ADVERTISEMENT

அழித்துவிட்டு அருமையை உணர்ந்த சீனா! - சிட்டுக்குருவியின் கதை  

09:17 AM Mar 20, 2018 | raja@nakkheeran.in

மார்ச் 20 – உலக சிட்டுக்குருவிகள் தினம்

ADVERTISEMENT

வீட்டுக்குருவி, ஊர்க்குருவி என அழைக்கப்பட்ட சிட்டுக்குருவி இன்று அரிய வகை குருவியாக மறுவி வருகிறது. உலகளவில் பல நாடுகளில் வாழ்ந்த சிட்டுக்குருவி இனம் இன்று அரிய வகை பறவையினமாகி வருகிறது என பறவையியல் அறிஞர்கள் கவலையோடு உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT



சிட்டுக்குருவிகள் காடுகளில் பெரும்பாலும் வாழாது. மனிதர்களோடு மனிதராகத்தான் வாழும். மனிதனின் வாழ்க்கை இயல்பை போல அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளும். அதன் ஆயுள்காலம் 13 ஆண்டு காலமாகும். வைக்கோலால் தான் அது தனது வீட்டை கட்டும். சூரிய உதயத்துக்கு முன்பே தனது கீச் குரல்களால் வீட்டில் உள்ளவர்களை எழுப்பும். அதே போல் சூரியன் மேற்கே மறையும்போது தன் கூட்டுக்கு சிட்டுக்குருவி வந்துவிடும். இந்தியாவில் டெல்லி அரசின் மாநில பறவையிது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டில் ஒரு அங்கத்தினராய் சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும். கீச், கீச் என்கிற அதன் சத்தமே இனிமையானது. அந்த சத்தத்தை இன்றைய தலைமுறை கேட்காமலே வளர்கிறது. அதுமட்டுமல்ல விவசாயிகளின் நண்பனாகவும் இருந்தது சிட்டுக்குருவி. வயல்வெளிகளில் பயிர்களில் உள்ள பூச்சிகளே அதன் உணவுகளாக இருந்தன. அந்த சிட்டுக்குருவி இனம் தற்போது உலகளவில் குறைந்துவிட்டது.

அந்த இனம் அழிவதற்குக் காரணம், ஜன்னல் வைக்காத வீடுகள், கான்கிரீட் கட்டிடங்கள், நிலங்களில் ரசாயனம் தெளிப்பது, டெக்னாலஜி வளர்ச்சி போன்றவை. இதனால் வெகுவாக அழிந்துவிட்ட அந்த இனத்தை காக்க வேண்டும் என பறவையியல் அறிஞர்கள் ஒன்று கூடி சிட்டுக்குருவிகளுக்காக ஒரு தினத்தை உருவாக்க வேண்டுமென விவாதித்தார்கள்.

உலக அளவில் பிரபலமான சுற்றுச்சூழல் ஆர்வலரான முகமது திலாவர் என்பவர் தான் சிட்டுக்குருவி இனத்தை காக்க விழிப்புணர்வு பணியில் குதித்ததோடு, சிட்டுக்குருவியை வளர்க்க பெரிய அளவில் முயற்சி எடுத்தார். சிட்டுக்குருவி அழிந்து வரும் இனம் என ஐ.நாவை அறிவிக்க வைத்ததில் முக்கிய பங்கு இவருடையது. 2009ல் அறிஞர்கள் ஒன்றுக்கூடி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ந்தேதி சிட்டுக்குருவி தினமாக அறிவித்து சிட்டுக்குருவியை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்தார்கள். அதன்படி 2010ல் இருந்து செய்தும் வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு பணியில் அரசு 98 சதவிதம் கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு கவனிக்கதக்கது.



சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ, விவசாய நிலங்களை அழிக்கும் பறவை இனங்கள் எதுயென கண்டறிந்து கொன்றுவிடுங்கள் என தனது அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர் போட்ட உத்தரவால் சீனாவில் அதிகம் பாதிக்கப்பட்டது சிட்டுக்குருவி. பின், காலம் கடந்து அது தவறென தெரிந்து, சிட்டுக்குருவி விவசாயிகளின் நண்பன் என்பதை உணர்ந்து அதனை அழிப்பதை சீனா நிறுத்தியது.

உலகளவில் ஏற்கனவே பறவையினங்களில் மைனா, பருந்து, ஆந்தை, மயில் போன்றவை அழிந்து வரும் பறவையினங்கள் பட்டியலில் உள்ளது. தற்போது சிட்டுக்குருவியையும் இடம் பிடிக்க வைத்துள்ளோம்.

ஏய் குருவி, சிட்டுக்குருவி என்கிற பாடல் வழியாகத்தான் வருங்கால தலைமுறை சிட்டுக்குருவியை கேட்டும், புகைப்படமாக பார்த்து வளர வேண்டிய கட்டாயத்தில் நாம் இந்த உலகை மாற்றியுள்ளோம் என்பதை நினைத்து வெட்கப்படவேண்டும். சிட்டுக்குருவி இனத்தை பெருக்க சில தனியார் அமைப்புகள் உலகம் முழுவதும் அதனை வளர்க்கவும், பாதுகாக்கும் பணியில் கிராம மக்களை ஈடுப்படுத்தி வருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. முடிந்தால் நாமும் சிட்டுக்குருவி நம் வீட்டு முற்றத்தில் கூடு கட்டினால் அதனை அகற்றாமல் வாழ வழிச்செய்வோம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT