அடிலெய்டில் வாழும் எரின் (36) - டேவ்(35) இணை டிசம்பர் 2015 ஆம் ஆண்டு கடல்வழி சுற்றுப்பயணம் பற்றிய ஆவணப்படத்தை இணையத்தில் கண்டனர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்துவதும், அந்த ஆரோக்கியமான தாக்கத்தை நம் தினசரி வாழ்க்கை அழிப்பதும் வாடிக்கையான ஒன்று தான். ஆனால் எரின்-டேவ் இணை அன்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தனர். மூன்று குழந்தைகள் கொண்ட இணை எடுத்த அந்த அதிரடி முடிவு "இன்னும் இரண்டு வருடங்களில் ஒரு சிறிய கப்பலை விலைக்கு வாங்கி குழந்தைகளுடன் இரண்டு வருட சுற்றுலா செல்வது" என்பதாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49AF358900000578-0-image-a-51_1519883979362 (1)_1.jpg)
எரின் அரசு பணியிலும், டேவ் விமானத்துறையில் வல்லுநராகவும் பணியில் இருந்தனர். "ஞாயிறு மட்டுமே வேலை தொடர்பான எந்தவித சிந்தனையும் இன்றி மகிழ்ச்சியுடன் உள்ளோம். ஒரு நாள் கூத்துக்காக வாரம் ஆறு நாட்கள் இயந்திர வாழ்க்கையில் சிக்கித்தவிக்கிறோம்" என நாம் அனைவரும் கடந்து போகும் சலிப்பே இவர்களை அந்த சாகசத்தை நோக்கி தள்ளியது.மாத சம்பளம், மூன்று குழந்தைகள் (8,7 மற்றும் 4 வயதில்), ஒரு சொந்த வீடு என்ற சராசரி வாழ்க்கையில் இருந்து இரண்டு வருட கப்பல் பயணத்திற்கான திட்டம் தயாரானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49AF29DE00000578-0-image-a-66_1519884174854_1.jpg)
ஆஸ்திரேலியா அரசு இலவச மருத்துவ வசதிகளை தரமாக அளித்தாலும் அதைவிட கவர்ச்சியாக இருக்கும் தனியார் மருத்துவ வசதிகள் மூலம் பயனடைய மாத காப்பீட்டுத் தொகை கட்டுவது வழக்கம். முதற்கட்டமாக அதை நீக்கினர். குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து இலவச அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினர். வீட்டில் இருந்த ஒரு காலி அறையில் சர்வதேச மாணவர்களை வாடகைக்கு குடியமர்த்தினர். அன்றிலிருந்து எதை வாங்கினாலும் தங்களது பயணத்தின் தேவையை முன்வைத்தே வாங்கினர் .
எரினின் தந்தையிடம் கப்பலை முறையாக இயக்க பயிற்சி பெற்றனர். நடுக்கடலில் வீசும் சூறாவளி போன்ற பேராபத்துக்களை சமாளிக்க கப்பல் போக்குவரத்துக்கு சம்பந்தமான பாதுகாப்பு வகுப்புகளை கற்றுத் தேர்ந்தனர். இப்படி முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருந்த டேவும்,எரினும் இரண்டு வருட நெடிய பயணத்திற்கு எந்த மாதிரி கப்பலை வாங்குவது என்ற பெருங்குழப்பத்தில் மூழ்கினர். 10 வருடமாக உலகத்தை சுற்றிய ஒரு குடும்பத்திடம் தங்கள் கேள்விகளுக்கு விடைகளை பெற்று, கரிபியக் கடல் பகுதியில் உள்ள கிரெனடா என்னும் தீவில் கப்பலை வாங்க முடிவு செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49AF29F700000578-0-image-a-45_1519883879316_1.jpg)
இறுதியாக தங்களது மகிழுந்துகளையும் விற்று, வீட்டை அடமானம் வைத்து ஒரு கணிசமான தொகையை தங்கள் சேமிப்புடன் சேர்த்துள்ளனர். இரண்டு வருடம் ஊதியம் இல்லாமல் ஊரைச் சுற்ற போவதால் வீட்டின் மாத தவணையை சரிகட்ட வீட்டையும் வாடகைக்கு விடவும் தவறவில்லை. திட்டமிட்டதில் இருந்து இரண்டு வருடம் இரண்டு மாதம்.. சேர்ந்தது 43 லட்சம். குழந்தைகள் படிப்பு, தங்களது வேலை, சராசரி வாழ்க்கை என அனைத்திற்கும் இரண்டு வருட விடுமுறை விடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவை விட்டு எரின்-டேவ் தங்களது மூன்று குழந்தைகளுடன் கிரெனடா தீவிற்கு பறந்துள்ளனர். சில காலம் கப்பலே இனி தங்கள் இல்லம் என்பதால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கப்பலை மாற்றி அமைத்து வருகிறார் டேவ்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49AF281A00000578-0-image-a-59_1519884107843_1.jpg)
"நாங்கள் 2015ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் போது, உலகக் கடல்களை கடக்க திட்டமிட்டோம். கடுமையான உழைப்பின் விளைவாக இன்னும் இரண்டு வாரங்களில் பயணம் தொடங்கயிருக்கிறது. உலக வரைபடத்தில் இடதோரம் விரிந்து கிடக்கும் கரிபியக் கடலில் தொடங்கி, ஐரோப்பா ஆப்பிரிக்கா கண்டங்களுக்கு இடையே உள்ள மத்திய தரைக்கடலை ஊடுருவி, ஆஸ்திரேலியாவை அடையும் இலக்கோடு உள்ளோம். எனினும் கடல் பயணங்கள் வானிலையை பொறுத்ததே. கடலும்,காற்றும் எங்களை எங்கு இழுத்துச் செல்லவிருக்கிறது என்று தெரியவில்லை. பயண முடிவு எப்படி இருப்பினும் எங்கள் கனவை நனவாக்க வானமே வளைந்து கொடுத்தது போல் உணர்கிறோம்" என்று நெகிழ்ந்துள்ளார் எரின்.
இதயத்தைத் தொடரும் மனிதர்கள் கனவுகளை எட்ட வானமே வளையும் போது, கடல் மட்டும் தாங்காதா என்ன?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)