ADVERTISEMENT

தோனியின் வலை பயிற்சியில் கீப்பிங் பயிற்சி இருக்குமா?

12:10 PM Feb 13, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.எஸ்.தோனி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தியா உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் தோனி என்று சமீபத்தில் கபில் தேவ் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக 37 வயதாகும் ஒரு வீரரின் உடல்தகுதியை இளம் வயது வீரர்களுடன் ஒப்பிடும்போது இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தோனியின் விஷயத்தில் அவர்தான் அதிலும் டாப். இன்றும் ஒரு இளம் வீரர் போல துடிப்புடனும், வேகமாக ஓடும் திறனுடனும் கலக்கி வருகிறார்.

1960-களுக்கு பிறகு ஃபரோக் இஞ்சினியர், கிரண் மோரே, சையத் கிர்மானி, நயன் மோங்கியா உள்ளிட்ட சிலர் மட்டுமே ரெகுலர் விக்கெட் கீப்பர்களாக 5 வருடங்களுக்கு மேல் அணியில் விளையாடி வந்தனர். அணிக்காக எதையும் தியாகம் செய்யும் டிராவிட் நல்ல விக்கெட் கீப்பர் கிடைக்காத காரணத்தால் 1999 முதல் 2004 வரை விக்கெட் கீப்பராகவும் பணியாற்றினார். சமீர் திஹே, விஜய் தாஹியா, தீப் தாஸ் குப்தா, அஜய் ரத்ரா, தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் படேல் உள்ளிட்ட பலர் உள்ளே வெளியே என மாறி மாறி அணியில் ஆடினாலும் யாருடைய விக்கெட் கீப்பிங்கும் மற்றும் பேட்டிங்கும் அணியின் தேவைக்கு ஏற்றவாறு இல்லை.

நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வந்த இந்திய அணிக்கு உலகின் சிறந்த கேப்டன், பினிஷர், சிறந்த விக்கெட் கீப்பர் உள்ளிட்ட பல தகுதிகளுடன் ஒருவர் கிடைத்தார் என்றால் அது இந்தியாவிற்கு மிகவும் அதிர்ஷ்டமே. விக்கெட் கீப்பிங் மூலம் ஒரு போட்டியில் வெல்ல முடியும் என்று காட்டியவர் எம்.எஸ்.தோனி. இக்கட்டான சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள் அசரும் நொடியில் ஸ்டம்பிங் செய்து அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் திகைக்க வைப்பார்.

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் டிம் செய்ஃபெர்ட் விளையாடும் போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். 0.099 வினாடியில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் தோனி. இதற்கு முன்பு உலக சாதனையான 0.08 வினாடியில் ஸ்டம்பிங் செய்ததும் தோனிதான். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டம்பிங் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தோனி.

தோனி இதற்காக தனியாக பயிற்சி எடுப்பாரா? எப்படி பயிற்சி எடுக்கிறார்? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இதுவரை வலை பயிற்சியின் போது தோனி கீப்பிங் துறைக்காக தனியாக பயிற்சி செய்வதில்லை. வலைப்பயிற்சியின் போது பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என பயிற்சிகள் செய்வார். பயிற்சியின் போது கீப்பிங் செய்து பார்த்ததில்லை என்று வர்ணனையாளரும், முன்னாள் இந்திய அணி வீரருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதுவரை டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி-20 போட்டிகள் என அனைத்திலும் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு முன்பு சிறந்த விக்கெட் கீப்பர்கள் என்று கருதப்பட்டவர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் பவுச்சர். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் 147 டெஸ்ட் போட்டிகளில் 532 கேட்ச்கள் மற்றும் 23 ஸ்டம்பிங் செய்துள்ளார். 295 ஒருநாள் போட்டிகளில் 402 கேட்ச்கள், 22 ஸ்டம்பிங், 25 டி-20 போட்டிகளில் 18 கேட்ச்கள், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில் 131 கேட்ச்கள், 20 ஸ்டம்பிங் செய்துள்ளார். 404 ஒருநாள் போட்டிகளில் 383 கேட்ச்கள், 99 ஸ்டம்பிங் மற்றும் 56 டி-20 போட்டிகளில் 26 கேட்ச்கள், 19 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 96 டெஸ்ட் போட்டிகளில் 379 கேட்ச்கள், 37 ஸ்டம்பிங் செய்துள்ளார். 287 ஒருநாள் போட்டிகளில் 417 கேட்ச்கள், 55 ஸ்டம்பிங் மற்றும் 13 டி-20 போட்டிகளில் 17 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்ச்கள், 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். 338 ஒருநாள் போட்டிகளில் 311 கேட்ச்கள், 119 ஸ்டம்பிங் மற்றும் 96 டி-20 போட்டிகளில் 56 கேட்ச்கள், 34 ஸ்டம்பிங் செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்து யாரும் எட்ட முடியாத இடத்தில் அசத்தும் தோனியின் பிராக்டிஸ் ரகசியம் வியப்பை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT