ADVERTISEMENT

தன்னிகரில்லாத சகாப்தம்... இதுக்கு மேல என்ன செய்ய வேண்டும்?

04:12 PM Jul 06, 2019 | kirubahar@nakk…

கிளாசிக் ஷாட்களை அடிக்க தெரியாதவர் - ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுபவர் - அதிக பேட்டிங் சராசரிக்காக நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நிற்க முற்படும் சுயநலவாதி - வெளிநாடுகளில் சதம் அடிக்க முடியாத பேட்ஸ்மேன் - கீப்பிங்கில் டைவ் அடிக்காதவர் - டிராவிட், கங்குலியை அணியிலிருந்து நீக்க காரணமானவர் - யுவராஜ், சேவாக், கம்பீர், ஜாஹீர், ஹர்பஜன் போன்ற சீனியர் வீரர்களை ஓரம் கட்டியவர் - டெஸ்ட் போட்டிகளில் டிபன்ஸ் பீல்ட் செட் செய்பவர், ...இப்படி பல விமர்சனங்களை தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்தவர் தோனி. கிரிக்கெட் உலகில் எந்தவொரு வீரரும் இவ்வளவு விமர்சனங்களை சந்தித்திருக்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆம். சச்சின், கோலி போல கிளாசிக் ஷாட்கள் தோனியிடம் இல்லை. ஆனால், அணியின் வெற்றிக்கும் நன்மைக்கும் எது தேவையோ, அதை தன் ஸ்டைலில் வெளிப்படுத்துவதில் வல்லவர்.

ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுபவர் என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. ஆம். கடந்த சில ஆண்டுகளாகவே அவரின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறைந்துவிட்டது. ஆனால் தோனியின் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டில் புள்ளிவிவரங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சூழ்நிலைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கடைசி பல ஆண்டுகளாக தோனியை தவிர யாரும் மிடில் ஆர்டரில் தொடர்ந்து விளையாடவில்லை. 8,9,10,11 ஆகிய இடங்களில் விளையாடுபவர்களில் புவனேஷ் குமார் தவிர வேறு எந்த பவுலரும் பேட்டிங்கில் பங்களிப்பதில்லை. 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களில் தோனிக்கு பார்ட்னர்சிப் கொடுக்க நல்ல இணை இதுவரை இல்லை.

சச்சின் 1990-களில் ஆடிய அதிரடி ஆட்டம் அவரின் பிற்காலத்தில் இல்லை. ஏனெனில், சேவாக் வருகைக்கு முன்பு, பின்பு என ஒவ்வொரு காலகட்டத்திலும் சச்சினின் பேட்டிங்கில் மாற்றம் இருந்தது. 2008-க்கு பிறகு நாம் சச்சினிடம் எதிர்பார்த்தது நிதானம், அவ்வப்போது அதிரடி. இதை அனைத்தையும் தாண்டி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை வழிநடத்தி ஒருங்கிணைக்கும் பொறுப்பு சச்சினிடம் இருந்தது. அதை சச்சின் சிறப்பாக செய்தார். அவரின் ஆரம்பகால அதிரடியை நாம் எதிர்பார்க்கவில்லை.

நிலைத்தன்மை இல்லாத மிடில் ஆர்டர், நிலையில்லாத பேட்ஸ்மேன்கள் தேர்வு, அனுபவம் குறைந்த பேட்ஸ்மேன்கள், பலவீனமான பேட்டிங் கொண்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பெரிய அளவில் கிடைக்காத நல்ல பார்ட்னர்சிப் என தோனியை சுற்றிலும் அளவுக்கு அதிகமான சுமை உள்ளது. இதில் எதையும் தோனியின் விமர்சகர்கள் கணக்கில் எடுக்காமல், வெறும் புள்ளிவிவரங்களை மட்டுமே பேசுகின்றனர்.

அதேபோல இன்றைய தேவை தோனியின் ஷாட்கள் இல்லை. மிடில் ஆர்டர் பேட்டிங்கை ஒருங்கிணைக்கும் பொறுப்பு. பினிஷிங் ஸ்கில். நல்ல விக்கெட் கீப்பிங். விராத் கோலியையும், இளம் அணியையும் வழிநடத்தும் பொறுப்பு. இதை தோனி சிறப்பாக செய்து வருகிறார். ஒருமுனையில் அவர் தனது ஆட்டத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார். இன்றைய காலங்களில் அவருக்கு தேவை, நல்ல பார்ட்னர்சிப்பும், நிலையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தான்.

நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று சராசரியை அதிகரிக்க முற்படுகிறார் என்ற விமர்சனமும் உண்டு. நாட் அவுட்டை கணக்கில் கொள்ளாமல், அவருடைய ரன்களையம், சராசரியையும் கணக்கிட்டால்கூட பல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட அதிக சராசரி உடையவராக உள்ளார். 4,5,6 பொசிசன்களில் களமிறங்கியும் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 10,000 ரன்கள் அடித்தவர்களின் டாப் லிஸ்டில் இடம்பெற்றவர் தோனி என்பதை விமர்சகர்கள் சுலபமாக மறந்து விடுகிறார்கள்.

கீப்பிங்கில் கில்கிறிஸ்ட் போல மாஸ் டைவ் அடிக்காதவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆம். கில்கிறிஸ்ட் போல இவர் கீப்பிங் கிடையாது. ஏனென்றால், தனக்கென ஒரு தனித்துவமான விக்கெட் கீப்பிங் ஸ்கில் உடையவர். இவரை விட மின்னல்வேகத்தில் ஸ்டம்பிங் இதுவரை யாரும் செய்ததில்லை. இனி செய்வதற்கும் வாய்ப்புகள் இல்லை. வரலாற்றில் கில்கிறிஸ்ட்டை விட சிறந்த புள்ளிவிவரங்களையும், சாதனைகளையும் கொண்டவராகவே தோனி உள்ளார் என்பதை கவனிக்க மறுக்கின்றனர்.

2010-களில் யுவராஜ் பேட்டிங்கில் நல்ல பார்மில் இல்லாதபோதும், யுவராஜ் சிங்கிற்கு ஆதரவளித்தவர் தோனி. சேவாக்,கம்பீர், ஹர்பஜன் ஆகியோரின் இடத்தில் ரோஹித், தவான், அஸ்வின் என உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளித்தார் என்பதையும் விமர்சகர்கள் நினைக்க தவறுகின்றனர்.

இந்திய நாட்டின் இன்றைய மக்கள்தொகை 137 கோடி. சர்வதேச கிரிக்கெட் விளையாடும் மற்ற அனைத்து நாடுகளின் மக்கள்தொகையை சேர்த்தால் கூட இந்திய மக்கள் தொகையில் 50% கூட இல்லை (60 கோடி). இந்தியாவிற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு பாகிஸ்தான். இந்திய தேசத்தில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டோ, பொழுதுபோக்கோ மட்டுமல்ல. சாதி, மதம், மொழி என பல வேறுபாடுகளை கடந்து இந்தியர்களை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வு. எந்தவொரு அரசியல் தலைவர், எந்தவொரு பிரபலம், எந்தவொரு சமூகத்தலைவர், எந்தவொரு நடிகர் என யாருக்கும் கிடைக்காத புகழும், பெருமையும் கிரிக்கெட் வீரர்களுக்கு வந்துசேரும். அதேபோல எந்த பிரபலத்திடமும் இல்லாத அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு கிரிக்கெட் வீரர்களிடம் இருக்கும்.

ஒவ்வொரு முறையம் கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கும்போதும் பலகோடி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்குகின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்புகளையும் 15 ஆண்டுகளாக உலகின் சிறந்த விக்கெட் கீப்பர், பெஸ்ட் பினிஷர், நம்பர் 1 பேட்ஸ்மேன், கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் என பல பரிணாமங்களில் பூர்த்தி செய்து, யாரும் நினைக்கவே முடியாத உயரத்திற்கு சென்றார் மக்களின் கேப்டன். இந்த 15 வருடங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட விளையாட்டு பிரபலமும் இவர் தான்.

யாரும் சந்திக்காத அளவிற்கு இவர் விமர்சனங்களை சந்திக்க காரணம் உண்டு. இவர் ஒரு போதும் ரசிகர்களின் விமர்சனங்களையோ அல்லது கைத்தட்டல்களையோ அல்லது ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையோ கருத்தில் கொண்டு களமிறங்கவில்லை. அணியின் வெற்றிக்கு அல்லது அணியின் அணியின் நன்மைக்கு எது தேவையோ அதை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டார். பல துணிச்சலான மற்றும் விசித்திரமான முடிவுகளை எடுத்தார்.

ஏன் தோனியை சிலர் இந்தியாவில் வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை என பல வெளிநாட்டு வீரர்களே கேட்கும் அளவிற்கு இந்தியாவில் சில ரசிகர்கள் தீவிர தோனியின் வெறுப்பாளர்கள். ஒரு பினிஷராக உலகில் யாரும் நினைத்திராத ஆட்டங்கள், பல கோடி மக்களின் கனவை 2 உலகக்கோப்பைகளை பெற்றுத்தந்து நனவாக்கியவர், மின்னல் வேக ஸ்டம்பிங்,... என கணக்கிலடங்காத பல அதிசயங்களை நிகழ்த்தி கிரிக்கெட்டில் யாரும் எட்ட முடியாத இடத்திற்கு தோனி முன்னேறியதே இதற்கு காரணம்.

தோனி கிரிக்கெட்டில் 10-ல் 9 முறை சாதித்துள்ளார். ஒருமுறை தோற்றுள்ளார். விமர்சகர்கள் அந்த ஒருமுறையை மட்டுமே பேசுகின்றனர். "நான் பல போட்டிகளில் வெற்றிகரமாக பினிஷ் செய்திருந்தாலும், பினிஷ் செய்யாத ஒரு சில போட்டிகளை பற்றியே பேசுவார்கள்" என தோனியே ஒருமுறை தெரிவித்திருந்தார்.

தோனியின் ஓய்வு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனாக சரியான முடிவுகளை எடுத்த அவர், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு எப்போது எடுக்க வேண்டும் என்பதிலும் சரியான முடிவு எடுப்பார்.

இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த கிரிக்கெட்டர் தோனி தான் என சொன்ன கபில்தேவ்வின் வார்த்தைகளே தோனியின் கிரிக்கெட் சாதனைகளுக்கு சான்று.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT