ADVERTISEMENT

சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2

05:48 PM Nov 04, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"சச்சினும் நீங்களும் ஒப்பனர்களாக விளையாடி வருகிறீர்கள். இப்போது நான் ஏன் ஒப்பனராக வேண்டும்? நான் மிடில் ஆர்டரிலேயே ஆடுகிறேன்'' என்றவரை, இல்லை நீ ஒப்பனராக ஆடித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் வெளியில் உட்கார் என கங்குலி மிரட்டி ஒப்பனராக இறக்கிவிட்டவர்தான் வீரேந்திர சேவாக்.

என்ன நினைத்து கங்குலி அவரை ஓப்பனராக அனுப்பினார் என்பது தெரியாது. அவரும் ஓப்பனரானதை விரும்பவில்லை .ஆனால், இப்போது அனைவருக்கும் பிடித்தமான ஒப்பனராகிவிட்டார். ஒப்பனர் என்றால் பந்தை விட்டு விட்டு ஆடவேண்டும், விக்கெட்டை தற்காத்துக் கொள்ளவே முயலவேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கிரிக்கெட் பந்துகளை எப்படி அடித்து நொறுக்குவாரோ அதேபோல் அடித்து நொறுக்கியவர் சேவாக்.

எவ்வளவு பெரிய ஒப்பனராக இருந்தாலும் மைதானத்தின் தன்மை, பந்து ஸ்விங் ஆகிறதா இல்லையா என்பவைகளைப் பார்க்க ஒன்று இரண்டு பந்துகளை அடிக்காமல் விடுவார்கள், இல்லையெனில் டிஃபன்ஸ் ஆடுவார்கள். ஆனால் சேவாக்கை பொறுத்தவரை பௌலர்கள் தான் டிஃபன்ஸ் மோடிற்குச் செல்லவேண்டும். முதல் பந்திலிருந்தே பௌலர்களை நொறுக்க வேண்டும் என ஆடவருபவர் சேவாக். "டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த ஓப்பனரான கவாஸ்கர் டிஃபன்ஸ் விளையாடி பந்தை பழையதாக மாற்றுவதில் நம்பிக்கை உடையவர். சேவாக் பந்துகளை அடித்து பழையதாக மாற்றுவதில் நம்பிக்கை உடையவர். இருவர் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரியது'' என்று சேவாக்கின் பேட்டிங்கை புகழ்ந்தார் கங்குலி.

கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் வார்த்தை புட்வொர்க். வேகப்பந்து வீச்சை பொதுவாகக் கண்ணுக்குக் கீழே ஆட வேண்டும் என்பார்கள் பயிற்சியாளர்கள். பந்தின் லைனை கவர் செய்து ஆடவும் டிஃபன்ஸ் ஆடவும் புட்வொர்க் முக்கியம். ஆனால் சேவாக்கிடம் புட்வொர்க் என்றால் ''அட அதெல்லாம் எதுக்குப்பா நமக்கு" என்பார். சுழற்பந்து வீச்சாளர்களை இறங்கி அடிக்கும் சேவாக் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் கால்களை நகர்த்தாமல் அசால்ட்டாக டீல் செய்வார்.

கண்களுக்கும் கைகளுக்கும் உள்ள ஒருங்கிணைப்பு என்பதே சேவாக்கின் டெக்னிக். அதுவே அவரது பலம். ''பந்தை பார்த்து அடி" என்பதே சேவாக்கின் ஒரே ஃபார்முலா. ஆனால் இந்த ஃபார்முலாவை வைத்துக்கொண்டு ஓப்பனிங் ஆடுவது என்பது கடினம். பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனாலும், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஒப்பனராக இருந்தார் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது.

வீரேந்திர "தக் லைஃப்" சேவாக் என நாம் அவரை கூப்பிடலாம். அந்த அளவிற்கு நக்கல் பிடித்தவர். விசில் அடித்துக்கொன்டே பேட்டிங் ஆடுவது. பந்து வீச்சாளர்களை நக்கல் அடிப்பது என அவரின் சேட்டைகள் ஏராளம். ஒரு முறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சேவாக் பேட்டிங் செய்யும்போது எல்லைக்கோட்டின் அருகே ஃபீல்டர்களை நிறுத்தி, தினேஷ் கனேரியா நெகடிவ் லைனில் (கால்கள் பக்கத்தில்) பந்து வீச பாகிஸ்தான் கேப்டன் இன்சமாமிடம் பீல்டரை உள்ளே அழையுங்கள் எனக் கூறினார் சேவாக். எதுக்கு என கேட்ட இன்சமாமிடம் நான் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று கூற, அவர் கிண்டல் அடிக்காதே என்றதும், ஒரு பந்துக்கு மட்டும் கூப்பிட்டுப் பாருங்கள் எனக் கூறி இன்சமாமையே பீல்டரை உள்ளே அழைக்க வைத்தார். அடுத்த பந்தில் சொன்னமாதிரியே சிக்ஸர் அடித்தார் சேவாக். இப்போதும் ட்விட்டரிலும் அதே போல் அனைவரையும் நக்கல் அடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

வீரேந்திர சேவாக் டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர். பெரிய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளுவதற்கு முன்புகூட எதைப்பற்றியும் யோசிக்காமல் ஹெட்செட்டில் பாடல் கேட்பவர். சேவாக்கை போல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக ஆடுவது கடினம். அவரைப்போல் இன்னொரு பேட்ஸ்மேனை காண்பது நடக்காத ஓன்று. அதிரடி என்றாலே நமக்கு இப்போதும், எப்போதும் நினைவில் ஒலிப்பது சேவாக்கின் பெயர்தான்.

ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானதா..? எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் - கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #1

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT