ADVERTISEMENT

ஒரு முறை, இரு முறை அல்ல... ஒவ்வொரு முறையும் அசத்திய அணி...

09:52 AM May 13, 2019 | tarivazhagan

2011-ஆம் ஆண்டில் 139, 2013-ல் 148, 2017-ல் 129, 2019-ல் 149. இவை ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி டிபண்ட் செய்த ரன்கள். குறைந்த ரன்களை டிபண்ட் செய்வதில் வல்லவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர் மும்பை அணியின் பவுலர்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2011 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை என வென்ற 6 இறுதிப்போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்திருந்தது. இதில் 2011-ஆம் ஆண்டு ஹர்பஜன் கேப்டன். மற்ற அனைத்து போட்டிகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார்.

தாகூரின் பவுன்சர்கள், தாஹிரின் சுழல், பொல்லார்டின் இறுதிநேர அதிரடி, பொல்லார்டுக்கு வீசிய அகலப்பந்து சர்ச்சை, மீண்டும் சொதப்பிய சென்னை பேட்டிங், தோனியின் சர்ச்சைக்குரிய ரன் அவுட், வாட்சனின் போராட்ட குணம் கொண்ட பேட்டிங், மிடில் ஓவரில் சஹாரின் அசத்தல் பந்துவீச்சு, டெத் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவின் மிரட்டலான பவுலிங், மலிங்காவின் கடைசி ஓவர் த்ரில்லிங் என நேற்றைய போட்டி எதிர்பார்த்தது போலவே பல பரபரப்புகளை கொண்டிருந்தது.

2013-ல் பொல்லார்ட் 32 பந்துகளில் 60 ரன்கள், 2017-ல் குருணல் பாண்டியா 38 பந்துகளில் 47 ரன்கள், 2019-ல் தனது பிறந்தநாளில் மீண்டும் பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் என முதல் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு வீரர் அடித்த ரன்களே அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

இந்த வருடம் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் முதல் பேட்டிங்கின்போது 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. வார்னர், பேர்ஸ்டோவ் என அச்சுறுத்தும் பேட்டிங் லைன் கொண்ட சன்ரைசர்ஸ் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மற்ற அணிகளை ஒப்பிடும்போது மும்பை அணியின் பவுலிங் அட்டாக் மிகவும் பலமாக இருந்து வருகிறது. மேலும், மும்பை அணியின் பயிற்சியாளர்களின் அனுபவமும் இதற்கு ஒரு காரணம். மன ரீதியாக குறைந்த ரன்களை டிபண்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே இரண்டாவது இன்னிங்சை விளையாடுகின்றனர்.

அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்பை அணி மிகவும் அசத்தலாக செயல்படுகிறது. சென்ற முறை ரெய்னா, ஜடேஜா போன்ற இடது கை ஆட்டகாரர்களுக்காக அணியில் சேர்க்கப்பட்ட ஜெயந்த் யாதவ் ரெய்னாவை வீழ்த்தினார். இந்த முறை மைதானத்திற்கு ஏற்ப ஒரு கூடுதல் ஃபாஸ்ட் பவுலர் தேவைப்பட்டதால் அவருக்கு பதிலாக இந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த மிட்செல் மெக்லீனகான் அணியில் சேர்க்கப்பட்டார்.

மைதானத்தின் தன்மை, எதிரணியின் பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீரர்களை தேர்வு செய்வதில் மற்ற அனைத்து அணிகளைவிட மும்பை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு டீம் மேனேஜ்மண்ட், பயிற்சியாளர்கள் யூனிட், கேப்டன்ஷிப் ஆகியோர் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

ஒரு ஆட்டத்தை மாற்றக்கூடியது பீல்டிங். பெரும்பாலும் சிறப்பாக பீல்டிங் செய்பவர்கள் மும்பை அணியினர். ஆனால் நேற்று 3 கேட்ச்கள், இரண்டு ரன் அவுட்கள் மிஸ் செய்தனர். குறைந்த ரன்களை டிபண்ட் செய்கையில், இவ்வளவு மிஸ் சான்ஸ், தேவையில்லாமல் சென்ற 10+ ரன்களையும் தாண்டி மும்பை வென்றது பெரிய சாதனை தான்.

இக்கட்டான சூழ்நிலையில் அணியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை ரோஹித் தெளிவாக உணர்ந்திருக்கிறார். எதிரணியின் பேட்ஸ்மேன்களின் பிளஸ், மைனஸ் அறிந்து பவுலர்களை சரியான முறையில் கையாண்டுள்ளார். கள வியூகம் மற்றும் வீரர்களின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எந்த இடத்தில் பயன்படுத்துவது என கேப்டன்சியில் மேலும் மேலும் முதிர்ச்சியடைந்து வருகிறார் ரோஹித் சர்மா.

பெரும்பாலும் மற்ற அணியுடன் விளையாடும் போதும் தோனியின் ஸ்மார்ட் ஐடியா சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தரும். மும்பை அணியுடன் மோதும்போது அதே ஸ்மார்ட் ஐடியா மூலம் விளையாடினாலும், மும்பை அணி டபுள் ஸ்மார்ட்டாக சென்னை அணியை வீழ்த்திவிடுகிறது. இந்த சீசனில் சென்னை அணியை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் சுலபமாக வெற்றி பெற்றது மும்பை அணி. இறுதிப்போட்டியில் மட்டுமே கடைசி வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது மும்பை அணி.

இதுவரை ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளை 6 முறை சந்தித்த ரோஹித் சர்மா ஒரு முறை கூட தோல்வியடையவில்லை. 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சர்மாவின் மும்பை அணி 3 முறை தோனி தலைமையிலான சென்னை அணிக்கு எதிராகவும், ஒரு முறை தோனி விளையாடிய புனே அணியுடனும் வென்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல. ஒவ்வொரு முறையும் தோனி அணியை வீழ்த்துவது சாதாரண செயல் அல்ல. இது சர்மாவின் கேப்டன் ஸ்கில்களை எடுத்துக் காட்டுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT