ADVERTISEMENT

நியூசிலாந்து வெற்றி; பாகிஸ்தான் இதைச் செய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு!

10:56 PM Nov 09, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகக்கோப்பையின் 41 ஆவது லீக் ஆட்டம் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (09.11.2023) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் நிஷங்கா 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 6, சமரவிக்ரமா 1, அசலங்கா 8 என நடையைக் கட்டினர். குசால் பெரேரா மட்டும் அதிரடியாக 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேத்யூஸ் 16, டி சில்வா 19 கருணரத்னே 8, சமீரா 1 என பெவிலியன் திரும்ப, கடைசி விக்கெட்டுக்கு இணைந்த தீக்‌ஷனா, மதுஷங்கா இருவரும் ஓரளவு நின்று ஆடினர். மதுஷங்கா 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தீக்‌ஷனா மட்டும் 38 ரன்களுடன் களத்தில் நின்றார். இறுதியில் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஃபெர்குசன், சான்ட்னர், ரச்சின் தலா 2 விக்கெட்டுகளும், செளதி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே, ரச்சின் சிறப்பான துவக்கம் தந்தனர். கான்வே 45 ரன்களில் வெளியேற முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ரச்சின் 42 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் வில்லியம்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ஓரளவு நின்று 43 ரன்கள் எடுத்தார். சாப்மேன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிலிப்ஸ் 17, லாதம் 2 என நின்று 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டுகளும், தீக்‌ஷனா, சமீரா ஆகியோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று ரன் ரேட் +0.743 என்று உயர்த்திக் கொண்டு அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது.

ஆப்கானிஸ்தான் அணி கிட்டத்தட்ட வெளியேறி விட்டது. பாகிஸ்தானுக்கு மட்டும் ஓரளவு வாய்ப்பு உள்ளது. நவ.11 அன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். ஒருவேளை இரண்டாவது பேட்டிங் என்றால் அரையிறுதி வாய்ப்பு இல்லை என்றே பொருள் கொள்ளலாம்.

- வெ.அருண்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT