ADVERTISEMENT

1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்!

03:24 PM Jan 04, 2019 | santhoshkumar

ADVERTISEMENT


இருபதாம் நூற்றாண்டு அதிரடிகளுக்கு பெயர்போன காலம். டி20 போட்டிகளும், 10 ஓவர் போட்டிகளும் ஒரு பக்கம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு ஒருபோதும் எந்த கிரிக்கெட்டுக்கும் இருக்காது என்பதை பல டெஸ்ட் போட்டிகள் காட்டியுள்ளன. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மீண்டும் அதை நிருபித்துள்ளது.

ADVERTISEMENT

டிராவிட், லக்ஸ்மன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளனர். உலகின் மிகச்சிறந்த பவுலர்களை தன்னுடைய டெஸ்ட் பேட்டிங் மூலம் கதிகலங்க வைத்துள்ளனர். அதே சமயம் ஸ்டெய்ன், மோர்கல், நிடினிஆகியோரிடம் 2008-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டிராவிட், லக்ஸ்மன் போன்ற உலக புகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் கொண்ட இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸில் 100 ரன்களுக்கு குறைவான ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆன வரலாறும் உண்டு. அந்த போட்டியில் 76 ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணி.

2000-களில் கிரிக்கெட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலியா. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வரலாறு படைத்த பாண்டிங்கை உள்ளடக்கிய அந்த அணியும் 47 ரன்களில் 2011-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக ஆட்டமிழந்தது. இப்படி பவுலர்கள் பேட்ஸ்மேன்களை திணறடிப்பதும், பேட்ஸ்மேன்கள் பவுலர்களை சோதிப்பதும் டெஸ்ட் போட்டிகளுக்கே உரித்தான ஒன்று.

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட், தொடர் தொடங்கும் முன்பிருந்தே அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்த தொடரில் கோலியை விட கவாஜா அதிக ரன்கள் குவிப்பார் என பாண்டிங் தெரிவித்திருந்தார். பலரும் கோலி இந்த தொடரில் பல சாதனைகள் புரிவார் என்று பேசி வந்தனர். தொடர் தொடங்குவதற்கு முன்னர் சமூக ஊடகம் முதல் ரசிகர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் அதிகம் விவாதித்த வீரர் கோலி.

தொடர் தொடங்கிய பின்னர் நிலைமை மாறியது. தேர்வு வினாத்தாளில் அவுட் ஆப் சிலபஸில் இருந்து கேள்வி கேட்பது போல, கோலியை அவுட் ஆக்க பல வியூகங்களை வகுத்த வைத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு புஜாராவின் ஆட்டம் அதிர்ச்சியை அளித்தது. முதல் டெஸ்ட் தொடங்கி நான்காவது டெஸ்ட் வரை ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு சோதனைதான். அதற்கு முக்கிய காரணம் புஜாராவின் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் பேட்டிங். இதுவரை இந்த தொடரில் புஜாரா சந்தித்த பந்துகள் 1258. களத்தில் நின்ற நிமிடங்கள் 1321+. அவர் மட்டும் தனியே எடுத்த ரன்கள் 521. பார்ட்னர்ஷிப்பில் முதல் போட்டியில் 418, இரண்டாவது டெஸ்டில் 89, முன்றாவது போட்டியில் 259, நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 408, மொத்தம்1174 பார்ட்னர்ஷிப் ரன்கள். இதுதான் இந்த தொடரில் இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்பதே உண்மை. இந்த தொடரின் வெற்றி, தோல்வியை தீர்மானித்ததும் புஜாராவின் பார்ட்னர்ஷிப் ரன்கள் என்பதுதான் எதார்த்தம்.

இந்த தொடரில் ஒருமுறை மட்டுமே 50+ பார்ட்னர்ஷிப் ரன்களை துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு கொடுத்தனர். கிட்டத்தட்ட ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் போலவே களத்திற்கு வந்தார் புஜாரா. வேகப்பந்து, ஸ்பின் என அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். புஜாரா இந்த தொடரில் இதுவரை சந்தித்த பந்துகள் 1258. இது இந்திய அணிக்கு சாதனையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு தொடரில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா. டிராவிட், கவாஸ்கர், ஹசாரே ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர். ஆஸ்திரேலியா சார்பில் எதிர்பார்க்கப்பட்ட கவாஜா இதுவரை 6 இன்னிங்க்ஸில் 167 ரன்கள் எடுத்துள்ளார். 509 பந்துகளை சந்தித்துள்ளார். 679 நிமிடங்கள் களத்தில் பேட்டிங் செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஹெட் இதுவரை 217 ரன்கள் எடுத்துள்ளார். இந்த புள்ளி விவரங்கள் பேட்டிங்கில் இரு அணிகளுக்குமான வேறுபாட்டை தெளிவாக உணர்த்துகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT