Skip to main content

இரண்டு தொடர் நாயகர்கள்; ஆட்ட நாயகனான கோலி; டெஸ்ட் தொடரில் ஜொலித்த இந்தியா

 

Twoplayer of series; Man of the Match kohli; India shone in Test series

 

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது.

 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களுக்கும் புஜாரா 42 ரன்களுக்கும் ஆட்டமிழக்க தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை சுப்மன் கில் பூர்த்தி செய்தார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 289 ரன்களுடன் 3 விக்கெட்களை இழந்து இருந்தது. நான்காவது நாளான நேற்று ஆட்டத்தை துவக்கிய இந்திய அணிக்கு விராட் தூணாக இருந்து ரன்களை சேர்த்தார்.

 

மறுமுனையில் ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் பின் வந்த கே.எஸ். பரத் விராட் கோலிக்கு உறுதுணையாக ரன்களை சேர்த்த வண்ணம் இருந்தார். கே.எஸ்.பரத் 44 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த அக்ஸர் படேல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த சமயத்தில் விராட் கோலி 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் தனது 28 ஆவது சதத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அக்ஸர் 79 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு முனையில் இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டு இருந்த விராட் 186 ரன்களுக்கு அவுட்டானார். விராட் கோலி மற்றும் அக்ஸர் படேலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

 

இறுதி நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் குன்னமென் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தாலும் டிராவிஸ் ஹெட் லபுசானே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. சதத்தை நெருங்கிய நிலையில் டிராவிஸ் ஹெட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய லபுசானே 63 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஸி அணி 175 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸி அணி 80 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. ஆட்டம் முடிய 15 ஓவர்கள் மீதமிருந்தது.

 

இந்நிலையில் இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து பார்டர் கவாஸ்கர் போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் போட்டியை தொடர்ச்சியாக 4 ஆவது முறையாக இந்திய அணி வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக விராட் கோலியும் தொடர் நாயகர்களாக அஷ்வின் மற்றும் ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.  மேலும் இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17 ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !