ADVERTISEMENT

அணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்?

10:18 AM Feb 12, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நியூசிலாந்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் தன்னுடைய ஓவர்-கான்பிடன்ஸ் காரணமாக சிங்கிள் எடுக்க மறுத்தார். போட்டியின் முடிவில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை இழந்தது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் அந்த செயல்பாடு ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

3-வது டி20 போட்டி நடைபெற்ற ஹாமில்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்று. இருப்பினும் 213 ரன்களை எந்த ஒரு மைதானத்திலும் 20 ஓவர்களில் சேசிங் செய்யும்போது ஒரு சிறிய தவறும் அணியின் வெற்றியை பாதிக்கும். தவான் 4 பந்துகளில் 5 ரன்கள், தோனி 4 பந்துகளில் 2 ரன்கள் என சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். விஜய் சங்கர், ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் இன்னிங்ஸின் முதல் பாதியில் அதிரடியில் அசத்தினர்.

மிடிலில் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். 14 ஓவர்கள் ஒரு முனையில் பொறுமையாக ஆடிய ரோஹித் ஷர்மா அதிரடியை தொடங்கும்போது அவுட் ஆனார். இறுதியில் கார்த்திக் மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் 28 பந்துகளில் 68 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சேசிங் செய்தனர். இறுதிவரை முயன்றும் நூலிழையில் மிஸ் செய்தனர்.


முதல் 56 பந்துகளில் 100 ரன்களை எடுத்த இந்திய அணி, அடுத்த 38 பந்துகளில் 50 ரன்களை மட்டுமே எடுத்தது. மேலும் ஆட்டத்தின் இந்த கட்டத்தின்போது பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷர்மா, தோனி உள்ளிட்டோரின் விக்கெட்களை இழந்தது. இந்த மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும், முக்கிய விக்கெட்களையும் சரியான விகிதத்தில் கன்ட்ரோல் செய்ய தவறியது. இதுதான் ஆட்டத்தில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு.


ஒருவேளை தினேஷ் கார்த்திக் சிங்கிள் ரன் எடுத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அனுபவம் வாய்ந்த பவுலர் சவுதி மிகவும் நேர்த்தியாக பல வேரியேஷனில் அசத்தலாக வீசினார். 18-வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகள் பறந்தாலும் அடுத்த மூன்று பந்துகளையும், கடைசி ஓவரையும் தன் பவுலிங் ஸ்கில் மூலம் அற்புதமாக வீசினார். இந்த நிலையில் எப்படிப்பட்ட பேஸ்ட்மேனுக்கும் அது கடினமான தருணம்தான். உலகின் பெஸ்ட் பினிஷர் என்று பெயர் எடுத்த தோனி பினிஷிங் செய்ய முடியாமல் போன இன்னிங்ஸ்கள் உண்டு. ஆனால் தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க தவறியதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்பதுபோல பேசப்பட்டு வருகிறது.

செய்தத் தவறை உணர்ந்த கார்த்திக் உடனடியாக மைதானத்திலேயே குருனால் பண்டியாவிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார். டி20 போட்டிகளில் சேசிங்கின்போது தினேஷ் கார்த்திக் நாட் அவுட்டாக இருந்து தோற்ற முதல் போட்டி இதுதான் என்பது கவனிக்கத்தக்கது. வங்கதேசம் அணிக்கு எதிராக 2018-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 12 பந்துகளுக்கு 34 ரன்கள் என்ற கடின இலக்கை சேசிங் செய்து மாஸ் காட்டினார். இதுபோல பல போட்டிகளில் இறுதி கட்டங்களிலும், மிடிலிலும் சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். அவர் சிறு தவறு செய்யும் போதெல்லாம் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் சிறப்பாக ஆடும்போது பெரிய அளவில் பாராட்டப்படுவதில்லை.

தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல பார்மில் உள்ளார். 16 டி20 இன்னிங்ஸில் 29௦ ரன்கள், பேட்டிங் சராசரி 50+, ஸ்ட்ரைக் ரேட் 155+. 11 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். 17 இன்னிங்ஸ்களில் 425 ரன்கள் குவித்துள்ளார். 8 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன்.

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது அணியில் இருந்தவர் கார்த்திக். அந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையின்போது ஸ்மித்தின் கேட்ச்சை அட்டகாசமாக பிடித்தார். பீல்டிங்கில் அசத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வென்றது.

எம்.எஸ்.தோனிக்கு முன்பிருந்தே இந்திய அணியில் இருப்பவர் தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகளில் 2004-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அணியில் விளையாடி வருகிறார். இன்று விளையாடிவரும் இந்திய அணியில் சீனியர் வீரர் இவர்தான். இவருடைய திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT