ADVERTISEMENT

அமைதியான ஆஸ்திரேலியா... அடுத்த வெற்றியை நோக்கி இந்தியா...

11:24 AM Jan 11, 2019 | tarivazhagan

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் வீரர்கள் என சிலர் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு ஆகியவற்றில் கதிகலங்கியது ஆஸ்திரேலியா. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் வீரர்கள் என அனைவரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமல்லாது, உலகக்கோப்பை தொடரையும் கருத்தில் கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது. தவான், கோலி, ரோஹித், எம்.எஸ்.தோனி, புவனேஷ், ஜடேஜா, ராயுடு, ஷமி ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உண்டு. மற்ற அனைவரும் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க இணை ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை ரோஹித் ஷர்மா எடுத்த ரன்கள் 1,143, பேட்டிங் சராசரி 51.95. ஷிகர் தவான் 644 ரன்கள், 42.93 பேட்டிங் சராசரி. இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதும் உதவியுள்ளனர். இருவரும் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணியை கதிகலங்க வைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மூன்றாவது வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்கு பெரிய பக்கபலமாக இருப்பார். இவர் சிட்னி மைதானத்தில் மட்டும் குறைவான சராசரி வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அதை மாற்றி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 1001 ரன்கள், 50.05 சராசரி. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அந்த தொடரில் இந்திய அணி எடுத்த ரன்களில் 72% சதவீத ரன்களை எடுத்தது டாப் 3 பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக களமிறங்கும் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லை. உலகக்கோப்பை போட்டிகளில் இடம்பெற இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆசியக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள ராயுடு இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், கேதர் ஜாதவ் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருப்பதால் இந்திய அணியின் 6-வது பந்துவீச்சாளராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் தனது இடத்தை உறுதிசெய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த எம்.எஸ்.தோனி ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இவரது அனுபவம் இந்திய அணியின் இளம் வீரர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரது பினிஷிங் திறமை மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங் போன்றவை ஆட்டத்தை மாற்றி இந்திய அணியை வெற்றிபெற வைக்கும். கடந்த சில தொடர்களில் எதிர்பார்த்த அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இவரது அனுபவம் மூலம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் திறமை கொண்டவர்.

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் அணியின் முக்கிய வீரர்கள். டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா ஒருநாள் தொடரிலும் தனது பங்களிப்பை ஆற்றுவார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பது ஹர்திக் பாண்டியா மட்டுமே. உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆல் ரவுண்டராக வேகப்பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். இவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவமில்லை என்றாலும் இந்த டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இணை சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு முக்கிய பங்குவகிப்பர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், முஹம்மது சமி ஆகியோரின் அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முஹம்மது சமி ஒருநாள் தொடரிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் புவனேஸ்வர் குமார், முஹம்மது சமி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலியா அணியை திணறவைக்கும்.

இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அனுபவமற்ற வீரர்கள் விளையாடுவது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT