ADVERTISEMENT

விடாது துரத்தும் துரதிருஷ்டம், மழை... விதியை வெல்லுமா தென் ஆப்பிரிக்கா?...

03:00 PM May 30, 2019 | kirubahar@nakk…

ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும் ஏதேனும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வெல்ல முடியாமல் இருந்து வருகிறது.

முதன்முதலாக 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அறிமுகமானது தென் ஆப்பிரிக்கா அணி. தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சுலபமாக வென்றது. பின்னர் நியூசிலாந்து, இலங்கை அணிகளுடனான தோல்விகளுக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. மழை காரணமாக 45 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 252 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட்கள் இழந்து 231 ரன்கள் எடுத்திருந்த போது முக்கிய பேட்ஸ்மேன்களான பிரையன் மெக்மில்லன், டேவ் ரிச்சர்ட்சன் களத்தில் இருந்தனர். 43-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. வெற்றி பெற 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்படும் நிலையில் புதிதாக விதிக்கப்பட விதிப்படி ஒரே பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அதிர்ச்சி நடந்தது.

வெற்றிக்கு சற்று அருகில் சென்று அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிபோட்டிக்கு செல்ல முடியாமல் கோப்பை கனவை தவிடுபொடியாக்கியது மழை. தென் ஆப்பிரிக்கா வீரர் ரோட்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பாக ரன் அவுட் ஒன்றை செய்தார். இன்சமாம் அடித்த பந்தை ஸ்கோயர் லெக் திசையிலிருந்து வந்து பந்தை எடுத்து புலிபாய்ச்சலில் ரன் அவுட் செய்து அனைவரையும் திக்குமுக்காட செய்தார்.

அடுத்து 1996-ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பலமான அணிகளை எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா அணி. லீக் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடையாமல் கால் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று ஏமாற்றமளித்தது.

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கேரி கிர்ஸ்டன், ஹர்ஷல் கிப்ஸ், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், காலிஸ், ஜாண்டி ரோட்ஸ், லான்ஸ் குளூஸ்னர் ஆகியோருடன் சிறந்த அணியாக வலம்வந்தது. சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. ஸ்டீவ் வாக் 56 ரன்கள் எடுத்திருந்தபோது கிப்ஸ் அவரது கேட்ச்சை மிஸ் செய்தார். கிப்ஸிடம் "நீ தவற விட்டது கேட்ச் இல்லை, உலகக்கோப்பையை" என்று கூறினார் ஸ்டீவ் வாக். 120 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார் ஸ்டீவ் வாக்.

தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நான்கு பந்துகள் இருக்கும் போது ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டொனால்ட் ரன் அவுட் ஆனார். ஆட்டம் டிராவில் முடிந்தது.

சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை வென்று நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தது. ஸ்டீவ் வாக் கூறியதை போல கிப்ஸ் அந்த கேட்ச் பிடித்திருந்தால் சூப்பர் சிக்ஸ் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். அரைஇறுதிப்போட்டி டிராவில் முடிந்ததால், சூப்பர் சிக்ஸ் போட்டியில் தோல்வி காரணமாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணியால் செல்ல முடியாமல் போனது.

2003-ஆம் ஆண்டு சிறந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள், அசத்தல் மிடில் ஆர்டர்கள், பெஸ்ட் ஆல்ரவுண்டர்கள், மின்னல் வேக பந்து வீச்சாளர்கள் என மிகச்சிறந்த அணியை கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரை சொந்த நாட்டில் எதிர்கொண்டது. இலங்கை அணியுடன் கடைசி லீக் போட்டியில் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. பௌச்சர் மற்றும் குளூஸ்னர் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

அப்போது மழை குறுக்கிட்டு ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெரும் நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும். மழை மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணியின் கோப்பை கனவை தகர்த்தது.

2007-ஆம் ஆண்டு லீக் போட்டிகள், சூப்பர் 8 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதிப்போட்டியில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா அணியிடம் பரிதாபமாக தோற்றது. இந்த தொடரில் தான் தென் ஆப்பிரிக்கா அணியின் கிப்ஸ் நெதர்லாந்து அணியுடன் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

2011-ஆம் ஆண்டு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. ஆம்லா, ஸ்மித், காலிஸ், டி வில்லியர்ஸ், டு பிளெசிஸ், டேல் ஸ்டெயின், மோர்கல் ஆகிய சிறந்த வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினர். இருந்தபோதிலும் கால் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் 221 என்ற எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தது.

2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் இரண்டாவது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. மழை காரணமாக ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஒரு பந்து மீதம் இருக்கையில் ஸ்டெயின் பவுலிங்கில் எலியட் சிக்ஸ் அடித்து நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றார்.

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்ததால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கண்ணீருடன் மைதானத்தில் இருந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது.

இந்த வருட உலகக்கோப்பை தொடரில் டூ பிளெசிஸ் தலைமையில் ஆம்லா, டி காக், டூமினி, மில்லர், மோரிஸ், தாஹிர், லுங்கி இங்கிடி, ராபாடா, ஸ்டெயின் என நட்சத்திர பட்டாளம் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி களம் காண்கிறது. இந்த முறை டூ பிளெசிஸ் தலைமையிலான அணி 27 வருடம் இருந்த துரதிருஷ்டம், மழை ஆகிய விதிகளை எதிர்கொண்டு கோப்பையை பெறும் என்று உலகம் முழுவதும் உள்ள தென் ஆப்பிரிக்கா அணியின் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT