ADVERTISEMENT

"ராசா"வை சமாளிக்குமா இந்திய அணி?

04:24 PM Aug 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு தலைமை தாங்க முதலில் ஷிகர் தவான் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது காயங்களிலிருந்து மீண்ட கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியுள்ளதால் கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவ்வணியில் முற்றிலும் புதுமுக வீரர்களே இடம் பெற்றுள்ளனர். 2016ம் ஆண்டு நடந்த ஜிம்பாவேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். தற்போது அதே அணிக்கு எதிராக கேப்டனாக களமிறங்க உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக ராகுலின் வெற்றி சதவீதம் 47.62%. மொத்தம் 42 போட்டிகளில் 20 போட்டிகளில் வெற்றியும் 20 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார்.

கே.எல்.ராகுல் கேப்டனாக செயல் படுவதால் அவரும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஜிம்பாவே பயணிக்கும் இந்திய அணியில் ஷிகர் தவான் மட்டுமே அனுபவ ஆட்டக்காரர். மேலும் ஆசியப் போட்டிக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிக்க இளம் வீரர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. அணியில் இடம்பிடித்த ராகுல் திரிபாதி தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதில் சபாஷ் அஹமத் இடம்பிடித்துள்ளார்.



பங்களாதேஷ் அணியுடன் மோதிய மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஜிம்பாவே. காட்டுத்தனமான பார்மில் ஜிம்பாவே அணியின் கேப்டன் சிகேந்தர் ராசா உள்ளார். இரு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதை ராசா வென்றுள்ளார். ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் சேர்த்து 379 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இவரை சமாளித்தால் இந்திய அணியின் பாதி வெற்றி உறுதி.

முதல் போட்டி நாளை ஜிம்பாவே ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை ஹராரே மைதானத்தில் 168 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில் 78 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 84 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளது. நாளை நடக்கும் போட்டி பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளிடமும் பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது. இருந்தும் ஜிம்பாவே அணி பங்களாதேஷ் அணியுடன் பெற்ற வெற்றியை கருத்தில் கொண்டு பல இந்திய சீனியர் வீரர்களும் ஜிம்பாவே அணியை சாதாரணமாக எடைபோட வேண்டாம் எனக் கூறுகின்றனர்.

உத்தேச இந்தியஅணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன் (துணைக் கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்தூல் தாகூர், தீபக் சஹார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

உத்தேச ஜிம்பாப்வே அணி: மில்டன் ஷும்பா, இன்னசென்ட் கையா, ரெஜிஸ் சகாப்வா, டகுட்ஸ்வனாஷே கைடானோ, சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவரே, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டொனால்ட் டிரிபானோ, விக்டர் நியுச்சி, ரிச்சர்ட் ங்காராவா.

இரு அணிகளும் நேருக்கு நேராக 63 முறை விளையாடி உள்ளது. இதை 51 முறை இந்திய அணியும் 10 முறை ஜிம்பாவே அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT