ADVERTISEMENT

ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானதா..? எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் - கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #1

06:31 PM Oct 31, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மும்பையில் ஒரு குடியிருப்பு வளாகம். இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கிரிக்கெட். நேராக அடித்தால்தான் நான்கு ரன்கள் கிடைக்கும் என்பதால், ஒரு சிறுவன் பந்தை தரையோடு தரையாக பவுலரை தாண்டியே ட்ரைவ் ஆடிக்கொண்டிருக்கிறான். களம் மாறுகிறது. 'ரஞ்சி ட்ரோபி'யில் அதே போல் ஒரு ட்ரைவ், அந்த ஸ்ட்ரெயிட் டிரைவ்தான், அன்றைய போட்டியைப் பார்த்தவர்கள் அன்று முழுவதும் பேசிய 'ஹாட் டாபிக்'. பேசவைத்தவர் சச்சின் டெண்டுல்கர்.

நான் என்னுடைய மாநில 'ரஞ்சி' அணியில் இடம்பெற போராடிக் கொண்டிருக்கும்போது சச்சின் உலகின் அதிவேக ஆடுகளத்தில் சதம் அடித்துக் கொண்டிருந்தார் என்றார் டிராவிட். மற்றவீரர்கள் மாநில அணிக்கு ஆட காத்திருந்தபோது, இந்தச் சிறுவன் எப்போது ஆட்டமிழப்பான், நாம் போட்டியை வெல்லலாம் என எதிரணியைக் காக்கவைத்தவர் சச்சின். பெர்த்தில் அவரின் முதல் சதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியூஸ், இந்தச் சிறுவன் உன்னைவிட அதிக ரன்களை குவிக்கப் போகிறான் என்று தனது கேப்டன் ஆலன் பார்டரிடம் கூறினார். அப்போது பார்டர் தான் டெஸ்ட்களில் அதிக ரன்கள் குவித்திருந்தவர். அப்போதே வயதுக்கு மிஞ்சிய திறமையோடு ஆடினார் சச்சின்.

முதல் டெஸ்ட் தொடரிலேயே மூக்கில் அடிவாங்கியதாலோ என்னவோ எப்போதும் வேகப்பந்து வீச்சுக்குப் பணிந்ததில்லை சச்சின். இந்திய பேட்ஸ்மேன்களில் வேகப்பந்து வீச்சை இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியவர்கள் யாருமில்லை எனப் புகழ்ந்தார் டிராவிட். அந்தளவிற்கு வேகப்பந்து வீச்சைப் பந்தாடியவர் சச்சின். 'பிரெட் லீ', 'மெக்ராத்', 'அக்தர்' என அவர் காலத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனம் அவர்தான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சையும் சச்சின் என்றும் விட்டதில்லை. உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் 'முரளிதரனா', 'வார்னேவா' என்பது வேண்டுமானால் பெரிய விவாதமாக இருக்கலாம். ஆனால், தங்களை எதிர்த்து ஆடியதில் சிறந்த வீரர் யார் என்பதில் இருவருக்கும் எந்த விவாதமும் இல்லை. இருவருமே தங்கள் காலத்தின் சிறந்தவர் சச்சின் என பலமுறை கூறியுள்ளார்கள். சச்சினின் இருபத்தைந்தாவது பிறந்தநாளில், அவரது பேட் வார்னேவின் சுழலைச் சுழற்றி அடிக்க, நான் தூங்கும்போது கூட எனது கனவில் சச்சின் 'சிக்ஸர்' அடிப்பதுதான் நினைவுக்கு வரும் எனக் குறிப்பிட்டார் வார்னே.

கிரிக்கெட் வீரர்களுக்கு முப்பது வயது தாண்டினாலே எப்போது ஓய்வு எனக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். 35 வயது தொட்டால் என்றைக்கு ஓய்வை அறிவிக்கப் போகிறீர்கள் என வீரர்கள் சொல்லும் முன்பே, மற்றவர்கள் 'வழியனுப்பு விழா'வைத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், சச்சின் 35 வயதுக்கு மேல் செய்த சாதனைகள் பல. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட்களில் அதிக ரன்கள் என்ற லாராவின் சாதனையைத் தகர்த்தது என வயது ஒரு நம்பர்தான் என்பதை நடைமுறையில் செய்து காட்டியவர் சச்சின். ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானது என்ற எண்ணம் இருந்த காலத்தில், இது இளம் வீரர்களுக்கானது என்றால் நானும் 35 வயதைக் கடந்த இளைஞர்தான் என 37 வயதில் ஆரஞ்ச் கேப், 38 வயதில் சதம் என அதிலும் ஆடிக்காட்டியவர் சச்சின். சச்சின் தனது நாற்பது வயதில் ஓய்வை அறிவித்தார். இறுதியாக ஒரு சர்வதேச தொடரில் மட்டும் விளையாடி விடை பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு ரஞ்சியில் மும்பைக்கு ஆடி அந்த அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார் சச்சின். அந்த வயதிலும் எத்தனையோ சாதனைகள் புரிந்த பின்பும், உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தயங்கியதில்லை. கிரிக்கெட் மீதான காதல் அவரிடம் குறைந்ததில்லை.

சச்சின் ஓய்வை அறிவித்த சிலகாலத்திலேயே மக்கள் அவரை மறந்து விடுவார்கள் எனக் கூறினார் பாகிஸ்தான் வீரர் ஜாவீத் மியாந்தத். ஆனால், அவரின் ஓய்வுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடந்த ஒரு தொடரில், சச்சின் விளையாடிய, ஒரே ஒரு ஓவர், அடுத்த சில நாட்களுக்கு ட்ரெண்டிங்கில் இருந்து மறையவில்லை. ஒரு ஓவர் ஆடியதே சமூக வலைதள ட்ரெண்டிங்கில் இருந்து மறையாதபோது கால் நூற்றாண்டாக இந்தியாவுக்கு ஆடியவர் மக்கள் மனதில் இருந்து மறைவாரா? நிச்சயம் இல்லை. என்றும் அவர் சாதனைப் பட்டியலிலும் மக்கள் மனதிலும் கிரிக்கெட்டின் மறுபெயராக நிலைத்திருப்பார்...

சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT