Skip to main content

உள்ளே வெளியே ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் மோதல்; வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

India vs Bangladesh clash in inside-out game

 

8 ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பிரிவு இரண்டில் இடம்பெற்ற இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி அதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வியைத் தழுவியது. 

 

இந்நிலையில், இன்று வங்கதேச அணியுடன் விளையாட இருக்கிறது. வங்கதேச அணியும் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியுற்றுள்ளது. 

 

வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹஸன் இந்திய அணியுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்தார். அதில், “இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்காக வந்துள்ளது. ஆனால் நாங்கள் கோப்பையை வெல்வதற்காக வரவில்லை. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால் அது வருத்தமாக இருக்கும். அவர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை  வருத்தமடையச் செய்ய முயற்சி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

 

வங்கதேசம் உடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

 

இந்த போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் முழுவீச்சுடன் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்திய அணியில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் கே.எல்.ராகுலுக்கு பதில் மாற்று வீரர் களமிறக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து கொண்டு வருகிறது. நேற்றைய பயிற்சியின் போது கூட ராகுலுக்கு விராட் கோலி பேட்டிங் பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. 

 

நியூசிலாந்து சுற்றுப்பயணம்; இந்திய அணி அறிவிப்பு; முன்னணி வீரர்களுக்கு ஓய்வு
 

 

இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட், “ராகுல் சிறந்த வீரர். இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். இந்த ஆடுகளத்திற்கு இது போன்ற வீரர்கள் தான் தேவை. அவர் பந்தை எதிர் கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்” என்று கூறியுள்ளார். எனவே இன்றைய போட்டியிலும் ராகுல் விளையாடுவார் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

 

இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மற்ற வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. போட்டிக்கு முன் அவரது உடற்தகுதியைப் பொறுத்து அவர் ஆடுவது தீர்மானிக்கப்படும். 

 

“எனது ஹோட்டல் அறையில் கூட ப்ரைவசி இல்லை” - விராட் கோலி வேதனை

 

இந்திய அணி அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு அமையும். இதே நிலையில் தான் வங்கதேச அணியும் இருக்கிறது. பந்துவீச்சில் வங்கதேச அணியின் தஸ்கின் அகமது மற்றும் முஸ்தபிஸுஇர் ரஹ்மான் அசத்தக் காத்திருக்கின்றனர். இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. 

 

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்

இந்தியா: ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், அஸ்வின், முகம்மது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங். 

 

வங்கதேசம்: சவும்யா சர்கார், நஜ்முல் ஹூசைன், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், நுருல் ஹசன், மொசாடெக் ஹூசைன், யாசிர் அலி, தஸ்கின் அகமது, முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஹசன் மமூத்.

 


 

Next Story

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி; இந்தியக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

 World Cup Pakistan Defeat; Conflict among Indian college students

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள லாலா லஜபதிராய் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்துடன் தோற்ற நிலையில் இந்தத் தோல்வியை சில மாணவர்கள் கொண்டாடியதால் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பீகார் மற்றும் பிற மாநில மாணவர்கள் மதரீதியாகக் கோஷம் எழுப்பியதால் சண்டை வந்ததாக காஷ்மீர் மாணவர்கள் கூறினர். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர், இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன் அவர்களது அறைக்குச் சென்று எச்சரித்தார். வார்டனை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் அவரை மீட்கச் சென்றோம். அவர்கள் எங்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடிகளை வீசினர் என பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூறினர். 

 

இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

 

Next Story

பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்; டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

England win T20 World Cup; Amazing to beat Pakistan

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றன. 

 

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

இந்நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் மசூத் மட்டும் பொறுமையாக ஆடி ரன்களை எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது.

 

138 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இந்தியா உடனான போட்டியில் அதிரடி காட்டிய அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின் வந்த பிலிப் 10 ரன்களில் வெளியேறினார். ஜாஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். 19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.