ADVERTISEMENT

வெளிநாடுகளில் சொதப்பல் பேட்டிங்... தொடர்கதையை மாற்றிய பேட்ஸ்மேன்கள்...

11:05 AM Dec 10, 2018 | tarivazhagan

“வீட்டுல புலி; வெளியில எலி” என்பதைப்போல் உலக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சிறந்த வாக்கியம் எதுவுமில்லை. ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சொந்த மைதானத்தில் உள்ளூர் அணிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு அதிக ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெஸ்ட் போட்டிகளில் அனைத்து கிரிக்கெட் அணிகளும் சொந்த மைதானத்தில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் வெளுத்துக் கட்டும். ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும்போது பெரும்பாலும் மண்ணைக்கவ்வும். இதற்கு உலகின் நம்பர் 1 முதற்கொண்டு எந்த அணியும் பெரிய விதிவிலக்கு இல்லை.

கடந்த 20 டெஸ்ட் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியும். இந்திய அணியை பொறுத்தவரை 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு SEAN(தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) நாடுகளில் பெரிய வெற்றியை பெற்றதில்லை. ஆசிய நாடுகள், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே ஆகிய நாடுகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2007-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒருமுறை 1–0 என்று வென்றுள்ளது. இதை தவிர SEAN நாடுகளில் இந்திய அணி 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்லவில்லை.

SEAN நாடுகளும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தோல்வியே மிஞ்சியது. 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டுமே. 2004-2005 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 2007-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்தபோது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் இருக்கும்வரை வெளிநாடுகளில் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி வந்தது. அந்த சமயங்களில் பவுலிங்கில் பெரிய அளவில் செயல்பட முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. ஆனால் அவர்கள் ஓய்வு பெற்றபிறகு சிலகாலம் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிவந்தது.

2018-ஆம் ஆண்டு வெளிநாடு டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, பவுலிங் சிறப்பாக அமைந்தது. பேட்டிங் சொதப்பியது. ஒருகாலத்தில் வெளிநாடு சுற்றுப்பயணங்களின் போது எதிரணியின் 10 விக்கெட்கள் எடுக்கவே தடுமாறி கொண்டிருந்தது. ஆனால், இந்த வருடம் அந்த நிலை மாறியது. தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களின்போது பவுலர்கள் கடமையை சிறப்பாக செய்தபோதும், பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.

தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். புஜாரா மற்றும் ரஹானே சில போட்டிகளில் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இவர்களைத்தவிர எந்த இந்திய பேட்ஸ்மேனும் ஓரளவுகூட ரன்களை சேர்க்கவில்லை. தவான், விஜய், ராகுல், ரோஹித் ஷர்மா என மற்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக ஆடியிருந்தனர்.

அதே தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புவனேஷ் குமார், தென் ஆப்ரிக்கா தொடரில் அசத்தினார். ஹர்திக் பாண்டியாவும் ஓரளவு பந்துவீச்சில் பங்களித்தார். இஷாந்த் ஷர்மா, முஹமது சமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மூவரும் எதிரணிகளை பந்துவீச்சில் மிரட்டினர். இதே இணைதான் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கியுள்ளது.

கடைசியாக வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒருசில போட்டிகளில் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், மற்றபடி மோசமாகவே இருந்துள்ளது. நடந்து முடிந்த தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

இப்படி இருந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் ஜொலித்தது. புஜாரா இரு இன்னிங்ஸ்களிலும் அசத்தினார். கோலி, ரஹானே, ராகுல் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்த அணியின் பேட்டிங் தொடர்கதையை இந்த தொடரின் முதல் போட்டி மாற்றியுள்ளது. இது தொடர வேண்டுமென இந்திய ரசிகர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT