Skip to main content

இந்திய வீரர்களை ஏன் பாராட்டக்கூடாது?? அக்தர் காட்டம்!!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

shoaib akhtar

 

 

இந்திய வீரர்களை நாம் ஏன் பாராட்டக்கூடாது என தன்னை விமர்சித்தவர்களை நோக்கி அக்தர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அக்தர் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பிற நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களாயினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதும், ஏதாவது புதிய சாதனை படைக்கும் போதும் மனம் திறந்து பாராட்டக் கூடியவர். அந்த வகையில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை சில தினங்களுக்கு முன்னால் பாராட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சில கிரிக்கெட் ரசிகர்கள் அக்தரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து அக்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த அக்தர், "விராட் கோலியையோ, பிற இந்திய வீரர்களையோ நான் ஏன் பாராட்டக்கூடாது. பாகிஸ்தானிலோ அல்லது உலக அளவிலோ ஏதாவது வீரர் விராட் கோலியின் சாதனையை சமகாலத்தில் நெருங்கி இருக்கிறார்களா, என்னை எதற்காக விமர்சிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் திறமை மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் புள்ளி விவரங்களை எடுத்து பாருங்கள். விராட் கோலி இதுவரை 70 சதம் அடித்திருக்கிறார். இந்தியாவிற்காக பல தொடர்களை வென்று கொடுத்திருக்கிறார். அவரும் ரோஹித் ஷர்மாவும் சிறந்த வீரர்கள், அவர்களைப் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது" என்றார்.

 

தோனி ஓய்வு முடிவை அறிவித்தபோது பிசிசிஐ மீது அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தோனிக்கு ஆதரவாக கருத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

"ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்..." நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகக் கொந்தளித்த அக்தர்!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

Shoaib Akhtar

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி அடுத்த மாதம் 18 -ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தினுள் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

 

நியூசிலாந்து சுகாதாரத்துறை இது குறித்து கூறுகையில், "சில வீரர்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் அவற்றை மீறியிருப்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. மொத்த அணிக்கும் இறுதி எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது" எனக் கூறியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் நியூசிலாந்து சுகாதாரத்துறை மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசும் போது, "நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது கிளப் அணி அல்ல. பாகிஸ்தான் நாட்டின் தேசிய அணி. தொடரை ரத்து செய்துவிடுவோம் என்ற கருத்தை நீங்கள் எப்படிக் கூறலாம். எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. இத்தொடருக்கான ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைக்கும் பணமும் உங்களுக்குத்தான் வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் விளையாட வந்ததற்கு நீங்கள் எங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறீர்கள். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இது போன்ற கருத்துகள் கூறுவதை நிறுத்துங்கள். அடுத்த முறை ஒரு விஷயத்தைக் கூறும் போது கவனமாக இருங்கள்" எனக் கூறினார்.

 

 

 

Next Story

"போதைப் பொருள் எடு... இல்லாவிட்டால்" என்று என்னிடம் கூறினார்கள் - அக்தர் பேச்சு!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

shoaib akhtar


தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில், "போதைப் பொருட்கள் எடுத்துக்கொள்" என்று தன்னிடம் சிலர் கூறியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், பாகிஸ்தான் நாட்டின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது பேசிய அக்தர், "நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில் என்னைச் சிலர் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளக் கூறினார்கள். இல்லையென்றால், என்னால் வேகமாகப் பந்துவீச முடியாது என்றார்கள். நான் அதை மறுத்துவிட்டேன்" எனக் கூறினார்.

 

மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அக்தர் பகிர்ந்துள்ளார்.