ADVERTISEMENT

டிக்கெட் கலெக்டர் டூ கிரிக்கெட் சகாப்தம்... தோனியின்14வருடங்கள்

03:11 PM Dec 27, 2018 | tarivazhagan

மின்னல்வேக ஸ்டெம்பிங், ஹெலிகாப்டர் ஷாட்கள், அதிவேகத்தில் பறக்கும் சிக்ஸர்கள், அமைதியான அணுகுமுறை, 35+ வயதிலும் இளம்வீரர்களை மிஞ்சும் அதிவேக ஓட்டம், தெளிவான திட்டமிடல், வியக்கவைக்கும் கேப்டன்சி, துல்லியமாக டி.ஆர்.எஸ். கேட்கும் ஸ்கில் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவை தோனியின் தனித்தன்மைகளில் சில மட்டுமே.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சச்சின் அவுட்டானால் டிவியை நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றது ஒரு காலம். அதை மாற்றி 9 விக்கெட்களை இழந்து கடைசி ஓவரில் இருபது ரன்கள் தேவைப்பட்டாலும் அணியை வெற்றிபெற வைக்கமுடியும் என்ற நம்பிக்கையை வீரர்களிடமும், ரசிகர்களிடமும் விதைத்தவர் எம்.எஸ்.தோனி. இவர் கிரிக்கெட்டின் சகாப்தம். உலக கிரிக்கெட்டிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம்.

கேப்டன் கூல், தல, பெஸ்ட் பினிஷர் என்று ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி, தனது 14 வருட கிரிக்கெட் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, 15-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். தோனி என்றவுடன் நமது நினைவிற்கு வருவது 2011-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிபோட்டியில் சிக்ஸர் அடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை பெற்றுத்தந்தார் என்பது தான். இவர் ராஞ்சியில் பிறந்து, டிக்கெட் கலெக்டராக வாழ்க்கையை தொடங்கி, தற்போது இந்தியாவில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார்.

தோனி, 2004-ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் 1 பந்தை மட்டுமே சந்தித்து ரன் அவுட் ஆனார். அடுத்த தொடரில் பாகிஸ்தான் அணியுடன் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடர்தான் இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில், 115.33 சராசரி, 346 ரன்கள் எடுத்து அணியில் தனது இடத்தை பதிவு செய்து கொண்டார்.

2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு தோனி தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டது. அணியில் சேர்ந்த இரண்டரை வருடங்களில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகும் அளவிற்கு தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டியிருந்தார் தோனி. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் சச்சினின் பங்கு அதிகம். இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் முதல் டி20 உலககோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இதுதான் அவரின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை எனலாம். பிறகு கேப்டனாக அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்றளவிற்கு சாதனைகள் பல.

2013-ஆம் ஆண்டு இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிபோட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்திய அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 46.2 ஓவரில் 182 ரன்கள் எடுத்த நிலையில் 9 விக்கெட்கள் இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்படும் நிலை. கடைசி ஓவரில் 15 ரன்கள் வேண்டும். இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதிர்ச்சியில் ஆழ்ந்தது இலங்கை அணி. இதுபோல பல உதாரணங்கள் உண்டு.

சச்சின், டிராவிட், கோலி போல கிளாசிக் ஷாட்கள் தோனியிடம் இல்லை. ஆனால், அணியின் வெற்றிக்கு எது தேவையோ, அதை வெளிப்படுத்துவதில் வல்லவர். கங்குலி அவருடைய காலங்களில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகிர் என பல வீரர்களை உருவாக்கினார். அதேபோல தோனி பல வீரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த வரிசையில் ரோஹித், அஷ்வின், ரெய்னா, ஜடேஜா.... என்று பலர்.

தோனிதான் என் ஹீரோ - ரிஷப் பண்ட், தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்; அந்த நம்பிக்கையை காப்பாற்றினேன் - ராயுடு, தோனி இல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம் – ஹர்திக் பாண்டியா. இப்படி தோனியால் முன்னேறியவர்கள் ஏராளம். நான் விளையாடிய கேப்டன்களில் சிறந்தவர் தோனி என்று சச்சினே கூறியுள்ளார். மாஸ் விக்கெட் கீப்பிங், கிரேட் கேப்டன், பெஸ்ட் பினிஷர் என்று பல ஸ்கில்களை ஒருசேர பெற்றதால்தான் கபில்தேவ், இந்தியா உருவாக்கிய சிறந்த கிரிக்கெட்டர் தோனி என்று புகழ்ந்துள்ளார்.

“இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. பாகிஸ்தான் அணியின் அமீர் கடைசி ஓவரை வீசுகிறார். லெக் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை சிக்ஸருக்கு பறக்க விடுகிறார் தோனி. இந்திய அணி கோப்பையை பெறுகிறது” என்று 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்புகள் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்தார் கவாஸ்கர். தான் இறக்கும் தருவாயில், நான் காணவிரும்புவது தோனி 2011 உலகக்கோப்பையில் அடித்த கடைசி சிக்ஸர் என்று ஒருமுறை கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனாக சரியான முடிவுகளை எடுத்த அவர், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு எப்போது எடுக்க வேண்டும் என்பதிலும் சரியான முடிவு எடுப்பார். கவாஸ்கர் சொன்னதுபோல 2019 உலகக்கோப்பையில் தோனி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என நம்புவோம். “தோனி தோனி தோனி” என்ற முழக்கங்கள் என்றும் மைதானங்களில் இருந்துகொண்டே இருக்கும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT