ADVERTISEMENT

நிதாஸில் வில்லன்... நாக்பூரில் ஹீரோ... அசத்தும் திருநெல்வேலி சங்கர்

05:24 PM Mar 07, 2019 | tarivazhagan

2018-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான நிதாஸ் டிராபி டி20 இறுதிப்போட்டியை இரு தமிழக வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் மறக்க மாட்டார்கள். ஒன்று தினேஷ் கார்த்திக், மற்றொன்று விஜய் சங்கர். அது தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுத்த போட்டி. 8 பந்துகளுக்கு 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்து அசத்தினார். மறுபுறம் விஜய் சங்கர் 19 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். சமூக வலைதளங்களில் வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த ஆட்டத்திற்கு பிறகு தனது பேட்டிங் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக சங்கர் ஒப்புக்கொண்டார். பின்னர் ராகுல் டிராவிட்டின் உதவியுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். ஹர்திக் பாண்டியாவின் சர்ச்சை நிகழ்ச்சி, காயம் ஆகியவை காரணமாக திரும்பவும் இந்திய அணிக்கு வந்தார் சங்கர்.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 2 இன்னிங்க்ஸ் ஆடி 91 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கடைசி போட்டியில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்துக்கொண்டு இருந்தது. சங்கர் மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்து 98 ரன்கள் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த சங்கர் 45 ரன்களில் எதிர்பாராமல் ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ராயுடு மற்றும் சங்கரின் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது.

நிதாஸ் டிராபி இறுதிப்போட்டி எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. வெற்றி, தோல்வியின்போது நடுநிலையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி கண்டபோது இந்த நடுநிலைத் தன்மை எனக்கு உதவியது. கடைசி ஓவர் எனக்கு கொடுக்கப்பட்டபோது என்னால் இந்திய அணியை வெற்றிபெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது என்று நாக்பூரில் நடந்த போட்டிக்கு பின்பு சங்கர் தெரிவித்தார்.

ரவி சாஸ்திரி சங்கரின் பேட்டிங் திறமையை ஆதரித்தார். உலகக்கோப்பை தொடரில் சங்கரை அணியில் எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

21 வயது வீரராக விஜய் சங்கர் 2012-13-ஆம் ஆண்டு தனது முதல் ரஞ்சிக்கோப்பை தொடரில் அறிமுகமானார். மூன்று போட்டிகள் மட்டுமே சங்கர் விளையாடினார். பின்னர் 2014-15-ஆம் ஆண்டு 7 போட்டிகளில் விளையாடி 577 ரன்கள் எடுத்தார். இதில் 2 சதங்கள் மூன்று அரைசதங்கள் அடங்கும். அந்த தொடரில் இருமுறை ஆட்ட நாயகன் விருதை பெற்றார். சங்கரின் சிறப்பான ஆட்டம் மூலம் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் 2014-ஆம் ஆண்டு ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். பின்னர் 2017-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடினார். கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 13 போட்டிகளுக்கு 212 ரன்கள், சராசரி 53. இதுவரை 18 ஐ.பி.எல் போட்டிகளில் 313 ரன்கள், 52.17 சராசரி, இரண்டு அரை சதம் அடித்துள்ளார்.

நான் சிறுவயதாக இருக்கும் போதே கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தினால் எனது குடும்பம் எனக்கு உதவியாக இருந்தது. பயிற்சியில் ஈடுபடுவதற்கு வீட்டு மொட்டை மாடியில் நெட் பிராக்டிஸ் செய்ய பெற்றோர் வசதி செய்து தந்தனர் என சங்கர் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

சிறுவயது முதல் படிப்பு, விளையாட்டு ஆகிய இரண்டிலும் நன்றாக செயல்பட்டு வந்தார் சங்கர். 17 வயதில் படிப்பா, கிரிக்கெட்டா என்ற முடிவில் கிரிக்கெட்டை தேர்வு செய்தார். ஆட்ட நுணுக்கங்களை கவனித்து ஆடும் சங்கர் முதலில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். பின்னர் தமிழக அணியில் அதிக சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்த காரணத்தால் சங்கரின் பயிற்சியாளரின் ஆலோசனை மூலம் மித வேகப்பந்து வீச்சாளராக மாறினார்.

ஆல்ரவுண்டரான சங்கர் திருநெல்வேலியை சேர்ந்தவர். சங்கரின் தந்தை கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். அவரது சகோதரர் அஜய் சங்கர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். சங்கரின் குடும்பம் கிரிக்கெட் குடும்பம்.


ராயுடு அடிக்கடி பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். ஹர்திக் பண்டியாவிற்கு காயம் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. பேட்டிங்கில் ஜொலிக்கும் சங்கர் பவுலிங்கிலும் பங்களிப்பார். இவர் உலகக்கோப்பை அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டராக இடம்பெற நாளுக்கு நாள் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT