Skip to main content

இதன் பெயர் யுக்தியா? ஆஸ்திரேலியா பட்ட அசிங்கம்! 

Published on 25/03/2018 | Edited on 25/03/2018

கிரிக்கெட் உலகில் சாம்பியன் அணி என்றால் அது ஆஸ்திரேலியா அணி என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். அவர்களின் திட்டமிடுதல், கையாளும் யுக்திகள், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய துணிச்சல், அதிரடி, பீல்டிங் செய்யும் போது எதிர் அணி வீரரை திட்டுவது, அவர்கள் கவனத்தை சிதைக்கும் வகையில் வசைபாடுவது என்று பல நல்ல மற்றும் கெட்ட வழிமுறைகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள்.
 

Bancroft Steve press meet


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி என்றால் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எப்பொழுதும் இவர் அவரை திட்டினார், அவர் இவரை  திட்டினார் என்று சர்ச்சை கிளம்பும். தற்போது கூட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டி'காக் உடன் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மோதல், அதே போல் ரபாடா இரண்டு டெஸ்ட் போட்டியில் தடை பெரும் அளவிற்கு அவரைத் தூண்டி விட்டதுனு இவங்க செஞ்ச வித்தை நிறைய.
 

ஆனா பாருங்க, இதையெல்லாம் தாண்டி இப்போ சுட சுட ஒரு பிரச்சனை பேசப்பட்டுக்கிட்டு இருக்கு. இந்த விஷயத்துல எப்படி இவ்வளவு மோசமா யோசிச்சுருக்காங்கனு தெரியல. பொதுவா பழைய பந்துல ரிவர்ஸ் ஸ்விங் நல்லா ஆகும். ஒரு பந்தை டெஸ்ட் போட்டியில்  குறைந்த பட்சம் 80 ஓவர்கள் வரை பயன்படுத்தி ஆகணும். 80 ஓவர்களுக்குப் பிறகு பௌலிங் கேப்டன் பந்தை மாற்றுவதென்றால் மாத்தலாம். ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து உடனடியாகவோ இல்லை சற்று தாமதமாகவோ மாற்றுவார்கள். பந்து நல்லா ரிவர்ஸ் ஸ்விங் ஆகுது, விக்கெட் விழுகிறது என்றால் அதே பந்தைத் தொடருவாங்க, இல்லை புது பந்தை மாத்திவிடுவாங்க.

 

Bancroft with umpire


பிட்ச்சைப் பொறுத்து ரிவர்ஸ் ஸ்விங்கில் விக்கெட் எடுக்க முடியும். அதற்காகத்தான் பந்தை எச்சில் தடவி பேண்ட்டில் தேய்த்து பந்து வீச்சாளரிடம்  தருவாங்க. அப்படித்தான் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் போனகிராபிட் பந்தை தேய்த்துக் கொடுத்தார். இதில் என்ன தப்புனு கேட்டீங்கன்னா, அவர் தேய்த்து கொடுத்தது அவர் பேண்ட்டில் இல்லை பேண்ட்டில் தேய்ப்பது போல உள்ளே மறைத்து வைத்திருந்த சொர சொரப்பான காகிதத்தில் (சாண்ட் பேப்பர்). சுத்தி பல கேமராக்கள் இருக்கும் என்பதை மறந்து இப்படி விதிகளை மீற என்ன துணிச்சல் இருக்க வேண்டும்? ஆஸ்திரேலிய அணி கேப்டன் தான் துணிச்சல் கொடுத்தது, இதை அவர்கள் முக்கிய யுக்திகள் ஆலோசனை தரும் குழுவில் ஒரு யுக்தியாக முடிவு செய்து பொறுப்பை போனகிராப்டிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த யுக்தியை, இருப்பதிலேயே சற்று புது வீரரைத்  தேர்ந்தெடுத்து, பாவம் மறுப்பு கூற முடியாதல்லவா, அதனால் அவரை செய்ய சொல்லியிருக்கிறார்கள். அவரும் சரியாக தப்பாக செய்து மாட்டிக்கொண்டார். அவர் மட்டும் இல்லாமல் தொடர்வண்டி போல அனைவரையும் இழுத்து தெருவில் விட்டு விட்டார்.
 

களத்தில் நடுவர்கள் கேட்டபோது, 'இல்லை' என்று அற்புதமாக நடித்து மறுத்தவர், பின்பு வீடியோ ஆதாரத்துடன் கேட்டதும் ஒப்புக்கொண்டார். முதலில் பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்த ஆஸ்திரேலிய வீரர்கள், பின்பு மறைக்க ஒன்றும் இல்லாததை உணர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

 

Ball tampering


அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்க, மன்னிப்பும் கேட்டுட்டாங்க, அப்புறம் என்ன பிரச்சனைனு யோசிக்கிறீங்களா? தெரிந்தே ஒரு தப்பை, அதுவும் திட்டம் போட்டு செயல்படுத்தும் போது, இதன் பின்னால் பல கேள்விகள், சரி செய்யப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. கேப்டன் என்பவர் சிறந்த வீரராக இருப்பது மட்டும் அல்லாமல் சிறந்த முன்னோடியாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும், அந்த நாட்டின் அடையாளமாக இருக்கவேண்டும். இதில் கேப்டன் ஸ்மித் மிகச்சிறந்த வீரராக மட்டுமே காணப்படுகிறார். செய்த தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவார் என்று பார்த்தால், இன்னமும் 'நான் தான் கேப்டன் பதவி வகிப்பதற்கு சிறந்த வீரர்' என்று பேட்டியில் கெத்தாக சொல்கிறார்.
 

கேப்டனுக்கு இந்தத் துணிச்சலை யார் கொடுத்திருப்பார்கள்? அந்த அணியின் நிர்வாகம் தான் கொடுத்திருக்கும். அதனால் அனைவரது பார்வையும் 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா'வின் மீது உள்ளது. 'மதிப்புமிக்க ஒரு நிர்வாகம் இப்படிப்பட்ட செயல்களை ஊக்குவிக்கிறதா?' என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' மீது ரசிகர்கள் கொண்ட மதிப்பு, நம்பிக்கை அனைத்தும் கேள்விக்குரியாகியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தான் ஆஸ்திரேலிய பிரதமர், கேப்டனை பதவி விலகச் சொன்னார். துணை கேப்டன் டேவிட் வார்னரும் பொறுப்பிலிருந்து  நீக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டிம் பைன் புதிய கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். வரவேற்க வேண்டிய விஷயம்.


ஐசிசி (ICC) இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கும், எதிர்காலத்தில் இதைத் தடுக்க  ஆஸ்திரேலியா என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 'ஆஸ்திரேலிய அணி  இப்படி செய்வது இதுதான் முதல் முறையா?', 'இன்னும் என்னவெல்லாம் யுக்திகள் வச்சுருக்காங்களோ?' என்று நமக்கும் சில கேள்விகள் தோன்றுகின்றன.

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.