ADVERTISEMENT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்த நிலைமையா? வரலாறு திரும்புகிறதா?!

01:38 PM Jun 18, 2018 | Anonymous (not verified)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் தரவரிசையில் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, தற்போது அங்கு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலிய அணி, கார்டிஃபில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் 342 ரன்கள் விளாசிய இங்கிலாந்து அணிக்கு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 0 - 2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக ஐ.சி.சி. வெளியிட்டிருக்கும் தரவரிசைப் பட்டியலில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி முதலிடத்தில் இருக்கும் இந்தப் பட்டியலில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. ஆஸ்திரேலிய அணி இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

எப்போதும் முதல் ஐந்து இடங்களில் நீடிக்கும் ஆஸ்திரேலிய அணி, 34 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் ஆறாவது இடத்தில் இருந்தது. ஸ்மித், வார்னர் தடையில் இருக்கும் நிலையில், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஜாஸ் ஹாஜில்வுட் ஆகியோரும் இல்லாதது இந்தத் தொடரில் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியுடன் மோதிய கடைசி ஏழு ஒருநாள் போட்டிகளில் ஆறுமுறை ஆஸ்திரேலிய அணி தோற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடைசியாக அந்த அணி களமிறங்கிய 15 போட்டிகளில் 13 முறை தோற்றிருக்கிறது. உலகை அச்சுறுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியா இது என்ற கேள்வியை அந்த அணியின் தற்போதைய நிலை எழுப்பியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT