ADVERTISEMENT

"இரண்டு வீரருக்கு நிகரானவர்..." இந்திய வீரருக்கு புகழாரம் சூட்டிய மெக்ராத்!

12:05 PM Nov 18, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டனான விராட் கோலி குறித்தும், அவர் இல்லாத டெஸ்ட் போட்டிகள் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான கிளைன் மெக்ராத் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டியையடுத்து 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் நடைபெறவுள்ளது. இறுதியாக இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

ஒருநாள், இருபது ஓவர் போட்டித் தொடரில் முழுமையாக விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு இந்தியா திரும்பவுள்ளார். தன்னுடைய மனைவியின் பிரசவகாலத்தின்போது உடன் இருக்கவேண்டும் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டதற்கிணங்க, பி.சி.சி.ஐ அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான கிளைன் மெக்ராத் இது குறித்து பேசுகையில், "விராட் கோலி இல்லாதது தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் மாதிரியான தரமான வீரர் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றில் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு. விராட் கோலி எடுத்த முடிவை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இரண்டு வீரருக்கு நிகரானவர். ஒன்று பேட்ஸ்மேன், மற்றொன்று கேப்டன். உத்வேகம் மற்றும் ஆக்ரோஷத்துடன் அவர் களத்தில் ஃபீல்டிங் செய்யும்விதம் அற்புதமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்குத் திரும்பியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி சுவாரசியமாக இருக்கப்போகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பகலிரவு போட்டியில் விளையாடியதில்லை. அநேகமாக வேகப்பந்து வீச்சாளருக்கு மைதானம் ஒத்துழைக்கும். முதல் போட்டியில் விராட் கோலி தாக்கத்தை ஏற்படுத்தி அணிக்கு உத்வேகத்தை அளிக்க வேண்டும். கடந்த சுற்றுப்பயணத்தில் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்தது" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT