ADVERTISEMENT

கிரிக்கெட் வரலாற்றிலே 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய வீரர் திரும்பி வருகிறார்...

11:13 AM Feb 14, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எல்லைக்கோட்டிற்கு அருகிலிருந்து ஓடி வரும் தூரம், பந்தின் வேகம், முகபாவனைகள் உள்ளிட்டவை மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துபவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது தான் அவரின் கடைசி போட்டியாக இருந்தது. அனைத்து பேட்ஸ்மேன்களையும் தனது வேகத்தால் மிரட்டும் அக்தர் இதுவரை 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்கள் எடுத்துள்ளார். பவுலிங் சராசரி 24.98, எகானமி ரேட் 4.77. 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்கள், எகானமி ரேட் 3.37. 15 டி-20 போட்டிகளில் 19 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

சர்வேதச கிரிக்கெட் வரலாற்றில் 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய வீரர் அக்தர். இவரது வேகமான பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த வீரர்கள். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அக்தர் பந்துவீச்சை சிக்ஸர்களாகவும், பவுண்டரியாகவும் அடித்து அசத்தினார் சச்சின். டிராவிட் என்ற தடுப்பு சுவரை தனது வேகத்தால் அக்தர் அவுட் செய்து இருந்தாலும், எல்லை கோட்டிற்கு அருகில் இருந்து ஓடி வந்து வீசும் பந்தை அசால்ட்டாக தடுத்து நிறுத்தும் திறமை டிராவிட் தவிர வேறு எந்த வீரரிடமும் இல்லை.

ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அங்கமாக முதல் சீசனில் கொல்கத்தா அணிக்கு விளையாடினார் அக்தர். டெல்லி அணிக்கு எதிராக 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் எடுத்து அணியை வெற்றி பெற உதவினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், ஜட்ஜாகவும் கலந்து கொண்டு வந்தார். தற்போது பெரும்பாலும் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் ஷோயப் அக்தர், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வரப்போவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வரவேற்று உள்ளனர். தற்போது விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு உண்மையான ஃபாஸ்ட் பவுலிங் என்றால் எப்படி இருக்கும் என்று காட்ட திரும்ப வருவதாக கூறி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மெசேஜ் மூலம் தன் வருகையை தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.

“இன்றுள்ள கிட்ஸ் தங்களுக்கு கிரிக்கெட் பற்றி அதிகமாக தெரியும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ஃபாஸ்ட் பவுலிங்னா என்னவென்று காட்டுகிறேன். பிப்ரவரி 14-ஆம் தேதியை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வருகிறேன்” என்று அந்த வீடியோ மெசேஜில் பதிவிட்டுள்ளார்.

திரும்ப வருகிறேன் என்று சொன்ன அக்தர் எங்கு நடக்கும் போட்டியில், எந்த அணியில் பங்கு பெறப்போகிறார் என்பதை இன்னும் சொல்லவில்லை. துபாய், அபுதாபி, ஷார்ஜா, லாகூர், கராச்சி உள்ளிட்ட இடங்களில் இன்று (பிப்ரவரி 14) முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில் அக்தர் இவ்வாறு தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறனர்.

ஆறு அணிகள் பங்கு பெரும் இந்த தொடரில் ஏ.பி.டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, சோயப் மாலிக், ஷாஹித் அப்ரிடி, ஆண்ட்ரே ரசல், கிரண் போலார்ட் போன்ற உலகின் சிறந்த டி-20 வீரர்கள் விளையாடவுள்ளனர். பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT