ADVERTISEMENT

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய மூன்று வீரர்கள்!

05:43 PM Nov 11, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மார்ச் மாதம் நடைபெற இருந்த 13-ஆவது ஐ.பி.எல் தொடரானது கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், கரோனா பாதிப்பு குறைவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு, அது குறித்தான அறிவிப்பை பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 56 போட்டிகள் லீக் போட்டிகள், 4 போட்டிகள் பிளேஆஃப் சுற்று போட்டிகள் ஆகும்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் தேவ்தத் படிக்கல், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினர். அந்தவகையில், மூன்று முன்னணி வீரர்களின் நடப்பு ஐ.பி.எல் செயல்பாட்டைப் பார்க்கலாம்.

தோனி

சர்வதேச ஓய்விற்குப் பிறகு, தோனி களமிறங்கும் தொடர் என்பதால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 14 போட்டிகளில் விளையாடிய தோனி, 200 ரன்கள் மட்டுமே குவித்து ரசிகர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தவறினார். மேலும், நடப்பு ஐ.பி.எல் தொடரே தோனியின் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தொடராக அமைந்துள்ளது. சென்னை அணி முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து, அணியை வழிநடத்தும் திறன் குறித்தும் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரிஷப் பண்ட்

டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் மீதும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், ஒரே ஒரு அரை சதம் அடித்து 343 ரன்கள் குவித்துள்ளார். இந்த அரை சதமும் மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளைன் மேக்ஸ்வெல்

அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை படைத்தவரான ஆஸ்திரலியாவைச் சேர்ந்த கிளைன் மேக்ஸ்வெல், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் போட்டிகளில் கிளைன் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்துவதற்காக எதிரணியினர் தனி வியூகங்கள் வகுத்த சீசன்களெல்லாம் உண்டு. அந்த அளவிற்கு சிக்ஸர்கள் விளாசி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய மேக்ஸ்வெல், நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 13 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 9 பவுண்டரிகள் அடித்து, வெறும் 108 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT