பெண்ணுடனும் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு லாரா என்ற பெண் குழந்தை பிறந்தது. டெமுகோ நகரில் தனது தம்பி மற்றும் தங்கையோடு பாப்லோ வளர்ந்தார். 1914 ஆம் ஆண்டு பாப்லோ தனது முதல் கவிதையை எழுதினார்.

இறை நம்பிக்கை அற்றவராகவே வளர்ந்த பாப்லோ கவிதை எழுதுவதையும், இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவதையும் தந்தை விரும்பவில்லை. ஆனால், இவர் படித்த உள்ளூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேப்ரியெலா மிஸ்ட்ரால் உள்பட இவரைச் சுற்றியிருந்த பலர் இவருடைய கவிதைத் திறனை ஊக்குவித்தனர். இவருடைய பள்ளித் தலைவரான கேப்ரியெலா மிஸ்ட்ரால் பின்னாளில் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தனது 13 ஆவது வயதில் லா மனானா என்ற உள்ளூர் நாளிதழில் இவருடையை முதல் கட்டுரை வெளியானது. நெஃப்டாலி ரெயெஸ் என்ற பெயரில் வெளியான அந்த முதல் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா? “உற்சாகமும் விடாமுயற்சியும்!”

1918 முதல் 1920 வரை “எனது கண்கள்” உள்பட பல கவிதைகளும் கட்டுரைகளும் உள்ளூர் இதழ்களில் பிரசுரமாகின. அனைத்திலும் நெஃப்டாலி ரெயெஸ் என்ற பெயரே இடம்பெற்றது. 1919 ஆம் ஆண்டு மத்தியில் ஜியூகோஸ் ஃப்ளோரல்ஸ் டெல் மவ்லே என்ற இலக்கிய போட்டியில் கலந்துகொண்டு, மூன்றாம் பரிசு வென்றார். பரிசு வென்ற கவிதையின் தலைப்பு “கம்யூனியன் ஐடியல்” அல்லது “நோக்டர்னோ ஐடியல்”. ஸ்பானிஷ் கவிதைத் தலைப்பான இது, இரவு விருந்தின் லட்சியத்தை பற்றியது.

1920 ஆம் ஆண்டின் மத்தியில் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரை தனக்காக வைத்துக்கொண்டார். தனது தந்தை தன்னுடைய எழுத்தார்வத்தை தடுத்துவிடுவாரோ என்ற பயத்தில்தான் இந்தப் பெயரை சூட்டிக்கொண்டார். அந்தக் காலத்தில் ஜேன் நெருடா என்ற புகழ்பெற்ற செக்கோஸ்லோவாகியா கவிஞர் இருந்தார். அவருடைய நினைவாகவே தனது பெயரை வைத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

1921 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் சிலி பல்கலைக் கழகத்தில் பிரெஞ்ச் மொழியைப் படிப்பதற்காக தலைநகர் சாண்டியாகோவுக்கு சென்றார். பிரெஞ்ச் மொழியைக் கற்று ஆசிரியராகும் நோக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், புகழ்பெற்ற சிலி நாட்டு எழுத்தாளர் எடுவர்டோ பேர்ரியாஸ் உதவியோடு முழுநேரமும் கவிதை எழுதுவதற்காக செலவிடத் தொடங்கினார். சிலி நாட்டின் மிகப் புகழ்பெற்ற, மிக முக்கியமான பதிப்பாளரான டான் கார்லோஸ் ஜார்ஜ் நாஸ்சிமெண்ட்டோவை சந்தித்த நெருடா, அவரை எளிதில் கவர்ந்தார். 1923 ஆம் ஆண்டு நெருடா எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு “க்ரெபஸ்குலேரியோ” அல்லது “புக் ஆஃப் ட்விலைட்ஸ்” வெளியானது. தமிழில் இதற்கு “அந்தி” அல்லது “அந்திவெளிச்சம்” என்று அர்த்தம் கொள்ளலாம். இந்த கவிதைத் தொகுப்புக்கு நஸ்சிமெண்ட்டோ பதிப்புரை எழுதியிருந்தார்.

அடுத்த ஆண்டு, “வெய்ன்ட்டே போயமாஸ் டி அமோர் ஒய் யுனா கேன்சியன் டெஸெஸ்பெர்டா” அல்லது “ட்வெண்ட்டி லவ் போயம்ஸ் அண்ட் எ டெஸ்பெரேட் சாங்” என்ற கவிதைத் தொகுதி வெளியானது. தமிழில், “20 காதல் கவிதைகளும் ஒரு ஆற்றொணா பாடலும்.”

நெருடாவின் இரண்டு கவிதைத் தொகுப்புகளிலும் அவருடைய வயதுக்கு மீறிய பாலுணர்வு வெளிப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்தக் கவிதைகள் பெரிய அளவில் வரவேற்கப்பட்டன. பாராட்டுகளை வாரிக் குவித்தன. குறிப்பாக 20 கவிதைகளும் ஒரு ஆற்றொணா பாடலும் என்ற கவிதைத் தொகுப்பு உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. அந்தப் புத்தகம் ஒரு நூற்றாண்டு கடந்து இப்போதும் ஸ்பானிஷ் மொழியில் அதிகம் விற்கிற புத்தகம் என்ற இடத்தை பிடித்திருக்கிறது. அந்தப் புத்தகம் நெருடாவுக்கு அவருடைய 20 ஆவது வயதிலேயே சர்வதேச அளவில் கவிஞர் என்ற தகுதியை பெற்றுக் கொடுத்தது. ஆனால், அவரோ வறுமையைத்தான் எதிர்கொண்டார்.

1926 ஆம் ஆண்டு “தி அட்டெம்ப்ட் ஆஃப் தி இன்ஃபினிட் மேன்” அல்லது “எல்லையற்ற மனிதனின் முயற்சி” என்ற தொகுப்பையும், “தி இன்ஹேபிடன்ட் அண்ட் ஹிஸ் ஹோப்” அல்லது “வசிப்பிடவாசியும் அவருடைய நம்பிக்கையும்” என்ற நாவலையும் வெளியி்ட்டார்.

1927 ஆம் ஆண்டு நெருடா நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்தச் சமயத்தில் பர்மா தலைநகர் ரங்கூனில் கவுரவ தூதர் பதவி கிடைத்தது. அன்றைக்கு பிரிட்டிஷ் இந்தியாவின் குடியேற்ற நாடாக பர்மா இருந்தது. டெல்லியிலிருந்தே பர்மாவையும் பிரிட்டன் நிர்வாகம் செய்தது. முன்னெப்போதும் கேள்வியே பட்டிராத ரங்கூனில் அவர் சில காலம் இருந்தார். பின்னர், சிலோன் என்று அழைக்கப்பட்ட கொழும்பு, பாடவியா என்று அழைக்கப்பட்ட ஜாவா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வேலைக்கு அனுப்பப்பட்டார். இந்த நாடுகளில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி ஏராளமான கவிதை நூல்களை படித்தார்.

(இன்னும் வரும்)

அடுத்த பகுதி:


அரசுப் பொறுப்புகளும் இடசாரி அரசியலும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #2

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT