ADVERTISEMENT

குல்தீப்பின் மாயச்சுழலில் பாலோ ஆன் ஆகுமா வங்கதேசம்; இன்று மூன்றாம் நாள் ஆட்டம்

08:34 AM Dec 16, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் சட்டோகிராமில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 404 ரன்களை இந்திய அணி குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களையும் ஸ்ரேயாஸ் 86 ரன்களையும் எடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி தன்னுடைய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாண்டோ இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் வந்த யாசிர் அலியும் 4 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆக வங்கதேச அணி 60 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பின் பேட்டிங் செய்ய வந்த வீரர்களை குல்தீப் யாதவ் வரிசையாக வெளியில் அனுப்ப வங்கதேச அணி இரண்டாம் நாள் முடிவில் 133 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

சிராஜ் மூன்று விக்கெட்களையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 6 ஓவர்களை மட்டுமே வீசிய குல்தீப் யாதவ் 2 மெய்டன்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 22 மாதங்களுக்குப் பின் இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் அசத்தி பேட்டிங்கிலும் 40 ரன்களை எடுத்தார். இது அவரது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

இன்று துவங்கும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி பாலோ ஆனை தவிர்க்க இன்னும் 72 ரன்கள் தேவை. ஆனால் கைவசம் இரண்டு விக்கெட்கள் மட்டுமே உள்ளதால் மிஹைதி ஹாசன் மிராஸ் மற்றும் எபாடாட் ஹூசைன் தடுப்பாட்டத்தை ஆடி பொறுமையாக ரன்களை சேர்க்க வேண்டும். இந்தியாவுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மிராஸ் 83 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT