ADVERTISEMENT

வரலாற்று சாதனை நிகழ்த்திய கோலி; இந்திய அணி மீண்டும் வெற்றி

02:00 PM Feb 19, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் சிரப்பாக ஆடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் மூன்று விக்கெட்களையும், ஜடேஜா மூன்று விக்கெட்களையும் ஷமி நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 81 ரன்களை எடுத்து அவுட்டாக ஹேண்ட்ஸ்கோப் 72 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 17 ரன்களில் முதலில் வெளியேற அடுத்தடுத்த விக்கெட்களை இந்திய அணி தொடர்ச்சியாக இழந்தது. விராட் கோலி மட்டும் நிதானமாக ஆடி 44 ரன்களில் ஆடிக்கொண்டு இருந்தபோது குஹன்மன் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இறுதியில் அக்ஸர் படேல் மற்றும் அஸ்வின் ஜோடி கைகொடுக்க இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அக்ஸர் படேல் 74 ரன்களையும் அஸ்வின் 37 ரன்களும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா தனது துவக்கத்தை சிறப்பாக அமைத்தது. லபுசானே 35 ரன்களையும் ட்ராவிஸ் ஹெட் 43 ரன்களையும் எடுத்தனர். பின் வந்த வீரர்கள் ஜடேஜாவின் சுழலில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆஸி.யின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்த, அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் ஆஸி. அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க இந்திய அணிக்கு 115 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க ரோஹித் சர்மா மற்றும் புஜாரா தலா 31 ரன்களை எடுத்தனர். ஸ்ரீகர் பரத் 23 ரன்களை எடுக்க இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 118 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தாலும் வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் என்று பார்க்கும்போது இந்திய அணியின் கோலி 549 இன்னிங்ஸ்களில் 25 ஆயிரம் ரன்களை கடந்து சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் சச்சின் இரண்டாவது இடத்திலும் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்திலும் ஜெயவர்த்தனே நான்காவது மற்றும் காலிஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT