ADVERTISEMENT

ஐபிஎல் கான்ட்ராக்ட் விதிகளில் மாற்றம்! கூடுதல் சம்பளம் பெறும் வீரர்கள் யார்?

09:40 AM Dec 22, 2023 | kalaimohan


ஐபிஎல்லில் ஒரு மெகா ஏலத்தில் எடுக்கப்படும் வீரருக்கு மூன்று ஆண்டுகள் கான்ட்ராக்ட் போடப்படும். முதலில் அவர் என்ன தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ அதே தொகையே மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தாலும் அவருடைய சம்பளமானது உயராமல், முதல் வருடம் என்ன கொடுக்கப்பட்டதோ, அதே தொகையே கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது பிசிசிஐ அந்த விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி ஏலத்தில் 50 லட்சத்துக்கும் கீழ் எடுக்கப்பட்ட இந்திய அணியில் ஆடாத இளம் வீரர்களுக்கு, தற்போது ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், இந்திய அணியில் ஆடாத 50 லட்சத்திற்கும் குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீரர், அடுத்த ஐபிஎல்லுக்கான இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஒரு ஒரு ஆட்டத்தில் ஆடினால், அவருடைய சம்பளத்தொகையானது 50 லட்சமாக உயர்த்தப்படும். அதேபோல 5 முதல் 9 ஆட்டங்களில் ஆடி இருந்தால், அவருடைய சம்பளமானது 75 லட்சமாக உயர்த்திக் கொடுக்கப்படும். 10-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியிருந்தால், அவருடைய சம்பளமானது 1 கோடி ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படும். இது அவர் விளையாடிய இன்டர்நேஷனல் ஆட்டங்களுக்குப் பிறகு நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டாக போன வருடம் ஐபிஎல்லில் ஏலத்தில் எடுக்கப்பட்டு அவர் இந்த வருட ஐபிஎல்லுக்கு முன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தால், அவருக்கு அடுத்த இரு வருடங்களுக்கு இந்த உயர்ந்த சம்பளத்தொகையானது உயர்த்தி வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஆனால் இந்த உயர்த்தப்பட்ட சம்பளத் தொகை அணியின் தொகையில் எடுக்கப்படாது. இந்த உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையை பிசிசிஐயே இந்த வீரர்களுக்கு வழங்கும். அணி நிர்வாகம் என்ன ஏலத் தொகைக்கு எடுத்ததோ, அந்த ஏலத்தொகையே மூன்று வருடங்களும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த உயர்ந்த சம்பளம் வாங்கும் இந்திய இளம் வீரர்கள் வேறு அணிக்கு டிரேட் செய்யப்பட்டால், வாங்கிய அணியே மொத்த சம்பளத்தையும் கொடுக்க வேண்டும். முதன் முதலில் ஏலம் எடுத்த அணிக்கு மட்டுமே அவர்கள் ஏலம் எடுத்த தொகையை மட்டும் கொடுக்கும் சலுகை வழங்கப்படும். அந்த வீரரை மற்ற அணி வாங்கினால், இந்த இன்டர்நேஷனல் ஆட்டங்களில் மூலம் அவருக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தொகையையும் சேர்த்து அந்த புதிய அணியே வழங்க வேண்டும்.

இந்நிலையில், இந்திய அணியில் தற்போது இரண்டு இந்திய வீரர்கள் முதன்முதலாக இந்த சம்பள உயர்வை பெறுகின்றனர். இந்த விதிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்ததால், அவருக்கு இந்த வருடம் 50 லட்சமாக சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படும். அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையான 20 லட்சத்திலிருந்து மேற்கொண்டு 30 லட்சத்தை பிசிசிஐ அவருக்கு வழங்கும். அதே போல மற்றொரு இந்திய தொடக்க ஆட்டக்காரரான ராஜத் பட்டிதாரும் இந்த சம்பள உயர்வை பெறுகிறார். பெங்களூர் அணிக்கு ஐபிஎல்லில் விளையாடி வரும் அவருக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்து நேற்றைய போட்டியில் ஆடியதால், அவரும் 50 லட்சம் சம்பளத்தை இந்த வருடத்தில் இருந்து பெறப் போகிறார்.

சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்ததற்கும் சம்பள உயர்வு வழங்கப்படுவது வீரர்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- வெ.அருண்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT