ADVERTISEMENT

கோடை வந்தாச்சு... மண்பானைகள் வருமா?  

12:48 PM Mar 07, 2018 | kalaimohan

முன்பெல்லாம் கோடை காலம் வருவதற்கான அறிகுறிகளாக பிப்ரவரி, மார்ச் மாதத்திலிருந்தே தர்பூசணி, கிர்ணி, மோர், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய் போன்றவை விற்கும் கடைகள் சாலையோரம் தோன்றும். அந்த வரிசையில் இருந்த இன்னொரு கோடை கால பொருள் மண்பானைகள். ஆனால், எப்பொழுதிலிருந்து என்று தெரியாமல், மண்பானை விற்கும் கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டன.

ADVERTISEMENT



ஒரு சிலர், மண் பானைகளில் குழாயெல்லாம் வைத்து நவீனப்படுத்தி விற்கிறார்கள். நாம் பெரும்பாலும் பார்ப்பது மண்பானைகள் மட்டும்தான். ஆனால், ஒரு காலத்தில் நமது வாழ்க்கையே மண் பாண்டங்களால் சூழப்பட்டிருந்தது என்பது வியப்பைத் தருகிறது. ஒரு காலத்தில் நாட்டில் பெரிய வர்த்தக பாரம்பரியமாகவும் அன்றாட அவசிய பொருளாகவும் இருந்த இந்த மண்பாண்டங்கள் அறிவியலின் நவீன ஆக்கிரமிப்பால், இன்று கைவினை பொருள் கடைகளில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மனிதனின் அத்தியாவசிய பொருள்களின் இடத்தில் இருந்த மண்பாண்டங்களை இன்று பொங்கல் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற சீசனில் மட்டும் தேடுகிறோம். இந்த மண்பாண்டங்களின் தொன்மையும் பயன்பாடும் மிகவும் பிரமிக்க வைக்கக்கூடியவை.

ADVERTISEMENT

சங்கடை, பானை, சித்திரப்பானை, காய்கறிப்பானை, முட்டி, தோசைக்கல், குளுமை (தானியங்களை பாதுகாக்கும் மட்கலன்), அகல், அடுப்பு, தோண்டி, இரட்டை அடுப்பு, கும்பபானை, கண்பானை, எள்ளெண்ணை சட்டி, உண்டியல், பூச்சாடி, கலையம், மூக்குச்சட்டி, தாழி, கொள்ளிச்சட்டி என மனிதன் பிறப்புமுதல் இறப்பு வரை உள்ள அனைத்தையும் மண்பாண்டங்கள் உள்ளடக்கியுள்ளது. துளி கூட செயற்கை வேதியியல் உட்புகாத ஆரோக்கியமான இந்த மண்பாண்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்பதை விட மறந்துவிட்டோம், மறக்கவைக்கப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.


மண்பாண்ட சமையல், நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தரக்கூடியது. உணவிற்கு தனிச்சுவையை கூட்டக் கூடிய மண்பாண்டங்கள், உணவை விரைவில் கெடாமல் பார்த்துக்கொள்கின்றன. மண்பாண்டத்தில் சமைக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகும், இதில் தயிரை ஊற்றிவைத்தால் எளிதில் புளித்துப் போகாது, மற்றும் தண்ணீரை குளிர்ச்சியாகவும், சுவையாகவும் வைத்துக்கொள்ளும். இதனாலேயே இது ஏழைகளின் குளிர்சாதன பெட்டியாகவும் உள்ளது. மண்பாண்டத்தினால் சமைத்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வரும் வாய்ப்பு குறைவு என மருத்துவ உலகம் நிரூபித்துள்ளது. நம் தாத்தா பாட்டிகள் எழுபது என்பது வயதிலும் ஆரோக்கியமான நடமாட்டத்துடன் இருப்பதை பார்த்திருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் மண்பாண்ட சமையல் முறையே ஆகும். இன்று நான்ஸ்டிக் தவாவில், பிளாஸ்டிக் முட்டையில் ஆம்லேட் போட்டுக்கொண்டிருக்கிறோம். பிறகு ஏன் மனிதனின் வாழ்க்கை 60ல் முடியாது?

குளுமை

மண்பாண்டக் கலையானது வெறும் உணவு தயாரிக்கப் பயன்படும் கொள்கலன்கள் தயாரித்தல் மட்டுமல்ல. இன்றும் நம் ஊர் கோவில்களில் குதிரைசிலை, நாய்சிலை, அம்மன், அய்யனார் சிலைகள் மற்றும் கடம், உண்டியல், விளையாட்டு பொருட்கள் போன்றவை மண்பாண்டக் கலையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். இராமநாதபுரம் முதுகுளத்தூர் வட்டத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்தன. அதில் கொற்றன்-நெடுங்கிள்ளி போன்ற தமிழ் பெயர்கள் பண்டைய தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில மனிதர்கள் இறந்த பிறகு அவர்களது உடலையும் அவர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய பொருட்களையும் தாழி எனும் பெரிய மட்கலனில் போட்டு புதைக்கும் வழக்கம் இருந்து வந்ததற்கான சான்றுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளது. இப்படி சங்க காலத்திலிருந்து மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த இந்த மண்பாண்டங்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்து வருகின்றன.


நவீனமாகிறோம் என்ற பெயரிலும், பயன்பாட்டு வசதிகளின் காரணமாகவும், பல நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கை முறையிலிருந்து நீங்கிவிட்டன. எழுபதுகளில் புகழ் ஃபேஷனாக இருந்த பெல் பாட்டம், மீண்டும் 2000 ஆண்டு சமயத்தில் வந்தது. ஆடை, அலங்காரம் போன்ற விஷயங்களில் பழமையை திரும்பக் கொண்டு வரும் நாம், வாழ்வு முறையில் அதை செய்ய நினைப்பது குறைவு. சமீப காலமாக இயற்கை வாழ்வு முறை குறித்த விழிப்புணர்வினால், செக்கு எண்ணெய், இயற்கை விவசாயம், தானியங்கள், காப்பர் குடங்கள் என்று கவனம் செலுத்துபவர்கள் மண்பாண்டங்களையும் கவனிக்கலாமே..

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT